murali83bdu@gmail.com. Powered by Blogger.

Monday, July 11, 2011

பெருந்தலைவர் காமராஜர்


வாழ்க்கை வரலாறு

பெருந்தலைவர் காமராஜர் அவர்கள் விருதுநகரிலே ஒரு வியாபாரக் குடும்பத்திலே பிறந்தவர் ஆவார். அந்தக் காலத்தில் அந்த ஊருக்குப் பெயர் விருதுப்பட்டி.

காமராஜர் தாயார் பெயர் சிவகாமி அம்மாள். தந்தையின் பெயர் குமாரசாமி நாடார். அவர் விருதுப்பட்டியிலே தேங்காய் மொத்த வியாபாரம் செய்து வந்தார். சிவகாமி அம்மாளுக்கு இரண்டு சகோதரர்கள். ஒருவர் கருப்பையா நாடார். – இவர் துணிக்கடை வைத்திருந்தார். மற்றொருவர் பெயர் காசிநாராயண நாடார். இவர் திருவனந்தபுரத்திலே மரக்கடை வைத்து நடத்தி வந்தார்.

1903- ஆம் வருடம், ஜுலை மாதம் 15-ஆம் தேதி, காமராஜர் பிறந்தார். அவருக்கு குல தெய்வமான காமாட்சியம்மாளின் பெயரையே முதலில் சூட்டினார்கள்.

கண்ணனைப் பாரதி ”கண்ணம்மா” ஆக்கி அழைத்துப் பாடிப் பரவசப்பட்டதுபோல் ஆணாகப் பிறந்த காமராஜரை ”காமாட்சி” ஆக்கி அனைவரும் அழைத்து மகிழ்ந்தார்கள்.

தாயார் சிவகாமி அம்மாள் மட்டும், தன் செல்லக் குழைந்தையை ”ராஜா” என்றே அழைத்து வந்தாள். நாளடைவில் காமாட்சி என்ற பெயர் மாறி, ‘காமராஜ்’ என்று ஆனது.

காமராஜருக்குப் பின்னர், சிவகாமி அம்மாள் ஒரு பெண் குழந்தையைப் பெற்றெடுத்தார்.நாகம்மாள் என்று அந்தக்குழந்தைக்குப் பெயர் சூட்டினார்கள். காமராஜரும் தங்கையிடம், அன்பும் பாசமும் கொண்டிருந்தார்.

காமராஜர் தனது பள்ளிப் படிப்புக்காலங்களிலேயே, இளம் வயதிலேயே, விருதுப்பட்டியில் நடந்த பொதுக்கூட்டங்களுக்குப் போகலானார். ஆங்கிலேயர்கள் இந்தியாவை அடிமைப்படுத்தி ஆண்டு கொண்டிருந்த காலம் அது. காமராஜர் இளம் வயதில் கேட்ட பொதுக் கூட்டங்களே அவரைப் பிற்காலத்தில் சுதந்திரப் போராட்ட வீரராகக் மாற்றியது.

”தந்தையொடு கல்விபோம்” – என்பதற்கு ஒப்ப, காமராஜரின் தந்தை குமாரசாமி நாடாரின் மறைவிற்குப் பின் காமராஜரின் பள்ளிப்படிப்பு முற்றுப்பெற்றது. வியாபாரங்களில் ஈடுபட்டார். முதலில் துணிக்கடையிலும், பின்னர் திருவனந்தபுரத்தில் மரக்கடை வைத்து நடத்திய காசியாராயண நாடார் மரக்கடையிலும் சிறிது காலம் வியாபாரத்தில் ஈடுபட்டார். அவரது கவனமெல்லாம் தேச விடுதலையிலேயே இருந்தது. வைக்கம் போராட்டத்தில் கலந்து கொண்டார். உப்புச் சத்தியாகிரகத்தில் பங்கு பெற்றார்.

காலப்போக்கில் காமராஜர், சத்தியமூர்த்தி தொண்டனாகி, காங்கிரஸ் பேரியக்க உறுப்பினராகி முழு நேரத் தேசப்பணிக்குத் தன்னை அர்ப்பணித்துக்கொண்டார். விடுதலைப் போரில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார்.

கள்ளுக்கடை மறியல், அந்நியத் துணிகள் பகிஷ்காரம், கொடிப் போராட்டம், உப்பு சத்தியாக்கிரகம், சைமன் கமிஷன் எதிர்ப்பு ஆகியவற்றில் காமராஜர் பங்கேற்றுச் சிறை தண்டனை பெற்றார்.. அடுத்தடுத்துப் போராட்டங்கள் அனைத்திலும் ஈடுபட்டு பலமுறை சிறை தண்டனைகளை அனுபவித்தார் காமராஜர்..

தமிழ்நாடு காங்கிரஸில், ”காமராஜர் காங்கிரஸ்” என்ற நிலை உருவாகியது. காமராஜர் தனது தியாகத்தாலும், சலியாத உழைப்பாலும், தொண்டுகளினாலும் உயர்ந்த நிலையை அடைந்தார்.

