murali83bdu@gmail.com. Powered by Blogger.

Wednesday, December 1, 2010

ஆரிய ராமனும் வைதீகச் சோழனும்

ஆரிய ராமனும் வைதீகச் சோழனும்
ஸ்டாலின் ராஜாங்கம்

‘அயோத்தியின் சர்ச்சைக்குரிய நிலப்பகுதியை அதற்கு முழுமையான உரிமை கோரிய இரு இந்து அமைப்புகளுக்கும் ஒரு இஸ்லாமிய அமைப்புக்கும் மூன்று பகுதிகளாகப் பங்கிட்டு வழங்க வேண்டுமெனத் தீர்ப்பளித்திருக்கிறது அலகாபாத் உயர் நீதிமன்றம். பல பத்தாண்டுக் காலமாக நாட்டின் இறையாண்மைக்கும் மதநல்லிணக்கத்துக்கும் ஊறுவிளைக்கும் சிக்கல் தொடர்பான வழக்கு என்பதால் பலதரப்பினரும் பதற்றத்துடன் எதிர்நோக்கியிருந்தனர். செப்டம்பர் 30ஆம் தேதி அளிக்கப்பட்ட தீர்ப்புமீது கருத்துத் தெரிவித்த பல்வேறு கட்சிகளின் பிரதிநிதிகளும் தம் ஓட்டுவங்கிகளுக்குப் பாதிப்பு ஏற்படாத வகையிலும் நீதிமன்ற அவமதிப்பு என்னும் குற்றச்சாட்டு எழுந்துவிடாதபடியும் மிக எச்சரிக்கையாக வாக்கியங்களைக் கையாண்டனர். தீர்ப்புமீது அதிருப்திகொண்டிருக்கும் தரப்பினரது உணர்வுகளைக் கணக்கிலெடுத்துக்கொண்ட ‘மதச்சார்பற்ற’ கட்சிகள் தீர்ப்பில் மேல்முறையீட்டுக்கு வழிவகுக்கப்பட்டிருப்பதைச் சுட்டிக்காட்டி அவர்களை அமைதிப்படுத்த முயன்றுகொண்டிருக்கின்றன. அதிருப்தியாளர்களுக்கு மேல்முறையீடு செய்வதற்கு இத்தீர்ப்பு வாய்ப்பளித்திருக்கிறது என்பது உண்மை தான். ஆனால் கவலையளிக்கும் வேறுபல கூறுகள் இத்தீர்ப்பினுள் புதைந்துள்ளன. வால்மீகியின் புகழ் பெற்ற இதிகாச நாயகனான ராமன் பிறந்தது அயோத்தியின் சர்ச்சைக்குரிய அந்த இடத்தில்தான் என்னும் இந்து அமைப்புகளின் நம்பிக்கையை ஏற்றுக்கொள்வதற்கு நீதிமன்றத்துக்கு எவ்வகையான தொல்லியல், வரலாற்றுச் சான்றுகளும் தேவைப்படவில்லை. வருங்காலங்களில் நீதிமன்ற நடவடிக்கைகளை நேரடியாகவும் அரசியல் போக்கை மறைமுகமாகவும் பாதிக்கக்கூடியது இது. நீதிமன்றத் தீர்ப்புகள் சட்டரீதியில் ஏற்றுக்கொள்ளப்பட்ட திட்டவட்டமான ஆதாரங்களை அடிப்படையாகக் கொண்டவை என்னும் பொதுவான நம்பிக்கையையும் இத்தீர்ப்பு தகர்த்திருக்கிறது.

‘ஜனநாயகவாதி’களும் மதச்சார்பின்மை குறித்துத் தொடர்ந்து பேசிவரும் அரசியல்வாதிகளும் வாயை இறுகப்பொத்திக்கொண்டிருக்கையில் வரலாற்றாசிரியர்கள் சிலரும் அறிவுலகவாதிகளுமே இத்தீர்ப்புக்கு எதிர்வினையாற்றியிருக்கின்றனர். குழப்பமான, முன் தீர்மானங்கள்கொண்ட இந்த எதிர்வினைகள் தீர்ப்பின் அநீதி குறித்த விவாதங்களை எழுப்புவதைவிட அதை அப்படியே ஏற்றுக்கொள்ளச் செய்வதை நோக்கமாகக் கொண்டவை.

