murali83bdu@gmail.com. Powered by Blogger.

Monday, July 11, 2011

பெருந்தலைவர் காமராஜர்


வாழ்க்கை வரலாறு

பெருந்தலைவர் காமராஜர் அவர்கள் விருதுநகரிலே ஒரு வியாபாரக் குடும்பத்திலே பிறந்தவர் ஆவார். அந்தக் காலத்தில் அந்த ஊருக்குப் பெயர் விருதுப்பட்டி.

காமராஜர் தாயார் பெயர் சிவகாமி அம்மாள். தந்தையின் பெயர் குமாரசாமி நாடார். அவர் விருதுப்பட்டியிலே தேங்காய் மொத்த வியாபாரம் செய்து வந்தார். சிவகாமி அம்மாளுக்கு இரண்டு சகோதரர்கள். ஒருவர் கருப்பையா நாடார். – இவர் துணிக்கடை வைத்திருந்தார். மற்றொருவர் பெயர் காசிநாராயண நாடார். இவர் திருவனந்தபுரத்திலே மரக்கடை வைத்து நடத்தி வந்தார்.

1903- ஆம் வருடம், ஜுலை மாதம் 15-ஆம் தேதி, காமராஜர் பிறந்தார். அவருக்கு குல தெய்வமான காமாட்சியம்மாளின் பெயரையே முதலில் சூட்டினார்கள்.

கண்ணனைப் பாரதி ”கண்ணம்மா” ஆக்கி அழைத்துப் பாடிப் பரவசப்பட்டதுபோல் ஆணாகப் பிறந்த காமராஜரை ”காமாட்சி” ஆக்கி அனைவரும் அழைத்து மகிழ்ந்தார்கள்.

தாயார் சிவகாமி அம்மாள் மட்டும், தன் செல்லக் குழைந்தையை ”ராஜா” என்றே அழைத்து வந்தாள். நாளடைவில் காமாட்சி என்ற பெயர் மாறி, ‘காமராஜ்’ என்று ஆனது.

காமராஜருக்குப் பின்னர், சிவகாமி அம்மாள் ஒரு பெண் குழந்தையைப் பெற்றெடுத்தார்.நாகம்மாள் என்று அந்தக்குழந்தைக்குப் பெயர் சூட்டினார்கள். காமராஜரும் தங்கையிடம், அன்பும் பாசமும் கொண்டிருந்தார்.

காமராஜர் தனது பள்ளிப் படிப்புக்காலங்களிலேயே, இளம் வயதிலேயே, விருதுப்பட்டியில் நடந்த பொதுக்கூட்டங்களுக்குப் போகலானார். ஆங்கிலேயர்கள் இந்தியாவை அடிமைப்படுத்தி ஆண்டு கொண்டிருந்த காலம் அது. காமராஜர் இளம் வயதில் கேட்ட பொதுக் கூட்டங்களே அவரைப் பிற்காலத்தில் சுதந்திரப் போராட்ட வீரராகக் மாற்றியது.

”தந்தையொடு கல்விபோம்” – என்பதற்கு ஒப்ப, காமராஜரின் தந்தை குமாரசாமி நாடாரின் மறைவிற்குப் பின் காமராஜரின் பள்ளிப்படிப்பு முற்றுப்பெற்றது. வியாபாரங்களில் ஈடுபட்டார். முதலில் துணிக்கடையிலும், பின்னர் திருவனந்தபுரத்தில் மரக்கடை வைத்து நடத்திய காசியாராயண நாடார் மரக்கடையிலும் சிறிது காலம் வியாபாரத்தில் ஈடுபட்டார். அவரது கவனமெல்லாம் தேச விடுதலையிலேயே இருந்தது. வைக்கம் போராட்டத்தில் கலந்து கொண்டார். உப்புச் சத்தியாகிரகத்தில் பங்கு பெற்றார்.

காலப்போக்கில் காமராஜர், சத்தியமூர்த்தி தொண்டனாகி, காங்கிரஸ் பேரியக்க உறுப்பினராகி முழு நேரத் தேசப்பணிக்குத் தன்னை அர்ப்பணித்துக்கொண்டார். விடுதலைப் போரில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார்.