1952-ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் காமராஜர் சாத்தூர் தொகுதியில் நின்று வெற்றி பெற்றார். சுமார் பன்னிரண்டு ஆண்டுகாலம் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக இருந்து தமிழ்நாட்டிலே காங்கிரஸ் பேரியக்கத்திற்குப் பெரும் செல்வாக்கை ஏற்படுத்தித் தந்தார்.

1954- ஆம் ஆண்டு காமராஜர் தமிழ்நாட்டின் முதல் அமைச்சர் ஆனார். தலைவர் பதவியைத் துறந்தார். நாடாளுமன்ற உறுப்பினர் பதவியையும் துறந்தார். குடியாத்தம் தொகுதியில் சட்டசபைக்குத் தேர்தலில் நின்று வெற்றி பெற்றார். மேல்சபை உறுப்பினராகி அவர் முதல் அமைச்சர் பதவியை வகித்திருக்கலாம். குறுக்கு வழியில் உள்ளே புகுந்து கொள்ள என்றும் விரும்பாத பெருந்தலைவரே கு. காமராஜர்.

இங்கே நான் காமராஜர் தமிழ்நாட்டின் முதல் அமைச்சராகிச் செய்த சாதனைகளையே பட்டியலிட்டு காட்ட முன் வந்திருக்கிறேன். அதிகம் படிக்காத பெருந்தலைவர் காமராஜர் கல்விக்குச் செய்த சாதனைகள் எண்ணிலடங்காதவைகளாகும். ஏழை, எளியவர், உயர்ந்தவர், தாழ்ந்தோர், ஆக எல்லோருக்கும் கல்வி-இலவசக் கல்வி – பட்டி, தொட்டிகளில் எல்லாம் பள்ளிக்கூடங்கள் – இலவச மதிய உணவுச் சீருடைகள், இப்படிப் பலதிட்டங்களைத் தீட்டி அமுல்படுத்தினார் காமராஜர். தமிழகத்தில் கல்விச் செல்வம் பெருகியது. கிராமங்கள் தோறும் ஓராசியர் பள்ளிகள் திறக்கப்பட்டன.

கல்விக் கேள்விகளில் மட்டும் சிறந்து விளங்கினால் போதுமா? நாட்டிலே பஞ்சம், பசி, வேலையில்லாத் திண்டாட்டங்கள் விலகி விடுமா? சிந்தித்தார் காமராஜர். திட்டங்கள் தீட்டினார். நாட்டிலே புதுப் புதுத் தொழிற்சாலைகளை நிறுவச்செய்தார். தொழிற்கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்தார்.

காமராஜரின் திட்டங்களால் தமிழ்நாடு முன்னணியில் நின்றது. காமராஜரின் கல்வித் திட்டங்கள் நிறைவேற உடனிருந்து பாடுபட்டவர் அந்நாள் பள்ளிக் கல்வி இயக்குனர் திரு.நெ.து. சுந்தரவடிவேலு ஆவார்.

அதேபோல், காமராஜரின் தொழிற்திட்டங்கள் நிறைவேறக் காரணகர்த்தாவாக இருந்தவர் அன்றைய தொழில் அமைச்சர் திரு. ஆர். வெங்கட்ராமன் ஆவார்.

1957 – ஆம் ஆண்டு பொதுத் தேர்தலிலும் தமிழ்நாட்டில் காங்கிரஸ் அமோக வெற்றிப்பெற்றது. பெருந்தலைவர் காமராஜரே மீண்டும் தமிழ்நாட்டின் முதலமைச்சரானார்.

ஒன்பது ஆண்டுகாலம் தமழக முதலமைச்சராக இருந்த பெருந்தலைவர் காமராஜர், தான் கொண்டு வந்த கே. பிளான் மூலம் தானே முதலமைச்சர் பதவியைத் துறந்தார். அகில இந்திய காங்கிஸ் தலைவரானார்.

பெருந்தலைவர் காமராஜர் ஆண்ட காலத்தைத் தமிழ்நாட்டின் பொற்காலம் என்பார்கள். அந்தக் காலத்தை உங்கள் பார்வைக்கும், படிப்புக்கும் கொண்டு வருவதற்காகவே இந்நூல் வெளியிடப்படுகிறது.

”காமராஜரின் சாதனைகள்” என்னும் இந்த நூலினைக் காமராஜர் நூற்றாண்டு விழா, ஆண்டிலே வெளியிட்டு இருப்பது குறிப்பிடத்தக்கதும், பெருமைக்கு உரியதுமாகும்.

பெருந்தலைவர் காமராஜர் சாதனைகளைப் பிள்ளைகள் மட்டுமின்றிப் பெரியவர்களும் படித்துத் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதே என்னுடைய ஆசை.

முதலமைச்சராகக் காமராஜர் தமிழகத்தில் ஒன்பது ஆண்டுகாலம் நல்லாட்சி புரிந்தார். கல்விக்கும், தொழிலுக்கும்,காங்கிரஸ் கட்சிக்கும் அவர் செய்த சாதனைகள் கணக்கில் அடங்காதவைகளாகும்.

