murali83bdu@gmail.com. Powered by Blogger.

Tuesday, April 19, 2011

இலங்கையில் நடந்த உச்சகட்ட போர்

இலங்கையில் நடந்த உச்சகட்ட போர் தொடர்பான ஐ.நா.வின் அறிக்கையில் விடுதலைப் புலிகள் மீதான குற்றச்சாட்டுகள் குறித்தும் குறிப்பிடப்பட்டிருக்கிறது. போர் நடக்கும் பகுதியில் ஏற்படக்கூடிய அபாயங்களைப் பற்றி நன்றாகவே தெரிந்திருந்தும் அப்பகுதியில் இருந்து வெளியேறுவதற்கு பொதுமக்களை விடுதலைப் புலிகள் அனுமதிக்கவில்லை. தங்களைப் பாதுகாக்கும் கேடயங்களாக அவர்களைப் பயன்படுத்திக் கொண்டார்கள் என்று அந்த அறிக்கை கூறுகிறது.

போர் நடந்து கொண்டிருக்கும்போது கட்டாய ஆளெடுப்பு நடவடிக்கைகளை விடுதலைப்புலிகள் மேற்கொண்டனர். போர் உச்சகட்டத்தை எட்டியபோது, ஆளெடுக்கும் பணி தீவிரமாக இருந்தது. எல்லா வயதினரையும் தங்களது படையில் விடுதலைப்புலிகள் சேர்த்துக் கொண்டனர்.

பாதுகாப்புக்காகப் பதுங்கு குழிகளைத் தோண்டுவதற்குப் பொதுமக்கள் கட்டாயப்படுத்தப்பட்டனர். பொதுமக்களையும் விடுதலைப் புலிகளையும் பிரித்தறிய முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் பொதுமக்களுக்குக் கூடுதலான ஆபத்து ஏற்பட்டது.

2009-ம் ஆண்டு பிப்ரவரிக்குப் பிறகு, சண்டை நடந்து கொண்டிருந்த பகுதியில் இருந்து வெளியேற முயன்ற பொதுமக்கள் மீது விடுதலைப் புலிகள் கண்மூடித் தனமாகச் சுடத் தொடங்கினர். இது பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியது.

போர் உச்சகட்டத்தை எட்டியபோது, மருத்துவமனைகள், பொதுமக்கள் தங்கியிருக்கும் முகாம்கள் போன்றவற்றை ஆயுதங்கள் பதுக்கி வைப்பதற்காக விடுதலைப் புலிகள் பயன்படுத்தினர். தற்கொலைப் படைத் தாக்குதலைத் தீவிரப்படுத்தினர் என்று ஐ.நாவின் அறிக்கை கூறுகிறது.

இவற்றின் அடிப்படையில், இலங்கை அரசுக்கு எதிராகக் கூறப்படும் நம்பகமான குற்றச்சாட்டுகளை 5 வகையாக ஐ.நா. நிபுணர் குழு பிரித்திருக்கிறது. 1. குண்டுகளை வீசி பெரும் எண்ணிக்கையிலான பொதுமக்களைக் கொன்றது, 2. மருத்துவமனைகள் மற்றும் மனிதநலப் பணிகளுக்கான இடங்கள் மீது தாக்குதல் நடத்தியது, 3. பொதுமக்களுக்கு மனிதநேய உதவிகள் கிடைக்கவிடாமல் செய்தது 4. போரில் கொல்லப்பட்டவர்கள், தப்பியவர்கள், இடம்பெயர்ந்தவர்கள், விடுதலைப் புலிகள் என்கிற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டவர்கள் ஆகியோருக்கு எதிரான மனித உரிமை மீறல்கள், 5. போர் நடந்த பகுதிக்கு வெளியே ஊடகங்கள், அரசு எதிர்ப்பாளர்களுக்கு எதிராகக் கட்டவிழ்த்து விடப்பட்ட அடக்குமுறை ஆகியவற்றையே நம்புவதற்குரிய 5 குற்றச்சாட்டுகளாக ஐ.நா. குழு கூறுகிறது.

இதுபோல் 1. பொதுமக்களைக் கேடயமாக பயன்படுத்தியது, 2. தங்களது பிடியில் இருந்து தப்பியோட முயன்றவர்களைக் கொன்றது, 3. பொதுமக்கள் வசிக்கும் பகுதியில் ஆயுதங்களைப் பதுக்கியது, 4. குழந்தைகளைப் படையில் சேர்த்தது, 5. கட்டாயமாக வேலை வாங்கியது, 6. தற்கொலைப் படைத் தாக்குதல் மூலம் பொதுமக்களைக் கொன்றது ஆகிய விடுதலைப் புலிகளுக்கு எதிரான 6 வகையான குற்றச்சாட்டுகளில் உண்மை இருப்பதாகவும் ஐ.நா. அறிக்கை கூறுகிறது.