கள்ளுக்கடை மறியல், அந்நியத் துணிகள் பகிஷ்காரம், கொடிப் போராட்டம், உப்பு சத்தியாக்கிரகம், சைமன் கமிஷன் எதிர்ப்பு ஆகியவற்றில் காமராஜர் பங்கேற்றுச் சிறை தண்டனை பெற்றார்.. அடுத்தடுத்துப் போராட்டங்கள் அனைத்திலும் ஈடுபட்டு பலமுறை சிறை தண்டனைகளை அனுபவித்தார் காமராஜர்..

தமிழ்நாடு காங்கிரஸில், ”காமராஜர் காங்கிரஸ்” என்ற நிலை உருவாகியது. காமராஜர் தனது தியாகத்தாலும், சலியாத உழைப்பாலும், தொண்டுகளினாலும் உயர்ந்த நிலையை அடைந்தார்.

1952-ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் காமராஜர் சாத்தூர் தொகுதியில் நின்று வெற்றி பெற்றார். சுமார் பன்னிரண்டு ஆண்டுகாலம் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக இருந்து தமிழ்நாட்டிலே காங்கிரஸ் பேரியக்கத்திற்குப் பெரும் செல்வாக்கை ஏற்படுத்தித் தந்தார்.

1954- ஆம் ஆண்டு காமராஜர் தமிழ்நாட்டின் முதல் அமைச்சர் ஆனார். தலைவர் பதவியைத் துறந்தார். நாடாளுமன்ற உறுப்பினர் பதவியையும் துறந்தார். குடியாத்தம் தொகுதியில் சட்டசபைக்குத் தேர்தலில் நின்று வெற்றி பெற்றார். மேல்சபை உறுப்பினராகி அவர் முதல் அமைச்சர் பதவியை வகித்திருக்கலாம். குறுக்கு வழியில் உள்ளே புகுந்து கொள்ள என்றும் விரும்பாத பெருந்தலைவரே கு. காமராஜர்.

இங்கே நான் காமராஜர் தமிழ்நாட்டின் முதல் அமைச்சராகிச் செய்த சாதனைகளையே பட்டியலிட்டு காட்ட முன் வந்திருக்கிறேன். அதிகம் படிக்காத பெருந்தலைவர் காமராஜர் கல்விக்குச் செய்த சாதனைகள் எண்ணிலடங்காதவைகளாகும். ஏழை, எளியவர், உயர்ந்தவர், தாழ்ந்தோர், ஆக எல்லோருக்கும் கல்வி-இலவசக் கல்வி – பட்டி, தொட்டிகளில் எல்லாம் பள்ளிக்கூடங்கள் – இலவச மதிய உணவுச் சீருடைகள், இப்படிப் பலதிட்டங்களைத் தீட்டி அமுல்படுத்தினார் காமராஜர். தமிழகத்தில் கல்விச் செல்வம் பெருகியது. கிராமங்கள் தோறும் ஓராசியர் பள்ளிகள் திறக்கப்பட்டன.

கல்விக் கேள்விகளில் மட்டும் சிறந்து விளங்கினால் போதுமா? நாட்டிலே பஞ்சம், பசி, வேலையில்லாத் திண்டாட்டங்கள் விலகி விடுமா? சிந்தித்தார் காமராஜர். திட்டங்கள் தீட்டினார். நாட்டிலே புதுப் புதுத் தொழிற்சாலைகளை நிறுவச்செய்தார். தொழிற்கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்தார்.

காமராஜரின் திட்டங்களால் தமிழ்நாடு முன்னணியில் நின்றது. காமராஜரின் கல்வித் திட்டங்கள் நிறைவேற உடனிருந்து பாடுபட்டவர் அந்நாள் பள்ளிக் கல்வி இயக்குனர் திரு.நெ.து. சுந்தரவடிவேலு ஆவார்.

அதேபோல், காமராஜரின் தொழிற்திட்டங்கள் நிறைவேறக் காரணகர்த்தாவாக இருந்தவர் அன்றைய தொழில் அமைச்சர் திரு. ஆர். வெங்கட்ராமன் ஆவார்.

1957 – ஆம் ஆண்டு பொதுத் தேர்தலிலும் தமிழ்நாட்டில் காங்கிரஸ் அமோக வெற்றிப்பெற்றது. பெருந்தலைவர் காமராஜரே மீண்டும் தமிழ்நாட்டின் முதலமைச்சரானார்.