விருதுநகரிலே ஒரு சாதாரணக் குடும்பத்தில் பிறந்து, போதிய கல்வி கற்கவும் வசதியற்ற சூழ்நிலையிலே வளர்ந்து, வாழ்ந்து, பின்னர் அரசியலிலே தொண்டராக ஒரு மாபெரும் கட்சியிலே இணைந்து, தனது உழைப்பால், தொண்டால் படிப்படியாக உயர்ந்தவர் தான் பெருந்தலைவர் காமராஜர். அவரது சாதனைகள் யாவுமே சரித்திர முக்கியத்துவம் வாய்ந்தவைகள்.

நாட்டுபற்று

இளம் வயதிலேயே நாட்டுபற்று கொண்ட காமராஜர், செய்தித் தாள்களைத் தினமும் படித்து அரசியல் பற்றி தெரிந்து கொண்டார்.

நாட்டின் விடுதலைக்காக மக்கள் அப்போது போராடி வந்தார்கள். விடுதலைக்காகப்போராடுபவர்களை வெள்ளையர்கள் சிறை பிடித்தார்கள். கொடுமைப்படுத்தினார்கள்.

இந்நிலையில்தான் 1920 ஆம் ஆண்டு அவர் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி நடத்திய ஒத்துழையாமை இயக்கம் மற்றும் சட்ட மறுப்பு இயக்கத்தில் தீவிரமாகக் கலந்து கொண்டார்.

திருவனந்தபுரத்தில் மரக்கடை வியாபாரம் செய்யும் இன்னொரு தாய்மாமனாரான காசிநாடாரின் கடைக்கு அனுப்பினால் காமராஜரின் கவனம் தொழில் மீது பதியும் எனக் கருதிய தாய் சிவகாமி அம்மாள். காமராஜரைத் திருவனந்தபுரத்திற்கு அனுப்பி வைத்தார்.

காமராஜர் திருவனந்தபுரம் வந்த நேரத்தில் கேரளாவில் சாதிப் போராட்டங்கள் நடந்தன. இனவேற்றுமைக்கொடுமைகள் நீங்க ஈ.வெ.ரா. பெரியார் வைக்கம் போராட்டத்தை நடத்தினார். காமராஜர் அந்தப் போராட்டத்தை நடத்தினார். காமராஜர் அந்தப் போராட்டத்தில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். கேரளாவில் நடந்த எல்லா சுதந்திரப் போராட்டங்களிலும் கலந்து கொண்டு நாட்டு விடுதலைக்காகப்போராடினார்.

இதனால் காமராஜரின் கவனம் திசை திரும்பியது. தாய் மாமனார் மனம் வருந்தினார். விருதுபட்டியில் தொழிலில் கவனம் இல்லையென்று திருவனந்த புரத்திற்கு அனுப்பி வைத்தார்கள். ஆனால் இங்கு இப்படி தொழிலில் கவனம் இல்லாமல் காமராஜ் இருக்கிறாரே என எண்ணி மீண்டும் காமராஜரை விருதுப்பட்டிக்கு அனுப்பி வைத்தார்.

Wednesday, July 6, 2011

ஒடுக்கப்பட்ட மக்களின் ஒப்பற்ற தலைவன் இரட்டைமலை சீனிவாசன்

ஒடுக்கப்பட்ட மக்களின் ஒப்பற்ற தலைவன் இரட்டைமலை சீனிவாசன்இரட்டைமலை சீனிவாசன் அவர்கள் பழைய செங்கல்பட்டு மாவட்டத்தில் மதுராந்தகத்திற்கு அருகில் உள்ள கோழியாளம் என்கிற சிற்றூரில் 07.07.1859இல் பிறந்தார். தெய்வபக்தி மிகுந்த குடும்பத்தில் பிறந்ததால் இவருக்குச் சீனிவாசன் எனப் பெயரிட்டனர்.

தொடக்கப்பள்ளியில் தந்தையின் பெயரின் முன் எழுத்திற்குப் பதிலாகத் தந்தையின் முழுப்பெயரையும் சேர்த்து எழுதிவிட்டார்கள். அதனால் இரட்டைமலை சீனிவாசன் ஆனார்.

கோழியாளத்திலிருந்து இவருடைய விவசாயக் குடும்பம் வறுமை காரணமாகவும் சாதியக் கொடுமை காரணமாகவும் தஞ்சை நோக்கி ஓடியது. அங்கு அதைவிடக் கொடிய சாதிய அடக்குமுறை தாண்டவமாடியது. அங்கிருந்து கோயம்புத்தூர் சென்றனர்.

இரட்டைமலை சீனிவாசன் 1939இல் அவருடைய தன் வரலாற்றை அவரே சுருக்கமாக எழுதி ”திவான் பகதூர் இரட்டைமலை சீனிவாசன் அவர்கள் ஜீவிய சரித்திர சுருக்கம்” என்ற பெயரில் 30பக்க நூல் ஒன்றை வெளியிட்டார். இதனால் ஓரளவு அவரது இளமைக்காலம் குறித்தும்அவருடைய அரசியல் மற்றும் சமூகப் பணிகள் குறித்தும் அறிந்துகொள்ள முடிகிறது.