ஆனால் தீர்ப்பில் ராமனின் பிறப்பு குறித்து நீதிபதிகள் தெரிவித்துள்ள கருத்துகளுக்குத் தமிழக அரசியல் தளத்திலிருந்து எழுந்துள்ள எதிர்வினையொன்று குறிப்பிடத்தக்கது. தீர்ப்பு வெளியான அன்று தான் வெளியிட்ட அறிக்கையொன்றில் ‘இருதரப்பி’னரும் திருப்தி அடையக்கூடிய தீர்ப்பு எனவும் திருப்தியடையாதவர்கள் மேல்முறையீடு செய்யத் தீர்ப்பு வழிவகுத்திருப்பது வரவேற்கத்தக்கது எனவும் சொல்லியிருந்த முதல்வர் கருணாநிதி அதோடு அயோத்திப் பிரச்சினையைக் கை கழுவிவிட விரும்பாததாலோ என்னவோ இரண்டு மூன்று நாள்களுக்குப் பிறகு அக்டோபர் நான்காம் தேதி வெளியிட்டிருந்த மற்றொரு அறிக்கையில் “17 லட்சம் ஆண்டுகளுக்கு முன் ராமர் பிறந்ததாகக் கூறப்படும் இடத்தை உறுதிப்படுத்த முடிகிறது. ஆனால் 1000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த ராஜராஜனின் கல்லறையையோ நினைவுத்தூண் அமைந்த இடத்தையோ அறிய முடியவில்லையே” என வேதனையோடு குறிப்பிட்டிருந்தார். அயோத்தி குறித்த வழக்கை விசாரித்த மூன்று நீதிபதிகளில் ஒருவர் தெரிவித்த கருத்துகளை நேரடியாக விமர்சனத்துக்குட்படுத்த விரும்பாத கருணாநிதி மேற்கண்ட அறிக்கையில் அதைப் பூடகமாகச் செய்ய முயன்றிருக்கிறார். ஒரு வகையில் கருணாநிதியின் இந்தத் ‘தார்மீகக் கோபம்’ மதச்சார்பற்ற அவரது ஆதரவு அறிவுஜீவிகளுக்கு மகிழ்ச்சி அளித்திருக்கும். அவர் மீதான பிற அரசியல் விமர்சனங்களைப் புறந்தள்ளி இன்னும் சிலகாலம் அவரைக் கொண்டாடுவதற்கு அவருடைய ஆதரவாளர்களுக்கு இது உதவக்கூடும்.

தீர்க்கமான சமூகவியல் பார்வையோ நவீன அரசியலின் பன்முகக்கூறுகளை எதிர்கொள்வதற்கான கோட்பாட்டு வலிமையோ அற்ற, அரசியல்நீக்கம் செய்யப்பட்ட திமுக தொண்டர்களிடம் திராவிட இயக்கத்தின் எஞ்சியிருக்கும் ஒரே முன்னோடி என்னும் பாவனையோடு இத்தகு உள்ளீடற்ற கருத்துகளைப் பரப்பி வருவது கருணாநிதிக்கு வாடிக்கை. அவருடைய நோக்கம் அதைத் தாண்டியும் விரிகிறது. ராமனின் பிறப்பு குறித்துப் பேச முற்பட்ட கருணாநிதி ராமனை ஆரிய நாகரிகத்தின் அடையாளமாகவும் ஆரிய நாகரிகம் அறிவியல் ஆதாரங்களற்ற பகுத்தறிவுக்குப் புறம்பான மூடநம்பிக்கைகளை வளர்த்தெடுப்பதிலேயே முனைப்பாக இருப்பதாகவும் குறிப்பிடுகிறார். பெரியாரியத்திலிருந்து ‘வடவர்-ஆரியர்’ என்னும் அம்சத்தை மட்டுமே பிரித்தெடுத்து அதைத் தன் கட்சியின் அரசியல் ஆதாயத்திற்குப் பயன்படுத்திவரும் கருணாநிதியிடமிருந்து இது போன்ற அறிக்கை வெளிவருவது வியப்பூட்டக்கூடியதல்ல. அவரது குடும்பத் தொலைக் காட்சிகளில் மூடநம்பிக்கைகளைப் பரப்பிவரும் ராமாயணம் போன்ற தொடர்கள் ஒளிபரப்பப்படுவதைக் கண்டுகொள்ளாத கருணாநிதி தன் அறிக்கையில் ராமன் என்னும் ஆரிய அடையாளத்திற்கு எதிராக ராஜராஜன் என்னும் திராவிடத் தமிழ் அடையாளத்தை முன்னிறுத்த முயல்கிறார். அரசியல்ரீதியாக நெருக்கடியைச் சந்திக்க நேரும் ஒவ்வொரு தருணத்திலும் திராவிட நாகரிகத்தை ஆரிய நாகரிகம் புறந்தள்ள முயல்கிறது என அறிக்கை வெளியிடுவதன் மூலமும் தன் சொந்த நெருக்கடிகளைத் தமிழ் இனத்தின் நெருக்கடியாகச் சித்தரிப்பதன் மூலமும் தன் விமர்சகர்களைத் தந்திரமாக மவுனமாக்கிவரும் கருணாநிதி அலகாபாத் நீதிமன்றம் ராமனின் பிறப்பை உறுதிசெய்துள்ளதையும் தமிழ் அடையாளமாகத் தான் போற்றிப் புகழும் ராஜராஜனின் கல்லறை கண்டு பிடிக்கப்படாததையும் (இது யாருடைய குற்றமோ?) எதிரெதிராக நிறுத்தி முன்னெடுக்க விரும்பும் நிகழ்கால அரசியல் பரிசீலிக்கப்பட வேண்டிய ஒன்று.