இலங்கை செய்திருப்பதும் செய்ய வேண்டியதும்: போர் நடந்து முடிந்தபிறகு அது தொடர்பாக விசாரணை நடத்துவதைத் தொடர்ந்து புறக்கணித்து வந்த ராஜபட்ச அரசு, "கற்ற பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணையம்' (எல்எல்ஆர்சி) என்கிற 8 நபர் குழுவை அமைத்தது. 2002-ம் ஆண்டில் செய்து கொள்ளப்பட்ட சண்டை நிறுத்த ஒப்பந்தம் முதல் போர் முடிவுக்கு வந்தது வரை ஆய்வு செய்வதே இந்தக் குழுவின் பணி என்று கூறப்பட்டது. போர் முடிந்த நிலையில், தேசிய அளவிலான பேச்சைத் தொடங்குவதற்கு இது நல்ல வாய்ப்பாகவும் கருதப்படுகிறது.

ஆயினும் சுயேச்சைத்தன்மை, பாரபட்சமற்ற ஆய்வு உள்ளிட்ட சர்வதேச தகுதிகள் இந்தக் குழுவுக்கு இல்லை. இந்தக் குழுவின் உறுப்பினர்கள் சிலர் ஒரு சார்பானவர்களாகக் கருதப்பட்டார்கள். போர்க்காலத்தில் செய்யப்பட்ட சர்வதேச மனிதநல மற்றும் மனித உரிமை சட்ட விதிமீறல்கள் தொடர்பாக இந்தக் குழு விசாரிக்கவில்லை. பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய மரியாதை அளிப்பது, சாட்சியங்களின் பாதுகாப்புக்கு உத்தரவாதமளிப்பது போன்ற கடமைகளிலும் எல்எல்ஆர்சி தவறிவிட்டது.

அதனால், ஐ.நா. பொதுச் செயலர் பான்-கி-மூன், இலங்கை அதிபர் ராஜபட்ச ஆகியோர் அளித்த கடமைப்பொறுப்பு தொடர்பான உறுதிகளை இந்தக் குழுவால் நிறைவேற்ற முடியாது என்று ஐ.நா. நிபுணர் குழுவின் அறிக்கை கூறுகிறது.

இலங்கையில் இப்போது நிலவும் அரசியல் சூழலில் எல்எல்ஆர்சியால் நீதியை வழங்க முடியும் என்று நம்பிக்கையில்லை. அரசியல் அதிகாரங்கள் அனைத்தும் அதிபரிடமே குவிந்து கிடக்கின்றன. நாட்டின் தலைமை வழக்கறிஞரிடமிருந்து அதிகாரங்கள் பறிக்கப்பட்டிருக்கின்றன. அவசர காலச் சட்டம், பயங்கரவாத ஒழிப்புச் சட்டம் ஆகியவையும் நீதி கிடைப்பதில் தடைக்கற்களாக உள்ளன என ஐ.நா. அறிக்கை சுட்டிக்காட்டியிருக்கிறது.

பரிந்துரைகள்

கடமைப்பொறுப்பு தொடர்பாக பான்-கி-மூன், இலங்கை அதிபர் ஆகியோரிடையே ஏற்பட்டிருக்கும் ஒத்துழைப்பு ஆக்கபூர்வமானதாக அமைய வேண்டுமானால் கீழ்க்கண்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என ஐ.நா. குழு பரிந்துரை செய்திருக்கிறது.

ய் போர்க்காலத்தில் நடந்ததாகக் கூறப்படும் மனிதநல மற்றும் மனித உரிமைக் குற்றங்கள் குறித்து நியாயமான விசாரணையை அரசு உடனடியாகத் துவக்க வேண்டும்.

ய் வன்னி போரில் பாதிக்கப்பட்டவர்கள், தப்பியவர்கள் ஆகியோருக்கான குறுகிய கால நடவடிக்கைகளை செயல்படுத்த வேண்டும். அரசு மற்றும் துணை ராணுவப் படையினரின் அத்துமீறல்களை நிறுத்துவது, போரில் இறந்து போனவர்களின் உடல்கள், அஸ்தி உள்ளிட்டவற்றை உறவினர்களிடம் ஒப்படைப்பது, இறந்து போனவர்களுக்கான இறப்புச் சான்றிதழ்களை உரிய மரியாதையுடன் எந்தக் கட்டணமும் இல்லாமல் வழங்குவது, போரில் பிழைத்தவர்களுக்குத் தேவையான மனநல ஆலோசனைகளைத் தருவது, முகாம்களில் வசிப்பவர்களை உடனடியாக விடுவிப்பது, மறுகுடிமயர்வுப் பணிகளை மேற்கொள்வது, இடைக்கால நிவாரண உதவிகளைச் செய்வது போன்றவை இதில் அடக்கம்.