கோயம்புத்தூரில் இவர் கல்வி பயின்ற பள்ளியில் சுமார் 400 மாணவர்களில் 10 மாணவர்கள் தவிர மற்ற அனைவருமே பார்பபன மாணவர்கள் எனத் தன் வாழ்க்கைச் சுருக்கத்தில் அவரே எழுதியுள்ளார். வறுமை காரணமாக பள்ளிக் கல்வியோடு இவர் படிப்பை முடித்துக் கொண்டார். தீண்டாமைக் கொடுமைக்கு எப்படி முற்றுப்புள்ளி வைப்பது என்பதைப் பற்றியே எந்நேரமும் எண்ணிக் கொண்டிருந்தார் 1887ஆம் ஆண்டில் ரெங்கநாயகி அம்மாளைத் திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு 2 பெண்பிள்ளைகளும் 4 ஆண்பிள்ளைகளும் பிறந்தனர்.

நீலகிரியில் ஓர் ஆங்கிலேயர் கம்பெனியில் எழுத்தராக வேலைக்குச் சேர்ந்தார். பத்து ஆண்டுகள் அங்கு பணியாற்றிய பின் 1890இல் சென்னைக்கு வந்தார்.

1891இல் பறையர் மகாசன சபையைத் தோற்றுவித்தார். 1893 -1900 வரை பறையன் என்ற திங்கள் இதழை நடத்தினார்.

இதே காலகட்டத்தில்தான் 1.12.1891இல் பண்டித அயோத்திதாசர் நீலகிரியில் திராவிட மகா சபையின் முதல் மாநாட்டைக் கூட்டினார். அதில் 10 தீர்மானங்கள் நிறைவேற்றி ஆங்கில அரசுக்கும், காங்கிரசுக் கட்சிக்கும் அனுப்பிவைத்தார். 1892இல் அதை ஆதித் திராவிட மகானசபை எனப் பெயர் மாற்றி பதிவும் செய்தார்.

அயோத்திதாசரின் முதல் மனைவி இறந்துவிட்ட பிறகு, இரட்டைமலை சீனிவாசனின் தங்கை தனலட்சுமியை இரண்டாவது மனைவியாகத் திருமணம் செய்துகொண்டார். ஆதித் திராவிடப் பெண்கள் படிக்காத அக்காலத்திலேயே இந்த அம்மையார் எட்டாம் வகுப்பு வரை படித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இரட்டைமலை சீனிவாசன் 1900ஆம் ஆண்டில் வேலை தேடித் தென்ஆப்பிரிக்கா சென்றார். அங்கு காந்தியடிகளுடன் பழக்கமேற்பட்டு காந்திக்குத் தமிழையும், திருக்குறளையும் கற்றுக் கொடுத்தார். அங்கு நீதிமன்றத்தில் ஆவணங்களை மொழிபெயர்த்துக் கூறும் வேலை பார்த்தார்.

இவர் தென்ஆப்பிரிக்காவில் இருந்தபோதே இங்கு 1916இல் பார்ப்பனரல்லாதார் இயக்கம் தோன்றியது. அதனை ஒட்டி 1917இல் ஆதித் திராவிட மகாசபை எம்.சி.இராஜா போன்றவர்களால் புதுப்பிக்கப்பட்டது.

மாண்டேகு செம்ஸ்போர்டு சீர்திருத்தப்படி 1920இல் நடைபெற்ற தேர்தலின் போது சென்னை மாகாண சட்டசபைக்குத் தாழ்த்தப்பட்டோரில் இருந்து 5 உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டனர். (1936வரை ஓர் அவை மட்டுமே இருந்தது. 1937 முதல் இரண்டு அவைகள் செயல்பட்டன.)

இரட்டைமலை சீனிவாசன் 1921இல்தான் தென்னாப்பிரிக்காவில் இருந்து திரும்பினார். அடுத்த இரண்டாவது பொதுத் தேர்தலின் போது 19.11.1923இல் இரட்டைமலை சீனிவாசன் எல்.சி.குருசாமி உள்ளிட்ட 10பேர் (தாழ்த்தப்பட்டோர்) சட்டசாயின் உறுப்பினர்களாக நியமனம் செய்யப்பட்டனர்.

1920 முதல் 1936 வரை தாழ்த்தப்பட்டோர் யாரும் எந்தத் தேர்தலிலும் போட்டியிடவில்லை. எல்லாநிலையிலும் நியமனம் மூலமாகவே உறுப்பினராக்கப்பட்டனர்.

22.08.1924இல் சட்டசபையில் இரட்டைமலை சீனிவாசன் ஒரு முக்கியமான தீர்மானத்தை முன்மொழிந்தார். அத்தீர்மானத்தை அரசும் ஏற்றுக்கொண்டது. அத்தீர்மானம் 24.02.1925 கெசட்டில் (பழழெ) வெளியிடப்பட்டது.