அண்மையில் நாகர்கோவிலில் நடைபெற்ற திமுக முப்பெரும் விழாவில் பேசும்போது ‘லெமூரியா’ என்னும் தமிழர்களின் கடல்கொண்ட கண்டம் குறித்து ஆற்றிய உரையையும் தஞ்சைப் பெரிய கோயிலின் ஆயிரமாவது ஆண்டுப் பெருவிழாவில் ராஜராஜன் நிறுவிய தமிழர்களின் கலை, பண்பாட்டுப் பெருமிதங்கள் குறித்துச் சொன்ன கருத்துகளையும் நினைவூட்டித் திராவிட நாகரிகத்தை ‘மீட்பவராக’த் தன்னை இந்த அறிக்கையின் வாயிலாக அடையாளப்படுத்திக் கொண்டுள்ளார் கருணாநிதி.

திராவிட இயக்கத்தினரால் அடையாளப்படுத்தப்படும் ஆரியம் என்பது நால்வர்ணக் கோட்பாடு, பிராமணிய மேலாண்மை, மூட நம்பிக்கை சார்ந்த பண்பாட்டுக் கூறுகளின் தொகுப்பு. இதன் எதிர் நிலையாக அடையாளப்படுத்தப்படுவதே சாதி எதிர்ப்பு, மூட நம்பிக்கை எதிர்ப்பு, சுயமரியாதை ஆகிய கூறுகளால் கட்டமைக்கப்பட்ட திராவிடப் பண்பாடு. பிராமணர்-பிராமணர் அல்லாதார் என்னும் எதிர்வைக் கட்டமைப்பதே இத்தகு அடையாளப்படுத்தல்களின் உள்ளடக்கம். எல்லாவகையான சமூக நெருக்கடிகளும் அந்நெருக்கடிகளுக்குக் காரணமான முரண்களும் ஆரியத்தின் விளைவுகள், மற்றவை கற்பனையானவை, அல்லது முக்கியத்துவமற்றவை. எனவே அவற்றுக்கான தீர்வுகளும் ஆரிய எதிர்ப்பை மையப்படுத்தியவை. இத்தகு அடையாளங்களையே திராவிடக் கட்சிகளும் அவற்றின் ஆதரவு அறிவுஜீவிகளும் மீண்டும் மீண்டும் கட்டமைத்து வருகின்றனர்.

ஆனால் சமூக முரண்பாடுகளை அடையாளம் காண்பதற்கு இவ்வெதிர்வு மட்டுமே போதுமானது அல்ல. மேலும் இத்தகு எதிர்வுக்கு இணையான வேறுபல எதிர்வுகளின் இருப்பை மறைப்பதற்காகவே இவ்வடையாளம் திராவிட இயக்கங்களால் தொடர்ந்து வலியுறுத்தப்படுகிறது. ஆனால் பிராமணர் அல்லாதார் என்னும் அடையாளம் பிராமணியத்தை மறுத்ததாகவும் சாதியத்தை விலக்கியதாகவும் இருந்திருக்கவில்லை என்பது பல்வேறு ஆய்வுகள் மூலம் நிறுவப்பட்டுள்ளது. ராமன் என்னும் ஆரிய அடையாளத்துக்கு எதிராகத் திராவிடத் தமிழ் அடையாளமாகக் கட்டமைக்கப்படும் ராஜராஜனைப் பற்றிய பரிசீலனைகள் இதை இன்னும் விரிவாகப் புரிந்துகொள்வதற்கு உதவும்.

ராஜராஜன் ஆரியத்தின் தமிழ்முகமாகவும் வைதீகத்தை அரசியல் மயமாக்கி அதன் ஆதிக்கத்தைப் பரப்பியவனாகவும் வரலாற்றாய்வாளர்களால் அடையாளப்படுத்தப்பட்டுள்ளதை மறைப்பதற்கான அரசியல் தந்திரம் இது. ராமன் என்னும் இந்துப் பேரடையாளத்தில் இந்தியாவின் பன்முக அடையாளங்கள் மறுக்கப்பட்டு சாதி உள்ளிட்ட பாகுபாடுகள் மறைக்கப்பட்டுவிடுவதைப் போலவே, ராஜராஜன் என்னும் தமிழ்ப் பேரடையாளத்தால் வைதீகமும் சாதியப் பாகுபாடும் பரவியது என்னும் வரலாற்று உண்மையும் மறைக்கப்பட்டுவிடுகிறது.