ய் கடத்தப்பட்டு பின்னர் மாயமானவர்கள் தொடர்பான உண்மை நிலையை அறிவிக்க வேண்டும்.

ய் அவசர நிலையைத் திரும்பப் பெற வேண்டும். சர்வதேச சட்டங்களுக்குப் பொருந்தும் வகையில் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தில் உரிய திருத்தங்களைச் செய்ய வேண்டும்.

ய் விடுதலைப் புலிகள் என்கிற சந்தேகத்தின் பேரில் பிடித்து வைக்கப்பட்டிருப்பவர்களின் பெயர்களை வெளியிட வேண்டும். அவர்கள் மீது சட்ட ரீதியாகவே நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். நீதிமன்றத்தில் அவர்கள் சார்பில் வழக்குத் தொடுப்பதற்கு குடும்பத்தினருக்கு அனுமதி அளிக்க வேண்டும். கொடிய குற்றங்களுக்கான ஆதாரங்கள் இல்லாதவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்.

ய் அரசே நிகழ்த்தும் வன்முறைகளை நிறுத்த வேண்டும். மக்கள் கூடுவதற்கும், இடம்பெயர்வதற்கும், கருத்துகளைத் தெரிவிப்பதற்கும் எதிராக நடவடிக்கைகள் எடுப்பது நிறுத்தப்பட வேண்டும்.

ய் சில நீண்டகால நடவடிக்கைகளையும் ஐ.நா. குழு பரிந்துரை செய்திருக்கிறது. இனப் பிரச்னை, பல்வேறு மனித உரிமை மீறல்கள் நடந்த கடுமையான போர் உள்ளிட்டவை தொடர்பாக அனைத்து சமூகத்தினரும் பங்கேற்று ஆய்வு செய்யும் நடவடிக்கைகளை அரசு உடனடியாகத் தொடங்க வேண்டும்.

ய் இறுதி கட்டப் போரில் பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் கொல்லப்பட்டது தொடர்பாக அரசு தனது பொறுப்பை ஏற்று, அதுபற்றி அதிகாரப்பூர்வமாக அறிவிக்க வேண்டும்.

ய் போரின்போது நடந்த மனித உரிமை மீறல்களால் பாதிக்கப்பட்டோருக்கு உதவும் வகையிலான திட்டங்களை அமல்படுத்த வேண்டும். பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு இதில் சிறப்புக் கவனம் அளிக்கப்பட வேண்டும்.

இந்தப் பரிந்துரைகள் மூலம் ஐ.நா. பொதுச் செயலருக்கும் இலங்கை அதிபருக்கும் இடையேயான ஒத்துழைப்பை உறுதி செய்ய முடியும் என ஐ.நா. குழு கூறியிருக்கிறது. பாதிக்கப்பட்டோருக்கு நீதியும், மரியாதையும் கிடைப்பதற்கும் இலங்கையில் அமைதி ஏற்படுவதற்கும் இந்தப் பரிந்துரைகள் உதவும் என்றும் ஐ.நா. குழு நம்பிக்கை தெரிவித்திருக்கிறது. ஏதோ ஒரு வகையில் இலங்கையின் இனப்படுகொலைக்கு நீதி கிடைக்கும் என்கிற எதிர்பார்ப்பில் தமிழினம் காத்திருக்கிறது.

காத்திருக்கும் கடமைகள்..

ஓருவழியாகத் தேர்தல் திருவிழா ஓய்ந்துவிட்டது. பலருக்குக் கிலியும், சிலருக்கு வலியும் இத்தேர்தல் ஏற்படுத்தியது என்றால் அதில் வியப்பில்லை. எனவே ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றுவது யார் என்பது மட்டுமே அடுத்த கட்ட எதிர்பார்ப்பு.

இதுவரை எப்படி நடந்ததோ அது இம்முறை மாறிவிட்டது என கூறும் அளவுக்கு தேர்தல் ஆணையத்தின் கெடுபிடி இருந்தது. நினைத்ததை முழுவதுமாக சாதிக்கமுடியாவிட்டாலும், இனி வரும் தேர்தலில் இந்த பயம் நிச்சயம் இருக்கும். அதுவரை ஜனநாயகத்துக்கு வெற்றி என்றே கருதலாம்.

அதைச் செய்வேன், இதைச் செய்வேன் எனக் கூறியவர்கள் அதிகாரத்துக்கு வந்ததும் முதலில் செய்ய வேண்டியது என்னவாக இருக்க வேண்டும் என்பதுதான் அடுத்தகேள்வி.