(அ) எந்த வகுப்பையாவது, சமூகத்தையாவது சேர்ந்த யாதொரு நபராகிலும், நபர்ளாகிலும் யாதொரு பட்டணம், அல்லது கிராமத்திலுள்ள எந்த பொது வழி (அ) தெரு மார்க்கமாயினும் நடப்பதற்கு ஆட்சேபணை இல்லையென்பதும்,

(ஆ) இந்த தேசத்திலுள்ள சாதி இந்துக்கள் எம்மாதிரியாகவும், எவ்வளவு மட்டிலும் யாதொரு அரசாங்க அலுவலகத்தின் வளாகத்திற்குள் போகலாமோ, யாதொரு பொதுக்கிணறு, குளம் அல்லது பொதுமக்கள் வழக்கமாய் கூடும் இடங்களைப் பயன்படுத்தலாமா அல்லது பொதுவான வேலை நடத்தப்பட்டு வருகின்ற இடங்கள், கட்டடங்கள் ஆகியன இவைகளுக்குள் போகலாமோ அம்மாதிரியாகவும் அம் மட்டிலும், தாழ்த்தப்பட்ட வகுப்பினைச் சேர்ந்த யாதொரு நபர் போவதற்காவது, உபயோகிப்பதற்காவது ஆட்சேபணை இல்லையென்பதும், அரசின் கொள்கையாகும் என்று அறிவிக்கப்பட்டது. இது அனைத்துத் துறைகளுக்கும், அலுவலர்களுக்கும் அனுப்பப்பட்டது. – சி.பி.காட்டோஸ் அரசுச் செயலாளர் (சட்டசபை விவாதக் குறிப்புகள், தொகுதி 19, பக்கம் 822-830)


இரட்டைமலை சீனிவாசன் சட்டசபையில் 1923 நவம்பர் முதல் 1939இல் சட்டசபைக் கலைக்கப்படும் வரை உறுப்பினராகப் பணியாற்றினார். அப்போது ஆதிதிராவிட மக்களின் சிவில் உரிமைகளுக்காக ஓயாது குரல் கொடுத்து வந்தார்.

20.01.1922இல் எம்.சி.இராசா சட்டசபையில் கொண்டு வந்த தீர்மானத்தின்படி பறையர், பள்ளர் என்ற பெயர் நீக்கப்பட்டு ஆதிதிராவிடர் என்ற பெயர் அரசால் ஏற்றுக்கொள்ளப்பட்டு அரசாயை எண் 817, 25.03.1922இல் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு ஆதித்திராவிடர் எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது.

பெயர் மாற்றம் செய்யப்பட்டு இரண்டு ஆண்டுகள் ஆகியும் பல பத்திரப் பதிவு அலுவலகங்களில் பறையன், பஞ்சமன் என்றே பதிவு செய்யப்படுகிறது. இதை அரசு உடனே தடுத்து நிறுத்த வேண்டும் என இரட்டைமலை சீனிவாசன் 25.08.1924இல் சட்டசபையில் முறையிட்டார்.
(சட்டசபை விவாதக் குறிப்புகள் தொகுதி 20 பக்கம் 280)

உடனடியாக தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அன்றைய முதல்வர் பனகல் அரசர் பதிலளித்தார்.

பரம்பரை மணியக்காரர்கள் உயர்சாதியினராக உள்ளனர். அவர்கள் சேரிகளுக்கு வருவதில்லை, எனவே பரம்பரை மணியக்காரர் முறையை நீக்கி அனைத்து சாதியினரும் – தாழ்த்தப்பட்டவர் உள்பட மணியக்காரராக வர வழிவகை செய்ய வேண்டும் எனச் சட்டசபையில் அரசுக்குக் கோரிக்கை வைத்தார். இதே கோரிக்கையை அருந்ததிய சாதி உறுப்பினரான எல்.சி.குருசாமியும் முன் வைத்தார்.
(சட்டசபை விவாதக் குறிப்புகள் தொகுதி-20 பகுதி-2 பக்கம்-896)


இவர்களின் கோரிக்கை 60 ஆண்டுகளுக்குப்பின் எம்.ஜி.ஆர். ஆட்சிக் காலத்தில் நிறைவேறியது.

06.02.1925 அன்று சட்டசபையில் பேசிய இரட்டைமலை சீனிவாசன், தெலுங்கு மொழி தாழ்த்தப்பட்டோரான மாலா, மாதிகாவை ஆதி ஆந்திரர் என அழைக்கும்போது புலையர், தீயர்களை ஏன் மலையாளத் திராவிடர் என அழைக்கக்கூடாது எனக் கேள்வி எழுப்பினார்.
(சட்டசபை விவாதக் குறிப்புகள் தொகுதி-22 பகுதி-1 பக்கம்-351)

ஆதித் திராவிடர்களின் முதல் மாகாண மாநாடு

ஆதித் திராவிடர்களின் முதல் மாகாண மாநாடு 29.01.1928இல் சென்னை பச்சையப்பன் கல்லூரியில் நடைபெற்றது. இரட்டைமலை சீனிவாசன் அவர்களைத் தலைமை ஏற்கும்படி வி.ஜி.வசுதேவப் பிள்ளை முன்மொழிந்து, வி.ஐ.முனிசாமிப் பிள்ளை வழிமொழிந்தவுடன் பலத்த கரவொலிக்கிடையே இரட்டைமலை சீனிவாசன் தலைமைப் பொறுப்பை ஏற்றுக் கொண்டார். எம்.சி. மதுரை பிள்ளை வரவேற்புரையாற்றினார். வரவேற்புக் குழுவின் தலைவர் என்.சிவராஜ் சிறப்புரையாற்றினார்.