கடந்த சில பத்தாண்டுகளில் அரசியல் தளத்திலும் வரலாறு, தொல்லியல், போன்ற துறைகளிலும் ஏற்பட்டுள்ள வளர்ச்சியும் கண்டுபிடிப்புகளும் கிடைக்கப்பெற்றுள்ள சான்றாதாரங்களும் தவிரக் கடந்த இருபதாண்டுகளுக்கும் மேற்பட்ட கால அளவில் தமிழ்ப் பண்பாட்டுத் தளத்தில் மார்க்சிய, தலித்திய, விளிம்புநிலைக் கருத்தியல்கள் ஏற்படுத்திய தாக்கங்களும் தமிழ் அடையாளம், தமிழக வரலாறு குறித்த புதிய கண்ணோட்டத்தின் அவசியத்தை வலியுறுத்துகின்றன. பிற்காலச் சோழர்காலம் பற்றிய புனைவுகள் வெளிறத் தொடங்கியிருக்கின்றன இத்தகு குறுக்கீடுகளின் முக்கியமான விளைவு தமிழ்ச் சமூகத்தின் நெருக்கடிகளுக்கான வேர்கள் இந்தப் பெருமிதங்களுக்குள் புதைந்திருப்பதைக் கண்டறிந்ததுதான்.

பிற்காலச் சோழர் காலம் தமிழக வரலாற்றின் முக்கியத்துவமுடைய காலகட்டம் எனக் கருதப்பட்டது. சோழர் காலம் பற்றிய தொடக்கக் கால நூல்கள் சமய, சாதி அபிமானம் கொண்டவர்களால் எழுதப்பட்டவை. 19ஆம் நூற்றாண்டில் ஆங்கில அரசின் நிர்வாகத்தோடு தொடர்புகொண்டிருந்த சிலரால் சோழர் காலக் கிராமங்கள் தன்னிறைவு பெற்ற, இறுக்கமான சாதியமைப்பு இல்லாதவை என்னும் புனைவு கட்டமைக்கப்பட்டது. 1903இல் பிராமணஆதிக்கம் மேலோங்கியிருந்த உத்திரமேரூரில் கண்டுபிடிக்கப்பட்ட கல்வெட்டுகளில் காணப்பட்ட குடவோலை முறைபற்றிய குறிப்புகளை ஆதாரங் காட்டிச் சோழர் காலத்தில் சனநாயகம் தழைத்திருந்ததாக ஒரு புனைவு கட்டமைக்கப்பட்டது. தமிழ் அடையாளத்தைக் கட்டமைக்க முயன்றுகொண்டிருந்த, தேசிய உணர்வுகொண்ட வரலாற்று ஆசிரியர்கள் சிலருக்குச் சோழர் காலம் குறித்த பொற்காலப் பெருமிதத்தைக் கட்டி எழுப்ப இந்தப் புனைவு உறுதுணையாயிருந்தது.

1960களின் இறுதியில் திராவிட இயக்கம் ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்றியிருந்த தொடக்கக் காலங்களிலேயே சோழர் காலம் பற்றிய விரிவான ஆய்வுகள் வெளிவரத் தொடங்கின. பர்ட்டன் ஸ்டெயின் எழுதிய Peasant state and society in South India என்னும் புத்தகம் தவிர நபோரு கராஷிமா, ஒய். சுப்பராயலு, சுரேஷ் பி. பிள்ளை ஆகியோரது சோழர் காலம் குறித்த கருத்துகளும் இந்த வகையில் குறிப்பிடத்தக்கவை. ஒய். சுப்பராயலுவின் Studies in Chola History, The Political Geography of the Chola Country ஆகிய இரண்டு நூல்களுங்கூடச் சோழர் காலத்தைப் பற்றியவையே.

1960களிலேயே சோழர் காலத்தை வர்க்கக் கண்ணோட்டத்திலிருந்து அணுகி சோழர் ஆட்சியில் அறப்போர்கள் என்னும் நூலை நா. வான மாமலை எழுதினார். ஆ. சிவசுப்பிர மணியன், கோ. கேசவன் உள்ளிட்ட இடதுசாரி ஆய்வாளர்கள் இந்தப் பார்வையை வளர்த்தெடுத்தனர். மே. து. ராசுகுமார் சோழர்காலப் பொருளியல் என்னும் விரிவான ஆய்வு நூலை எழுதினார். இத்தகு ஆய்வுகளின் தொடர்ச்சி பிந்தைய ஆய்வு வட்டங்களிலும் அரசியல் விமர்சனக் கண்ணோட்டத்திலும் பிரதிபலித்தது. திமுகவால் ராஜராஜன் விதந்தோததப்பட்டபோது அதை விமர்சித்து எழுதிய இன்குலாப்பின் புகழ்பெற்ற கவிதையும் அரசியல் அமைப்புகளின் எதிர்ப்புங்கூட இப்போக்கின் தொடர்ச்சிகள்தாம்.