ஒன்பது ஆண்டுகாலம் தமழக முதலமைச்சராக இருந்த பெருந்தலைவர் காமராஜர், தான் கொண்டு வந்த கே. பிளான் மூலம் தானே முதலமைச்சர் பதவியைத் துறந்தார். அகில இந்திய காங்கிஸ் தலைவரானார்.

பெருந்தலைவர் காமராஜர் ஆண்ட காலத்தைத் தமிழ்நாட்டின் பொற்காலம் என்பார்கள். அந்தக் காலத்தை உங்கள் பார்வைக்கும், படிப்புக்கும் கொண்டு வருவதற்காகவே இந்நூல் வெளியிடப்படுகிறது.

”காமராஜரின் சாதனைகள்” என்னும் இந்த நூலினைக் காமராஜர் நூற்றாண்டு விழா, ஆண்டிலே வெளியிட்டு இருப்பது குறிப்பிடத்தக்கதும், பெருமைக்கு உரியதுமாகும்.

பெருந்தலைவர் காமராஜர் சாதனைகளைப் பிள்ளைகள் மட்டுமின்றிப் பெரியவர்களும் படித்துத் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதே என்னுடைய ஆசை.

முதலமைச்சராகக் காமராஜர் தமிழகத்தில் ஒன்பது ஆண்டுகாலம் நல்லாட்சி புரிந்தார். கல்விக்கும், தொழிலுக்கும்,காங்கிரஸ் கட்சிக்கும் அவர் செய்த சாதனைகள் கணக்கில் அடங்காதவைகளாகும்.

விருதுநகரிலே ஒரு சாதாரணக் குடும்பத்தில் பிறந்து, போதிய கல்வி கற்கவும் வசதியற்ற சூழ்நிலையிலே வளர்ந்து, வாழ்ந்து, பின்னர் அரசியலிலே தொண்டராக ஒரு மாபெரும் கட்சியிலே இணைந்து, தனது உழைப்பால், தொண்டால் படிப்படியாக உயர்ந்தவர் தான் பெருந்தலைவர் காமராஜர். அவரது சாதனைகள் யாவுமே சரித்திர முக்கியத்துவம் வாய்ந்தவைகள்.

நாட்டுபற்று

இளம் வயதிலேயே நாட்டுபற்று கொண்ட காமராஜர், செய்தித் தாள்களைத் தினமும் படித்து அரசியல் பற்றி தெரிந்து கொண்டார்.

நாட்டின் விடுதலைக்காக மக்கள் அப்போது போராடி வந்தார்கள். விடுதலைக்காகப்போராடுபவர்களை வெள்ளையர்கள் சிறை பிடித்தார்கள். கொடுமைப்படுத்தினார்கள்.

இந்நிலையில்தான் 1920 ஆம் ஆண்டு அவர் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி நடத்திய ஒத்துழையாமை இயக்கம் மற்றும் சட்ட மறுப்பு இயக்கத்தில் தீவிரமாகக் கலந்து கொண்டார்.

திருவனந்தபுரத்தில் மரக்கடை வியாபாரம் செய்யும் இன்னொரு தாய்மாமனாரான காசிநாடாரின் கடைக்கு அனுப்பினால் காமராஜரின் கவனம் தொழில் மீது பதியும் எனக் கருதிய தாய் சிவகாமி அம்மாள். காமராஜரைத் திருவனந்தபுரத்திற்கு அனுப்பி வைத்தார்.

காமராஜர் திருவனந்தபுரம் வந்த நேரத்தில் கேரளாவில் சாதிப் போராட்டங்கள் நடந்தன. இனவேற்றுமைக்கொடுமைகள் நீங்க ஈ.வெ.ரா. பெரியார் வைக்கம் போராட்டத்தை நடத்தினார். காமராஜர் அந்தப் போராட்டத்தை நடத்தினார். காமராஜர் அந்தப் போராட்டத்தில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். கேரளாவில் நடந்த எல்லா சுதந்திரப் போராட்டங்களிலும் கலந்து கொண்டு நாட்டு விடுதலைக்காகப்போராடினார்.