இம்மாநாட்டின் முக்கிய நோக்கம் அப்போது இந்தியாவிற்கு வரவிருந்த சைமன் குழுவிற்கு அறிக்கை தயாரித்துக் கொடுப்பதற்கான குழு அமைப்பதும், ஆங்கில அரசிற்கு ஆதி திராவிடர்களின் தேவைகளை வலியுறுத்துவதும் ஆகும்.


இம்மாநாட்டில் ஆதி திராவிடர்களுக்குத் தனித் தொகுதி வேண்டும் என்றும், 21 வயது அடைந்த அனைவருக்கும் வாக்குரிமை அளிக்கப்பட வேண்டும் என்றும், கல்வி, வேலைவாய்ப்புகளில் ஆதி திராவிடர்களுக்கு உரிய பிரதிநித்துவம் அளிக்கப்பட வேண்டும். உயர் கல்வி உள்பட அனைத்துக் கல்வியும் இலவசமாக வழங்கப்பட வேண்டும் எனவும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. (குறிப்பு ் 1927 வரை பச்சையப்பன் கல்லூரியில் ஆதித் திராவிட மாணவர்களைச் சேர்த்துக்கொள்ளவில்லை. 1928இல் தான் முதன்முறையாக ஆதித் திராவிட மாணவர்களுக்கு கதவு திறக்கப்பட்டது. மதுரை பிள்ளை வரவேற்புரையில் பச்சையப்பன் கல்விக் குழுவிற்கு நன்றி தெரிவித்துக் கொண்டார்.)

இரட்டைமலை சீனிவாசன் அவர்கள் ஒவ்வோர் ஆண்டும் தவறாமல் பட்ஜெட் உரையின் மீது உரையாற்றுவது வழக்கம். அவரது முதல் பட்ஜெட் உரை 06.02.1925 அன்று தொடங்கியது.
ஆதித் திராவிட மக்களுக்குத் தேவையான நிதி ஒதுக்கீடு, கல்வி வளர்ச்சி, சுகாதார வளர்ச்சி, பஞ்சமி நில ஒதுக்கீடு போன்றவற்றை வற்புறுத்துவார். இவர் பெரும்பாலும் ஆங்கிலத்திலேயே பேசுவார். எம்.சி.மதுரை பிள்ளை, சாமி சகஜானந்தம் ஆகிய இருவர் மட்டும் சட்டசபையில் தமிழிலேயே பேசுவார்கள்.

இரட்டைமலை சீனிவாசனின் மற்றுமொரு முக்கிய தீர்மானம் மதுக்கடைகளை மூடவேண்டுமென்பது. கலால் வரி அதிகமாகக் கிடைப்பதால் ஆங்கில அரசு இந்தியா முழுவதும் நிறைய மதுக்கடைகளை திறந்து வைத்திருந்தது. இதில் உழைக்கும் மக்களான அடித்தட்டு மக்களின் பணம் உறிஞ்சப்படுவதைக் கண்டு மனம் வெதும்பினார். அறவே கடையை மூடச் சொன்னால் மூட மாட்டார்கள் என்பதால் குறைந்தபட்சம் விடுமுறை நாட்களிலாவது மதுக்கடைகளை மூடவேண்டும் என்று 24.09.1929இல் சட்டசபையில் ஒரு தீர்மானம் கொண்டு வந்தார். அதை அரசு ஏற்றுக்கொண்டது. (சட்டசபை விவாதக் குறிப்புகள், தொகுதி 50, பக்கம் 391 – 392)

1930–32களில் இலண்டனில் நடைபெற்ற வட்டமேசை மாநாடுகளில் இவர், அண்ணல் அம்பேத்கருடன் தாழ்த்தப்பட்ட மக்களின் பிரதிநிதியாகச் சென்று கலந்துகொண்டு சிறப்பாகப் பணியாற்றினார். காந்தியுடன் தென்னாப்பிரிக்காவில் இவருக்கு இருந்த நட்பைக் கொண்டு இலண்டனில் காந்தியுடன் நேரில் சந்தித்துப் பிரச்சினையைச் சுமூகமாக முடித்துவிட முயன்றார். ஆனால் பலன் இல்லை. அம்பேத்கருடன் இணைந்து காந்தியை எதிர்க்கத் தொடங்கினார். கடைசி வரையில் அண்ணல் அம்பேத்கருடனும், தமிழகத்தில் திராவிட இயக்கத்தினருடனும் நட்புணர்வுடன் செயல்பட்டு வந்தார்.

இலண்டன் வட்டமேசை மாநாட்டில் இரட்டைமலை சீனிவாசன் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு இரட்டை வாக்காளர் தொகுதி வழங்கப்பட வேண்டும் என்றும், தாழ்த்தப்பட்ட மக்களின் விகிதாச்சார அளவுக்கு ஏற்ப கல்வியிலும், வேலை வாய்ப்பிலும் உரிய பங்கு அளிக்கப்பட வேண்டும் என்பதையும் வலியுறுத்திப் பேசினார். (வட்டமேசை மாநாடு கூட்ட நடவடிக்கைக் குறிப்பு, தொகுதி 3, பக்கம் 18,19)

இதே கோரிக்கையை வலியுறுத்தி அண்ணல் அம்பேத்கரும் மிக விரிவாக வட்டமேசை மாநாட்டில் பேசினார். (வட்டமேசை மாநாடு கூட்ட நடவடிக்கைக் குறிப்பு, தொகுதி 3, பக்கம் 168,174)
இலண்டன் வட்டமேசை மாநாட்டில் இவர்கள் இருவரும் தயாரித்துக் கொடுத்த ஆவணம், தாழ்த்தப்பட்ட மக்களின் முழு உரிமையைப் பெற்றுத் தருவதாக அமைந்திருந்தது.