மேற்கண்ட ஆய்வுப் போக்குகளில் சிற்சில வேறுபாடுகள் இருப்பினும், மொத்தத்தில் சோழர் காலம் பற்றி முன்வைக்கப்படும் செய்திகளில் ஒத்த அம்சங்கள் உள்ளன. பிராமண மேலாதிக்கம், கோயில் சார்ந்த நிலவுடமை, இறுக்கமான சாதியப் பாகுபாடு, ஆகிய கூறுகள் வளர்த்தெடுக்கப்பட்டு நிலைநிறுத்தப்பட்டது சோழர்களின் பொற்காலத்தில்தான். கோயில் நிறுவனமாக்கப்பட்டதன் விளைவாகப் பிராமணர்களின் அதிகாரம் முதன்மைப்படுத்தப்பட்டது என்கிறார் ஒய். சுப்பராயலு. இதன் தொடர்ச்சியாகவே வைதீக மயமாக்கமும் வடமொழிமயமாக்கமும் செல்வாக்குப் பெற்றதாகத் தெரிகிறது. ராஜராஜன் ஆட்சியில் ஆகமநியதி சாராத ஆலயங்கள் மங்க ஆரம்பித்தன என்றும் துல்லியமான ஆகமநெறிகள் பின்பற்றப்பட்டதும் அவன் காலத்தில்தான் என்றும் சுரேஷ் பி. பிள்ளை கூறுகிறார் (அக்டோபர் 2010 உயிர் எழுத்து). உண்மையில் சோழர்களின் கல்வெட்டுகள் யாவுமே ஆகமவிதிப்படி அமைக்கப்பட்டுள்ள ஆலயங்களில் தான் இடம்பெற்றிருக்கின்றன என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. ராஜராஜன் காலத்திற்குப் பின் கட்டப்பட்ட எல்லாச் சோழ ஆலயங்களுக்கும் ஈச்வரம் என்னும் பெயர் வழங்கப்பட்டது. வழிபாட்டிற்காக ஆலயத்திற்குள் நாயன்மார் சிலைகள் வைக்கப்பட்ட முதல் கோயில் ராஜராஜன் தன்பெயரில் எழுப்பிய ராஜராஜேச்வரமாக இருக்கலாம். ஆரியமயமாக்கப்பட்ட சமயமும் வேத பிராமணர்கள் வசித்த சதுர்வேதிமங்கலம் எனப்படும் கிராமங்களும் சோழ நாட்டில்தான் அதிகமாக இருந்தன. முன்னர் புழக்கத்தில் இல்லாத சமஸ்கிருதப் பெயர்களைச் சதுர்வேதிமங்கலங்களுக்குச் சூட்டுவதும் ராஜராஜன் காலத்தில் வழக்கமாக இருந்தது என்பன போன்ற பல தகவல்களை நிரல்படத் தொகுத்திருக்கிறார் சுரேஷ் பி. பிள்ளை.

தமிழ்ச் சமூகத்தின் தாழ்வுகளுக்கு முக்கியக் காரணியான சாதி உருவாக்கம் சோழர் காலத்திலேயே தொடங்கப்பட்டதாக ஆய்வுகள் கூறுகின்றன. சமண, பௌத்த சமயங்களை வெற்றிகொண்ட சைவம் அரச சமயமாக மாறிக் கோயில்களையும் கோயில் சார்ந்த நிலவுடைமையையும் கைக்கொண்டு பிராமணர்களையும் வேளாளர்களையும் உயர் சாதிகளாக்கி உழைக்கும் பிரிவினரையும் சேவைச் சாதியினரையும் தாழ்ந்த சாதிகளாக்கியது. சாதி வலுவடைந்தது சோழர் காலமே என்பதை ஏற்கும் ஒய். சுப்பராயலு “கல்வெட்டுகளில் சாதி முதல்நிலையில் தென்படுவது ராஜராஜன் காலத்தில்தான்” என்கிறார். சாதிகளுக்குரிய குடியிருப்பும் தொழில் பாகுபாடும் தூரப்படுத்தப்படுதலும் விலக்குதலும் துல்லியமாக்கப்பட்டு அதை நியாயப்படுத்துவதற்கான வைதீக ஆசியும் இலக்கியப் பிரதிகளும் இக்காலத்தில் உருவாக்கப்பட்டன. சோழர் காலத்தின் கூலி அடிமைகள் குறித்து நா. வான மாமலை விரிவாக எழுதியுள்ளார். ராஜராஜன் 400 தளிச்சேரி பெண்களை (நடன மங்கையரை) ராஜ ராஜேச்வரத்தில் குடியமர்த்தினான் என்பதும் இவ்விடத்தில் குறிப்பிடத்தக்கதாகும்.

இராஜராஜன் (985-1014) தன் தலைநகராகிய தஞ்சாவூரில் நான்கே ஆண்டுகளில் ராஜராஜேச்வரம் என்னும் கோயிலைக் கட்டிமுடித்து கி.பி.1010இல் குடமுழுக்கு நடத்தினான் எனக் கூறப்படுகிறது. உண்மையில் தஞ்சைப் பெரிய கோயில் கட்டப்பட்டது குறித்தும் அதன் காலம் குறித்தும் நிலவும் முரண்பட்ட செய்திகளைப் பார்க்கும்போது குடமுழுக்கு நடந்ததாகக் கூறப்படும் கி.பி. 1010ஆம் ஆண்டின் நம்பகத்தன்மை குறித்துக் கேள்விகள் எழுகின்றன.