இதனால் காமராஜரின் கவனம் திசை திரும்பியது. தாய் மாமனார் மனம் வருந்தினார். விருதுபட்டியில் தொழிலில் கவனம் இல்லையென்று திருவனந்த புரத்திற்கு அனுப்பி வைத்தார்கள். ஆனால் இங்கு இப்படி தொழிலில் கவனம் இல்லாமல் காமராஜ் இருக்கிறாரே என எண்ணி மீண்டும் காமராஜரை விருதுப்பட்டிக்கு அனுப்பி வைத்தார்.

Wednesday, July 6, 2011

ஒடுக்கப்பட்ட மக்களின் ஒப்பற்ற தலைவன் இரட்டைமலை சீனிவாசன்

ஒடுக்கப்பட்ட மக்களின் ஒப்பற்ற தலைவன் இரட்டைமலை சீனிவாசன்இரட்டைமலை சீனிவாசன் அவர்கள் பழைய செங்கல்பட்டு மாவட்டத்தில் மதுராந்தகத்திற்கு அருகில் உள்ள கோழியாளம் என்கிற சிற்றூரில் 07.07.1859இல் பிறந்தார். தெய்வபக்தி மிகுந்த குடும்பத்தில் பிறந்ததால் இவருக்குச் சீனிவாசன் எனப் பெயரிட்டனர்.

தொடக்கப்பள்ளியில் தந்தையின் பெயரின் முன் எழுத்திற்குப் பதிலாகத் தந்தையின் முழுப்பெயரையும் சேர்த்து எழுதிவிட்டார்கள். அதனால் இரட்டைமலை சீனிவாசன் ஆனார்.

கோழியாளத்திலிருந்து இவருடைய விவசாயக் குடும்பம் வறுமை காரணமாகவும் சாதியக் கொடுமை காரணமாகவும் தஞ்சை நோக்கி ஓடியது. அங்கு அதைவிடக் கொடிய சாதிய அடக்குமுறை தாண்டவமாடியது. அங்கிருந்து கோயம்புத்தூர் சென்றனர்.

இரட்டைமலை சீனிவாசன் 1939இல் அவருடைய தன் வரலாற்றை அவரே சுருக்கமாக எழுதி ”திவான் பகதூர் இரட்டைமலை சீனிவாசன் அவர்கள் ஜீவிய சரித்திர சுருக்கம்” என்ற பெயரில் 30பக்க நூல் ஒன்றை வெளியிட்டார். இதனால் ஓரளவு அவரது இளமைக்காலம் குறித்தும்அவருடைய அரசியல் மற்றும் சமூகப் பணிகள் குறித்தும் அறிந்துகொள்ள முடிகிறது.

கோயம்புத்தூரில் இவர் கல்வி பயின்ற பள்ளியில் சுமார் 400 மாணவர்களில் 10 மாணவர்கள் தவிர மற்ற அனைவருமே பார்பபன மாணவர்கள் எனத் தன் வாழ்க்கைச் சுருக்கத்தில் அவரே எழுதியுள்ளார். வறுமை காரணமாக பள்ளிக் கல்வியோடு இவர் படிப்பை முடித்துக் கொண்டார். தீண்டாமைக் கொடுமைக்கு எப்படி முற்றுப்புள்ளி வைப்பது என்பதைப் பற்றியே எந்நேரமும் எண்ணிக் கொண்டிருந்தார் 1887ஆம் ஆண்டில் ரெங்கநாயகி அம்மாளைத் திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு 2 பெண்பிள்ளைகளும் 4 ஆண்பிள்ளைகளும் பிறந்தனர்.

நீலகிரியில் ஓர் ஆங்கிலேயர் கம்பெனியில் எழுத்தராக வேலைக்குச் சேர்ந்தார். பத்து ஆண்டுகள் அங்கு பணியாற்றிய பின் 1890இல் சென்னைக்கு வந்தார்.

1891இல் பறையர் மகாசன சபையைத் தோற்றுவித்தார். 1893 -1900 வரை பறையன் என்ற திங்கள் இதழை நடத்தினார்.

இதே காலகட்டத்தில்தான் 1.12.1891இல் பண்டித அயோத்திதாசர் நீலகிரியில் திராவிட மகா சபையின் முதல் மாநாட்டைக் கூட்டினார். அதில் 10 தீர்மானங்கள் நிறைவேற்றி ஆங்கில அரசுக்கும், காங்கிரசுக் கட்சிக்கும் அனுப்பிவைத்தார். 1892இல் அதை ஆதித் திராவிட மகானசபை எனப் பெயர் மாற்றி பதிவும் செய்தார்.