டாக்டர் சுப்பராயன் 1933 சனவரி 31ஆம் நாள் சென்னை சட்டசபையில் தாழ்த்தப்பட்டவர்களைக் கோயிலில் நுழைய அனுமதிக்கச் சட்டமியற்ற வேண்டும் என்று ஒரு தீர்மானத்தைக் கொண்டு வந்தார். இத்தீர்மானத்தை ஆதரித்து இரட்டைமலை சீனிவாசன் பேசினார்.

இத்தீர்மானம் சட்டசபை வாக்கெடுப்புக்கு விடப்பட்டது 56 வாக்குகள் தாழ்த்தப்பட்டோர் கோயில் நுழைவுக்கு ஆதரவாகவும் 19பேர் நடுநிலையாகவும் இருந்தனர். எதிர்ப்பின்றி இத்தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனால் பார்ப்பனர்களின் முட்டுக்கட்டை காரணமாக கவர்னர் ஜெனரல் ஒப்புதல் அளிக்காததால் இதைச் சட்டமாக்க முடியாமல் போய்விட்டது.

இரட்டைமலை சீனிவாசனை அவர்களை வட்டமேசை மாநாட்டிற்கு அழைத்துச் சென்று தம்மைப் புறக்கணித்து விட்டாரே என்ற கோபத்தில் எம்.சி.இராசா, அண்ணல் அம்பேத்கருக்கு எதிராக பூனா ஒப்பந்தத்தின்போது இந்து மகா சபைத் தலைவர் மூஞ்சேவுடன் சேர்ந்து கொண்டும்காந்திக்கு ஆதரவாகவும் செயல்பட்டு வந்தார்.

அண்ணல் அம்பேதகர் அவர்கள் 1935இல் மதமாற்றம் பற்றி அறிவித்தபோதும் கூட இரட்டைமலை சீனிவாசன், அம்பேத்கருடைய மனம் நோகாமல் மெதுவாக ”நாம் தான் இந்து மதத்தில் இல்லையே (அவர்ணஸ்தர்) வருணம் அற்றவர்கள் ஆயிற்றே, நாம் இந்துவாக இருந்தால் தானே மதம் மாற வேண்டும்” என்று அம்பேத்கருக்கு தந்தி மூலமாக தன் கருத்தைத் தெரிவித்தார்.

ஒடுக்கப்பட்ட மக்களுக்காகத் தன் வாழ்நாள் முழுவதும் பணியாற்றிவந்த தலைவர் இரட்டைமலை சீனிவாசன் 18.09.1945 அன்று மறைவுற்றார்.

Monday, June 27, 2011

ம.பொ.சி. என்ற மாமனிதர்!

ம.பொ.சி. என்ற மாமனிதர்!

உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு என்ற வீர வரியைத் தாரக மந்திரமாகக் கொண்டு ஓயாதுழைத்த உத்தமத்தலைவர் ம.பொ.சி. மூதறிஞர் இராஜாஜி காங்கிரஸ் கட்சியை விட்டு விலகியபோது, அவருக்கெதிராக எழுந்த புயல் போன்ற எதிர்ப்புக்கு ஈடு கொடுத்தவர் தளபதி ம.பொ.சி அவர்கள். ம.பொ.சிவஞானம் அவர்கள் 1906-ம் ஆண்டு ஜூன் மாதம் 26-ம் நாள் ஆயிரம் விளக்குப் பகுதியில் பிறந்தார். தந்தையின் பெயர் பொன்னுசாமி. தாயார் பெயர் சிவகாமி. இவரையும் சேர்த்து குடும்பத்தில் மொத்தம் 9 பிள்ளைகள்.

பள்ளியில் மூன்றாம் வகுப்பு வரை தான் படித்தார். அதற்கு மேல் படிக்க குடும்பத்தில் பண வசதி இல்லை. எனவே ஓர் இடத்தில் வேலையில் சேர்ந்தார். பின்னாளில் ம.பொ.சி தமிழில் சிறந்து விளங்கக் காரணம், இளமையில் அவரது தாயார் சொல்லிக் கொடுத்த அல்லியரசாணிமாலை, பவளக்கொடி மாலை போன்ற நூல்களேயாகும். தேவையான அளவிற்கு அவருக்கு ஆங்கில அறிவு இருந்தது.