2004 அக்டோபர் 10ஆம் தேதியிட்ட இந்து நாளிதழில் ‘தஞ்சைக் கோவிலில் பௌத்த சிற்பங்கள்’ என்னும் தலைப்பில் வெளிவந்த கட்டுரையில் தியோடர் பாஸ்கரன் அவை தொடர்பாகச் சில சந்தேகங்களை எழுப்பியுள்ளார். சைவத் திருத்தலமான தஞ்சைப் பெரிய கோயிலில் பௌத்தச் சிற்பங்கள் இடம்பெற்றது எப்படி? சைவப் புராணங்களிலிருந்து பல காட்சிகளைக் காட்டும் சிற்பங்கள் கொண்ட இந்தக் கோயிலில் புத்தரைச் சித்தரிக்கும் சிற்பங்கள் இரண்டு இடங்களில் இருப்பது ஏன் எனும் கேள்விகளை எழுப்பி பெரிய கோவில் மூலக் கல்வெட்டுகளை ஆராய்ந்தவரும் Introduction to the Study of Temple Art (1976) என்னும் கோயிற்கலை குறித்த நூலை எழுதியவருமான சுரேஷ் பிள்ளை (1934 - 1998) இச்சிற்பங்கள் பற்றி ஆராய்ந்துள்ளார் என்பதைச் சுட்டிக்காட்டுகிறார். கோயில் சிற்பங்களைக் குறியீடுகளாகக் கருதி விளக்கிய சுரேஷ் பிள்ளை தஞ்சைக் கோயிலின் புத்தர் சிற்பங்கள் பல முக்கியமான புதிர்களை உள்ளடக்கியிருப்பதாகக் கருதுகிறார். கருவறைக்குச் செல்லும் வழியில் தெற்கிலும் வடக்கிலுமாகச் செதுக்கப்பட்டுள்ள மூன்று சிற்பங்கள் மூலம் ராஜராஜேச்வரத்திற்கு முன் தஞ்சையில் புத்தரின் நிலை ஓங்கியிருந்ததாகவும் சிவன் கோயில் நிர்மாணிக்கப்படும் முன்னர் அங்கு புத்தரின் கோயில் இருந்திருக்கலாம் எனவும் கருதுகிறார்.

இன்றைய தஞ்சைக் கோயில் ராஜராஜனால் முழுமையாகக் கட்டப்பட்டதல்ல. விமானம், அதன் அடிப்பகுதி, முன்மண்டபத்தின் அடிப்பகுதி ஆகியவை மட்டுமே ராஜராஜனால் கட்டப்பட்டவை. விமானப் பகுதியினுள் வரிசையாகச் செதுக்கப்பட்டுள்ள 108 பரத நாட்டிய முத்திரைகளுள் 20 ராஜராஜன் காலத்தில் செதுக்கப்படவில்லை. கட்டடப் பணி பாதியிலேயே கைவிடப்பட்டு நாயக்க மன்னர்கள் காலத்தில்தான் முடிக்கப்பட்டது. ஆக ராஜராஜன் கோயில் கட்டுவதற்கு முன்பு அந்த இடத்தில் வேறு கோயில் இருந்துள்ளது. இதோடு தொடர்புடைய மற்றுமொரு சந்தேகத்தையும் சுரேஷ் பிள்ளை எழுப்புகிறார். ராஜராஜனின் மகன் ராஜ ராஜேச்வரத்தைக் கட்டி முடிக்காமல் தன் தலைநகரைத் தஞ்சையிலிருந்து கங்கைகொண்ட சோழபுரத்திற்கு மாற்றி அங்கு புதியதாக ஒரு கோயிலைக் கட்டிக்கொண்டது ஏன் என்பது அவர் கேள்வி. பௌத்தம் சோழநாட்டில் பெருஞ்செல்வாக்குப் பெற்றிருந்தது என்பதும் அங்குதான் பௌத்தம் கீழிறக்கப்பட்டுச் சைவம் கோலோச்சியது என்பதும் பெரும்பான்மையோரால் ஏற்கப்பட்ட கருத்தாக இருக்கிறது. சோழர்களின் சைவச் சார்பை வைத்துப் பார்க்கும்போது பௌத்தக் கோயில்களின் இடத்தில் அவை அப்புறப்படுத்தப்பட்டு சைவக் கோயில்கள் எழுப்பப்பட்டிருக்கலாம் என யூகிக்க முடிகிறது. தஞ்சையைச் சேர்ந்த ஆய்வாளர் பா. ஜம்புலிங்கம் 67 புத்தர் சிலைகளைச் சோழநாட்டில் கண்டறிந்துள்ளார். அச்சிலைகளில் பெரும்பாலானவை சிதைக்கப்பட்டும் உடைக்கப்பட்டும் காணப்படுகின்றன. பௌத்தம் கடுமையாக ஒடுக்கப்பட்டு அழிக்கப்பட்டிருக்கிறது என்பதையே இது காட்டுகிறது. சைவ எழுச்சிக் காலத்தில் வைதீகமும் சாதியும் செல்வாக்குப் பெற்று அவற்றிற்குப் புறம்பான சமயத்தவர்கள் ஒடுக்கப்பட்டனர். பௌத்தத்தை இழிவுபடுத்தும் சைவ இலக்கியங்களும் இதையே உறுதிசெய்கின்றன.