அயோத்திதாசரின் முதல் மனைவி இறந்துவிட்ட பிறகு, இரட்டைமலை சீனிவாசனின் தங்கை தனலட்சுமியை இரண்டாவது மனைவியாகத் திருமணம் செய்துகொண்டார். ஆதித் திராவிடப் பெண்கள் படிக்காத அக்காலத்திலேயே இந்த அம்மையார் எட்டாம் வகுப்பு வரை படித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இரட்டைமலை சீனிவாசன் 1900ஆம் ஆண்டில் வேலை தேடித் தென்ஆப்பிரிக்கா சென்றார். அங்கு காந்தியடிகளுடன் பழக்கமேற்பட்டு காந்திக்குத் தமிழையும், திருக்குறளையும் கற்றுக் கொடுத்தார். அங்கு நீதிமன்றத்தில் ஆவணங்களை மொழிபெயர்த்துக் கூறும் வேலை பார்த்தார்.

இவர் தென்ஆப்பிரிக்காவில் இருந்தபோதே இங்கு 1916இல் பார்ப்பனரல்லாதார் இயக்கம் தோன்றியது. அதனை ஒட்டி 1917இல் ஆதித் திராவிட மகாசபை எம்.சி.இராஜா போன்றவர்களால் புதுப்பிக்கப்பட்டது.

மாண்டேகு செம்ஸ்போர்டு சீர்திருத்தப்படி 1920இல் நடைபெற்ற தேர்தலின் போது சென்னை மாகாண சட்டசபைக்குத் தாழ்த்தப்பட்டோரில் இருந்து 5 உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டனர். (1936வரை ஓர் அவை மட்டுமே இருந்தது. 1937 முதல் இரண்டு அவைகள் செயல்பட்டன.)

இரட்டைமலை சீனிவாசன் 1921இல்தான் தென்னாப்பிரிக்காவில் இருந்து திரும்பினார். அடுத்த இரண்டாவது பொதுத் தேர்தலின் போது 19.11.1923இல் இரட்டைமலை சீனிவாசன் எல்.சி.குருசாமி உள்ளிட்ட 10பேர் (தாழ்த்தப்பட்டோர்) சட்டசாயின் உறுப்பினர்களாக நியமனம் செய்யப்பட்டனர்.

1920 முதல் 1936 வரை தாழ்த்தப்பட்டோர் யாரும் எந்தத் தேர்தலிலும் போட்டியிடவில்லை. எல்லாநிலையிலும் நியமனம் மூலமாகவே உறுப்பினராக்கப்பட்டனர்.

22.08.1924இல் சட்டசபையில் இரட்டைமலை சீனிவாசன் ஒரு முக்கியமான தீர்மானத்தை முன்மொழிந்தார். அத்தீர்மானத்தை அரசும் ஏற்றுக்கொண்டது. அத்தீர்மானம் 24.02.1925 கெசட்டில் (பழழெ) வெளியிடப்பட்டது.

(அ) எந்த வகுப்பையாவது, சமூகத்தையாவது சேர்ந்த யாதொரு நபராகிலும், நபர்ளாகிலும் யாதொரு பட்டணம், அல்லது கிராமத்திலுள்ள எந்த பொது வழி (அ) தெரு மார்க்கமாயினும் நடப்பதற்கு ஆட்சேபணை இல்லையென்பதும்,

(ஆ) இந்த தேசத்திலுள்ள சாதி இந்துக்கள் எம்மாதிரியாகவும், எவ்வளவு மட்டிலும் யாதொரு அரசாங்க அலுவலகத்தின் வளாகத்திற்குள் போகலாமோ, யாதொரு பொதுக்கிணறு, குளம் அல்லது பொதுமக்கள் வழக்கமாய் கூடும் இடங்களைப் பயன்படுத்தலாமா அல்லது பொதுவான வேலை நடத்தப்பட்டு வருகின்ற இடங்கள், கட்டடங்கள் ஆகியன இவைகளுக்குள் போகலாமோ அம்மாதிரியாகவும் அம் மட்டிலும், தாழ்த்தப்பட்ட வகுப்பினைச் சேர்ந்த யாதொரு நபர் போவதற்காவது, உபயோகிப்பதற்காவது ஆட்சேபணை இல்லையென்பதும், அரசின் கொள்கையாகும் என்று அறிவிக்கப்பட்டது. இது அனைத்துத் துறைகளுக்கும், அலுவலர்களுக்கும் அனுப்பப்பட்டது. – சி.பி.காட்டோஸ் அரசுச் செயலாளர் (சட்டசபை விவாதக் குறிப்புகள், தொகுதி 19, பக்கம் 822-830)