இப்போதைய எதிர்பார்ப்பு புதிதாகப் பொறுப்பேற்கவுள்ள அரசு பல சவால்களை எதிர்நோக்க வேண்டியிருக்கிறது. அவர்களுக்குக் காத்திருக்கும் கடமைகள் ஏராளம்.

ஏழைகளின் பிரச்னைகளை முதலில் தீர்க்க வேண்டும். மாறாக தனிமனித வெறுப்புகள், பழிவாங்கல்கள் இருக்கக் கூடாது.

கடந்தமுறை செயல்படுத்தாமல் நிறுத்தப்பட்டவை அல்லது புதிய திட்டங்களை உடனடியாக நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கவேண்டும். இதுதவிர, மக்கள் எதிர்பார்க்கும் பல்வேறு பிரச்னைகளை புதிய அரசு தீர்க்க வேண்டியது மிக அவசியம்.

இப்போதைய தலையாய பிரச்னையாக இருப்பது மின்வெட்டு. இதைத் தவிர்ப்பதற்கு உடனடியாகச் செய்ய வேண்டியவை அதிக அளவில் சூரிய ஒளி மின்சாரத்தைப் பயன்பாட்டுக்குக் கொண்டுவரலாம். மேலும் தனியார் உதவியுடன் அனல் மின்நிலையங்களை ஆங்காங்கே அமைத்து சிறிய அளவில் உற்பத்தி செய்வது.

பெரும்பாலான கிராமங்களைத் தொண்டு நிறுவனங்கள், வர்த்தக நிறுவனங்கள் உள்ளிட்டவைகள் தத்தெடுத்து மின்தடையே இல்லாமல் செய்ய மாநில அரசு அதிக உதவி அளிக்கலாம்.

அடுத்ததாக, தலைக்குமேல் தொங்கும் கத்தியாக இருப்பது பள்ளி, கல்லூரி கல்விக் கட்டண விவகாரம். தனியார் பள்ளிகளின் பகல் கொள்ளையைத் தடுக்க உடனடியாகச் சட்டம் இயற்றி மாநில அரசு நேரடிக் கட்டுப்பாட்டில் கொண்டுவந்து அனைத்துக் கல்வி நிறுவனங்களின் கட்டண விவரங்களைக் கண்காணிக்க வேண்டும்.

வேலைவாய்ப்பகங்களில் பதிவு மூப்பு அடிப்படையில் காலிப்பணியிடங்களை நிரப்பத் தக்க நடவடிக்கை தேவை. தேர்தலின்போது பல கிராமங்களில் வேட்பாளர்களுக்குப் பெரிதும் தலைவலியாக இருந்தது சாலை, குடிநீர், போக்குவரத்து, சுகாதார வசதிகள் இல்லாததுதான். எனவே, இந்த அடிப்படை வசதிகளை மேற்கொள்ள விரைவான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ரேஷனில் குறைந்த விலையில் அத்தியாவசியப் பொருள்கள் வழங்கப்பட்டாலும் அதில் முறைகேடுகள் பெருமளவில் காணப்படுகின்றன. அதைக் களைய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், பொருள்கள் வழங்க பெரும்பாலான ரேஷன் கடைகளில் ஊழியர்கள் கிடையாது. அவர்களை நியமிப்பதன் மூலம் இதுபோன்ற தவறுகள் களையப்படலாம்.

தமிழகத்தின் பல பகுதிகளில் ஆறுகளிலிருந்து மணல் கடத்தப்படுவதும், கனிம வளங்கள் கடத்தப்படுவதும் இன்னும் முழுவதுமாக நிறுத்தப்படவில்லை. அதைத் தடுத்து இயற்கை வளத்தைக் காப்பாற்ற வேண்டும்.

விவசாயிகளுக்கு உரிய நிவாரணம், மானிய உதவி, வேளாண்மை உற்பத்திக்குப் புதிய யுக்திகள், கரும்பு, நெல் போன்ற பயிர்களுக்கு நியாயமான கொள்முதல் விலை, வெங்காயம், மஞ்சள், பூண்டு போன்ற வேளாண் பொருள்கள் தட்டுப்பாடின்றிக் கிடைக்க விவசாயிகளுக்கு தகுந்த ஊக்கமும், உதவியும் அளிக்க வேண்டியது கட்டாயம்.

ரவுடிகள் தொல்லை, கட்டப்பஞ்சாயத்து, கொலை, ஆள் கடத்தல் போன்ற சம்பவங்கள் நடக்காமல் சட்டத்தைக் கடுமையாக்கலாம். அரசியல் தலையீடு இல்லாமல் அதிகாரிகள் தங்கள் கடமைகளைச் செய்யும் வகையில் பாரபட்சமில்லாத ஆட்சி அமைந்தால் மக்கள் நம்பிக்கை வீண் போகாது.