வட இந்தியாவில் பௌத்தத்திற்கு எதிரான வைதீக எழுச்சியைப் போலவே தென்னிந்தியாவிலும் வைதீகமயமாக்கப்பட்ட சைவ எழுச்சியால் பௌத்தம் ஒடுக்கப்பட்டது. இதனூடாக உருவான சாதிய அமைப்பில் பிராமணர்களைப் போலவே பிராமணர் அல்லாத உயர்சாதியினரும் பயன்பெற்றனர். சோழர் காலச் சாதி அமைப்பை ஆராயும்போது பிராமணியத்தை மட்டுமல்ல அதைச் செயல்படுத்தியதிலும் பலன்பெற்றதிலும் பங்கு வகித்துவரும் பிராமணர் அல்லாத சாதிகளைக் குறித்தும் அறிய முடியும். பௌத்தத்திற்கும் பிராமணியத்திற்கும் இடையே நடந்த போராட்டம் பற்றிய அம்பேத்கரின் கருத்துகளும் வேத பிராமணியத்தை ஏற்க மறுத்த பௌத்தர்களே ஒடுக்கப்பட்டுப் பின்னாட்களில் தீண்டாதார் ஆக்கப்பட்டனர் என்கிற அயோத்திதாசரின் கூற்றும் இவ்விடத்தில் நினைவுகூரத்தக்கது.

ராஜராஜனின் ஆட்சிப் பரப்பின் பெருமை நிகழ்காலத் தமிழ்த் தேசிய கதையாடல்களோடும் இணைக்கப்படுகிறது. ராஜராஜன் காலத்தில்தான் வெற்றிபெற்ற நாடுகளின் மீது நேரடியான அதிகாரத்தைச் செலுத்துவதும் அந்நாடுகளைத் தன்னுடைய எல்லைக்குள் கொண்டுவரும் நடை முறையும் தொடங்கின என ஒய். சுப்பராயலு குறிப்பிடுகிறார். இது ராஜராஜனின் ஆட்சிப்பரப்போடு மட்டும் தொடர்புடையது அல்ல, அவன் பரப்பிய வைதீக நெறி, சைவ சமயம் ஆகியவற்றின் பரவலாக்கத்தோடும் தொடர்புடையது. ராஜராஜன் ஈழத்தின் பௌத்த அடையாளங்களை அழித்துச் சைவமாக்கினான் என்னும் செய்தியைத் தமிழ் வரலாற்று நூல்களே ஏற்கின்றன. ஈழத்தில் பௌத்தம் தமிழர்கள் மத்தியிலும் செல்வாக்குப் பெற்றிருந்தது என்னும் வரலாற்றாளர் கா. இந்திரபாலாவின் கூற்றையும் இணைத்துப் பார்க்க வேண்டியது ஆய்வாளர்களின் பொறுப்பு.

சோழர் காலம் குறித்த ஆய்வுகளும் கோயில் குறித்த கேள்விகளும் அது பற்றிக் கட்டமைக்கப்பட்டுள்ள மிகுபுனைவுகளுக்கும் பொற்காலம் பற்றிய நிகழ்காலப் பெருமிதங்களுக்கும் எதிரானவையாயிருக்கின்றன.

இராமன் என்னும் இந்து அடையாளத்தை நிராகரிப்பதற்காகக் கருணாநிதி கூறும் அனைத்துக் காரணங்களும் ராஜராஜன் என்னும் தமிழ் அடையாளத்திற்கும் பொருந்தும். இந்து பெருங்கதையாடல்களுக்குள் மறைக்கப்பட்டுள்ளதைப் போலவே திராவிடத் தமிழ்ப் பெருங்கதையாடல்களுக்குள்ளும் சாதியம் முதலான தமிழ்ச் சமூகத்தின் முரண்கள் மறைக்கப்படுகின்றன. ‘திராவிடத்தைப் புறந்தள்ளிய ஆரிய நாகரிகம்’ பற்றிய குற்றச்சாட்டுகளைப் போலவே பௌத்தம் உள்ளிட்ட அவைதீக அடையாளங்களை அழித்த வைதீக ராஜராஜன் பற்றிய குற்றச்சாட்டுகளும் தமிழ்ப் பேரடையாளத்தால் மவுனமாக்கப்படுகின்றன.