இரட்டைமலை சீனிவாசன் சட்டசபையில் 1923 நவம்பர் முதல் 1939இல் சட்டசபைக் கலைக்கப்படும் வரை உறுப்பினராகப் பணியாற்றினார். அப்போது ஆதிதிராவிட மக்களின் சிவில் உரிமைகளுக்காக ஓயாது குரல் கொடுத்து வந்தார்.

20.01.1922இல் எம்.சி.இராசா சட்டசபையில் கொண்டு வந்த தீர்மானத்தின்படி பறையர், பள்ளர் என்ற பெயர் நீக்கப்பட்டு ஆதிதிராவிடர் என்ற பெயர் அரசால் ஏற்றுக்கொள்ளப்பட்டு அரசாயை எண் 817, 25.03.1922இல் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு ஆதித்திராவிடர் எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது.

பெயர் மாற்றம் செய்யப்பட்டு இரண்டு ஆண்டுகள் ஆகியும் பல பத்திரப் பதிவு அலுவலகங்களில் பறையன், பஞ்சமன் என்றே பதிவு செய்யப்படுகிறது. இதை அரசு உடனே தடுத்து நிறுத்த வேண்டும் என இரட்டைமலை சீனிவாசன் 25.08.1924இல் சட்டசபையில் முறையிட்டார்.
(சட்டசபை விவாதக் குறிப்புகள் தொகுதி 20 பக்கம் 280)

உடனடியாக தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அன்றைய முதல்வர் பனகல் அரசர் பதிலளித்தார்.

பரம்பரை மணியக்காரர்கள் உயர்சாதியினராக உள்ளனர். அவர்கள் சேரிகளுக்கு வருவதில்லை, எனவே பரம்பரை மணியக்காரர் முறையை நீக்கி அனைத்து சாதியினரும் – தாழ்த்தப்பட்டவர் உள்பட மணியக்காரராக வர வழிவகை செய்ய வேண்டும் எனச் சட்டசபையில் அரசுக்குக் கோரிக்கை வைத்தார். இதே கோரிக்கையை அருந்ததிய சாதி உறுப்பினரான எல்.சி.குருசாமியும் முன் வைத்தார்.
(சட்டசபை விவாதக் குறிப்புகள் தொகுதி-20 பகுதி-2 பக்கம்-896)


இவர்களின் கோரிக்கை 60 ஆண்டுகளுக்குப்பின் எம்.ஜி.ஆர். ஆட்சிக் காலத்தில் நிறைவேறியது.

06.02.1925 அன்று சட்டசபையில் பேசிய இரட்டைமலை சீனிவாசன், தெலுங்கு மொழி தாழ்த்தப்பட்டோரான மாலா, மாதிகாவை ஆதி ஆந்திரர் என அழைக்கும்போது புலையர், தீயர்களை ஏன் மலையாளத் திராவிடர் என அழைக்கக்கூடாது எனக் கேள்வி எழுப்பினார்.
(சட்டசபை விவாதக் குறிப்புகள் தொகுதி-22 பகுதி-1 பக்கம்-351)

ஆதித் திராவிடர்களின் முதல் மாகாண மாநாடு

ஆதித் திராவிடர்களின் முதல் மாகாண மாநாடு 29.01.1928இல் சென்னை பச்சையப்பன் கல்லூரியில் நடைபெற்றது. இரட்டைமலை சீனிவாசன் அவர்களைத் தலைமை ஏற்கும்படி வி.ஜி.வசுதேவப் பிள்ளை முன்மொழிந்து, வி.ஐ.முனிசாமிப் பிள்ளை வழிமொழிந்தவுடன் பலத்த கரவொலிக்கிடையே இரட்டைமலை சீனிவாசன் தலைமைப் பொறுப்பை ஏற்றுக் கொண்டார். எம்.சி. மதுரை பிள்ளை வரவேற்புரையாற்றினார். வரவேற்புக் குழுவின் தலைவர் என்.சிவராஜ் சிறப்புரையாற்றினார்.