பிராமணிய மேலாண்மைக்கு எதிரானது எனக் கூறிக்கொள்ளும் திராவிட இயக்கம் பிற்காலச் சோழர் காலம், சாதிய உருவாக்கத்தில் ராஜராஜனின் பங்கு ஆகியவை குறித்துத் திறந்த மனத்துடன் விவாதித்திருக்க வேண்டும், அவை குறித்த கற்பிதங்களை விமர்சனத்துக்குட்படுத்தியிருக்க வேண்டும். ஆனால் திமுக என்னும் அரசியல் கட்சியின் அதிகாரத்தை நோக்கிய பயணத்துக்கு ராஜராஜன் போன்ற வரலாற்றுத் திருவுருக்கள் தேவைப்படுகின்றன. சோழர் காலம் குறித்த ஆய்வுகள் வெளிவரத் தொடங்கி 40 ஆண்டுகளுக்கும் மேலாகிவிட்டன. இவற்றின் வழியாகத் தன் வரலாற்றுப் பார்வையைப் புதுப்பித்துக்கொண்டிருக்க வேண்டிய திமுக தான் கட்டமைத்த பழைய எதிர்வுகளை மீண்டும் மீண்டும் கூர்மைப்படுத்தி அதன் மூலம் தனக்குக் கிட்டிய அதிகாரத்தையும் அடையாளத்தையும் தக்கவைத்துக்கொள்ள முயல்கிறது. திமுக நவீனப்பட்டிருக்கிறது என்பது ஒரு பொய்யான தோற்றம். சமூக முரண்பாடுகளைத் தந்திரமான முறையில் ஓட்டு வங்கி அரசியலுக்குப் பயன்படுத்துவதில்தான் அதன் கவனம் குவிந்திருக்கிறதே அல்லாமல் அதற்கான தீர்வுகளைத் தேடுவதில் அல்ல. சமூக அடுக்குகளில் நிகழ்ந்துவரும் மாற்றங்களை அது கண்டுகொள்வதே இல்லை. அதற்கு மாறாக அவற்றை மறைக்கவும் மறுக்கவும் மட்டுமே முனைகிறது. உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு தொடங்கி ராஜராஜனுக்கு நடத்திய பெருவிழா வரை கடந்த சில பத்தாண்டுகளில் கருணாநிதியால் நடத்தப்பட்ட பண்பாட்டு அரங்குகளில் நவீனத்துவச் சிந்தனைகளுக்கு எவ்வித இடமும் அளிக்கப்படவில்லை என்பதே இதற்குச் சான்று. பகுத்தறிவையும் சுயமரியாதையையும் வலியுறுத்திய போதிலும் திராவிட இயக்கத்தின் உள்ளீடாகச் சைவத் தமிழ் அடையாளமும் சைவக் கறை படிந்த தமிழ் வரலாறும் தான் இருக்கிறது என்பதே உண்மை.

அதிகாரத்தை ஈட்டித்தந்த அடையாளங்களைத் தொடர்ந்து காப்பாற்றுவதும் அவற்றின் மீதான விமர் சனங்களை மறுப்பதும் புறக்கணிப்பதும் இறுதியில் அழித்தொழிப்பதும் அதிகாரத்தின் செயல்பாடு. அதைத்தான் திமுக செய்துகொண்டிருக்கிறது. ராஜராஜனே கருணாநிதியால் வளர்த்தெடுக்கப்பட்ட அடையாள அரசியல் உருவாக்கத்தின் முன்னோடி. தன் பெயரில் கோயில்களைக் கட்டுதல், அரசின் திட்டங்களுக்குத் தன் பெயரைச் சூடிக்கொள்ளுதல், அறிஞர்களுக்கும் புலவர் பெருமான்களுக்கும் தன் பெயரில் விருது வழங்குதல், சிலையெழுப்புதல், உரையெழுதுதல் போன்ற செயல்பாடுகள் ராஜராஜனுக்கும் கருணாநிதிக்கும் பொது. புதிய சட்டமன்றக் கட்டடம், உலகத் தரத்திலான நூலகம், செம் மொழி மாநாடு, பூங்காக்கள், பாலங்கள் ஆகியவை கருணாநிதியின் தனிச் சிறப்பான சாதனைகள். கடவுளாக்கப்பட்டிருக்கிற ராமன் போன்ற புனிதங்களோடு சாதியத்தையும் வைதீகத்தையும் அதிகாரத்தின் பகுதிகளாக மாற்றிய ராஜராஜன் போன்ற அடையாளத் திருவுருக்களையும் அவை சார்ந்து கட்டமைக்கப்பட்டிருக்கும் கற்பிதங்களையும் கேள்விக்குள்ளாக்காமல் நிகழ்கால நெருக்கடிகளுக்குத் தீர்வு காண முடியாது என்பதே யதார்த்தம்.