இம்மாநாட்டின் முக்கிய நோக்கம் அப்போது இந்தியாவிற்கு வரவிருந்த சைமன் குழுவிற்கு அறிக்கை தயாரித்துக் கொடுப்பதற்கான குழு அமைப்பதும், ஆங்கில அரசிற்கு ஆதி திராவிடர்களின் தேவைகளை வலியுறுத்துவதும் ஆகும்.


இம்மாநாட்டில் ஆதி திராவிடர்களுக்குத் தனித் தொகுதி வேண்டும் என்றும், 21 வயது அடைந்த அனைவருக்கும் வாக்குரிமை அளிக்கப்பட வேண்டும் என்றும், கல்வி, வேலைவாய்ப்புகளில் ஆதி திராவிடர்களுக்கு உரிய பிரதிநித்துவம் அளிக்கப்பட வேண்டும். உயர் கல்வி உள்பட அனைத்துக் கல்வியும் இலவசமாக வழங்கப்பட வேண்டும் எனவும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. (குறிப்பு ் 1927 வரை பச்சையப்பன் கல்லூரியில் ஆதித் திராவிட மாணவர்களைச் சேர்த்துக்கொள்ளவில்லை. 1928இல் தான் முதன்முறையாக ஆதித் திராவிட மாணவர்களுக்கு கதவு திறக்கப்பட்டது. மதுரை பிள்ளை வரவேற்புரையில் பச்சையப்பன் கல்விக் குழுவிற்கு நன்றி தெரிவித்துக் கொண்டார்.)

இரட்டைமலை சீனிவாசன் அவர்கள் ஒவ்வோர் ஆண்டும் தவறாமல் பட்ஜெட் உரையின் மீது உரையாற்றுவது வழக்கம். அவரது முதல் பட்ஜெட் உரை 06.02.1925 அன்று தொடங்கியது.
ஆதித் திராவிட மக்களுக்குத் தேவையான நிதி ஒதுக்கீடு, கல்வி வளர்ச்சி, சுகாதார வளர்ச்சி, பஞ்சமி நில ஒதுக்கீடு போன்றவற்றை வற்புறுத்துவார். இவர் பெரும்பாலும் ஆங்கிலத்திலேயே பேசுவார். எம்.சி.மதுரை பிள்ளை, சாமி சகஜானந்தம் ஆகிய இருவர் மட்டும் சட்டசபையில் தமிழிலேயே பேசுவார்கள்.

இரட்டைமலை சீனிவாசனின் மற்றுமொரு முக்கிய தீர்மானம் மதுக்கடைகளை மூடவேண்டுமென்பது. கலால் வரி அதிகமாகக் கிடைப்பதால் ஆங்கில அரசு இந்தியா முழுவதும் நிறைய மதுக்கடைகளை திறந்து வைத்திருந்தது. இதில் உழைக்கும் மக்களான அடித்தட்டு மக்களின் பணம் உறிஞ்சப்படுவதைக் கண்டு மனம் வெதும்பினார். அறவே கடையை மூடச் சொன்னால் மூட மாட்டார்கள் என்பதால் குறைந்தபட்சம் விடுமுறை நாட்களிலாவது மதுக்கடைகளை மூடவேண்டும் என்று 24.09.1929இல் சட்டசபையில் ஒரு தீர்மானம் கொண்டு வந்தார். அதை அரசு ஏற்றுக்கொண்டது. (சட்டசபை விவாதக் குறிப்புகள், தொகுதி 50, பக்கம் 391 – 392)

1930–32களில் இலண்டனில் நடைபெற்ற வட்டமேசை மாநாடுகளில் இவர், அண்ணல் அம்பேத்கருடன் தாழ்த்தப்பட்ட மக்களின் பிரதிநிதியாகச் சென்று கலந்துகொண்டு சிறப்பாகப் பணியாற்றினார். காந்தியுடன் தென்னாப்பிரிக்காவில் இவருக்கு இருந்த நட்பைக் கொண்டு இலண்டனில் காந்தியுடன் நேரில் சந்தித்துப் பிரச்சினையைச் சுமூகமாக முடித்துவிட முயன்றார். ஆனால் பலன் இல்லை. அம்பேத்கருடன் இணைந்து காந்தியை எதிர்க்கத் தொடங்கினார். கடைசி வரையில் அண்ணல் அம்பேத்கருடனும், தமிழகத்தில் திராவிட இயக்கத்தினருடனும் நட்புணர்வுடன் செயல்பட்டு வந்தார்.

இலண்டன் வட்டமேசை மாநாட்டில் இரட்டைமலை சீனிவாசன் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு இரட்டை வாக்காளர் தொகுதி வழங்கப்பட வேண்டும் என்றும், தாழ்த்தப்பட்ட மக்களின் விகிதாச்சார அளவுக்கு ஏற்ப கல்வியிலும், வேலை வாய்ப்பிலும் உரிய பங்கு அளிக்கப்பட வேண்டும் என்பதையும் வலியுறுத்திப் பேசினார். (வட்டமேசை மாநாடு கூட்ட நடவடிக்கைக் குறிப்பு, தொகுதி 3, பக்கம் 18,19)

இதே கோரிக்கையை வலியுறுத்தி அண்ணல் அம்பேத்கரும் மிக விரிவாக வட்டமேசை மாநாட்டில் பேசினார். (வட்டமேசை மாநாடு கூட்ட நடவடிக்கைக் குறிப்பு, தொகுதி 3, பக்கம் 168,174)
இலண்டன் வட்டமேசை மாநாட்டில் இவர்கள் இருவரும் தயாரித்துக் கொடுத்த ஆவணம், தாழ்த்தப்பட்ட மக்களின் முழு உரிமையைப் பெற்றுத் தருவதாக அமைந்திருந்தது.

டாக்டர் சுப்பராயன் 1933 சனவரி 31ஆம் நாள் சென்னை சட்டசபையில் தாழ்த்தப்பட்டவர்களைக் கோயிலில் நுழைய அனுமதிக்கச் சட்டமியற்ற வேண்டும் என்று ஒரு தீர்மானத்தைக் கொண்டு வந்தார். இத்தீர்மானத்தை ஆதரித்து இரட்டைமலை சீனிவாசன் பேசினார்.

இத்தீர்மானம் சட்டசபை வாக்கெடுப்புக்கு விடப்பட்டது 56 வாக்குகள் தாழ்த்தப்பட்டோர் கோயில் நுழைவுக்கு ஆதரவாகவும் 19பேர் நடுநிலையாகவும் இருந்தனர். எதிர்ப்பின்றி இத்தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனால் பார்ப்பனர்களின் முட்டுக்கட்டை காரணமாக கவர்னர் ஜெனரல் ஒப்புதல் அளிக்காததால் இதைச் சட்டமாக்க முடியாமல் போய்விட்டது.

இரட்டைமலை சீனிவாசனை அவர்களை வட்டமேசை மாநாட்டிற்கு அழைத்துச் சென்று தம்மைப் புறக்கணித்து விட்டாரே என்ற கோபத்தில் எம்.சி.இராசா, அண்ணல் அம்பேத்கருக்கு எதிராக பூனா ஒப்பந்தத்தின்போது இந்து மகா சபைத் தலைவர் மூஞ்சேவுடன் சேர்ந்து கொண்டும்காந்திக்கு ஆதரவாகவும் செயல்பட்டு வந்தார்.

அண்ணல் அம்பேதகர் அவர்கள் 1935இல் மதமாற்றம் பற்றி அறிவித்தபோதும் கூட இரட்டைமலை சீனிவாசன், அம்பேத்கருடைய மனம் நோகாமல் மெதுவாக ”நாம் தான் இந்து மதத்தில் இல்லையே (அவர்ணஸ்தர்) வருணம் அற்றவர்கள் ஆயிற்றே, நாம் இந்துவாக இருந்தால் தானே மதம் மாற வேண்டும்” என்று அம்பேத்கருக்கு தந்தி மூலமாக தன் கருத்தைத் தெரிவித்தார்.

ஒடுக்கப்பட்ட மக்களுக்காகத் தன் வாழ்நாள் முழுவதும் பணியாற்றிவந்த தலைவர் இரட்டைமலை சீனிவாசன் 18.09.1945 அன்று மறைவுற்றார்.