1928-ம் ஆண்டு சைமன் கமிஷன் எதிர்ப்பு, 1932-ஆம் ஆண்டு சட்டத்தை மீறி ஊர்வலம், ஆங்கில அரசை எதிர்த்து எழுதப்பட்ட துண்டுப் பிரசாரங்களை வழங்கியதற்காகவும், பல மாதங்கள் சிறைத் தண்டனை பெற்றார். விடுதலைப் போரில் 1928 முதல் 1947 வரை ஆறு முறை சிறைத் தண்டனை அனுபவித்தார். இன்று மாநில சுயாட்சி பற்றிப் பேசப்படுகிறது. மாநில சுயாட்சி என்னும் தத்துவத்தை முதன் முதலாகச் சிந்தித்து தமிழர்களுக்கு வழங்கிய தலைவர் ம.பொ.சி தான்.

காங்கிரஸின் எதிர்ப்பையும், திராவிடர் கழகத்தின் முயற்சியையும் முறியடிக்கத் "தமிழர் முரசு' என்னும் பெயரில் மாதப் பத்திரிகை ஒன்றை 1946-ம் ஆண்டு மே மாதம் வெளியிட்டார். 1956-ஆம் ஆண்டு நவம்பர் முதல் தேதி தமிழர் மாநிலம் தனியாக பிரித்து அமைக்கப்பட்டது. சென்னையை ஆந்திராக்காரர்கள் உரிமை கொண்டாடாமல் காப்பாற்றப்பட்டது. அதில் பெரும் பங்கு ம.பொ.சி.க்கு உண்டு.

1946-ம் ஆண்டே ம.பொ.சி தமிழகத்துக்கு சுயநிர்ணய உரிமை வேண்டுமென்று கோரினார். மாநில அரசின் எந்த அதிகாரத்திலும் மத்திய அரசின் மேலாதிக்கம் இருக்கக்கூடாது மாநிலங்களுக்குத் தனியே மாநிலக் கொடி, மாநில கீதம், அரசியலமைப்புச் சட்டம் எல்லாம் இருக்க வேண்டும் என்றார். அதற்கு எடுத்துக் காட்டாக, சோவியத்து யூனியன், அமெரிக்கா போன்ற நாடுகளை கூறினார்.

அந்த நாளில் தனித் திராவிட நாடு கேட்டவர்கள், மாநில சுயாட்சிக் கொள்கையைக் கேலி பேசினார்கள். நாங்கள் கேட்பது நாலணா, அதில் கிராமணியார் கேட்பது காலணாவாக இருக்கிறது என்றார்கள். பின்னர் திராவிடத் தனி நாடு கோரிக்கை கைவிடப்பட்டு மாநில சுயாட்சி கோரிக்கையை திராவிட இயக்கத்தாரும் ஏற்றுக் கொண்டது காலத்தின் கட்டாயம் என்றார் ம.பொ.சி.


""ம.பொ.சி தமிழுக்கும் தமிழினத்துக்கும் தமிழ்நாட்டை வாழ்விப்பதற்காக அவர் நடத்திய போராட்டங்களுக்காக அவரை நாங்கள் கையெடுத்துக் கும்பிடுகிறோம்'' என்றார் கம்யூனிஸ்ட் தலைவர் ஜீவா.

1952-இல் நடந்த முதல் பொதுத்தேர்தலில் காங்கிரஸ் வெற்றிக்கு அரும்பாடுபட்டார் ம.பொ.சி. இருப்பினும் பல கசப்பான சம்பவங்களுக்குப் பிறகு காங்கிரஸிலிருந்து வெளியேறினார். காங்கிரஸில் தாம் வகித்து வந்த அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் ஏன் சாதாரண உறுப்பினர் நிலையில் இருந்தும் கூட முற்றிலுமாக விலகிவிட்டார்.

"தமிழன் குரல்' என்ற இதழை 1954-55-ம் ஆண்டுகளில் ம.பொ.சி நடத்தி வந்தார். 1954-இல் சென்னை மாநகராட்சிக் கல்விக் குழுத்தலைவராக இருந்து மாநகராட்சியின் கொடியில் தமிழ் மூவேந்தரின் சின்னங்களாகிய வில், புலி, மீன் போன்ற சின்னங்களைப் பொறித்திடத் தீர்மானித்துப் பிறரையும் ஒப்புக்கொள்ள வைத்து வெற்றி பெற்றார்.

"மதராஸ் மனதே' என்று குரலெழுப்பி ஆந்திரர்கள் போராட்டம் செய்தனர். அப்போது மாநில முதலமைச்சராக இராஜாஜி இருந்தார். அவரது ஆதரவுடன் சென்னை மாநகரம் தமிழகத்தின் தலைநகராக நிலைநிறுத்திப் பாதுகாக்க ம.பொ.சி. அரும்பாடுபட்டார். ""தலையைக் கொடுத்து தலைநகரைக் காப்போம், காலைக் கொடுத்து கன்னியாகுமரியைக் காப்பாற்றுவேன்'' என்றார் ம.பொ.சி.

1954-ஆம் ஆண்டில் தேவி குளம், பீர்மேடு தாலுக்காக்களைத் தமிழகத்தோடு சேர்க்கப்பட்ட வேண்டும் என்று போராடினார்கள். மூணாறில் நேசமணி உள்ளிட்ட பலர் கைது செய்யப்பட்டனர். நாகர்கோவில் தெற்கெல்லைப் போராட்டம் தொடர்ந்தது. மூணாறு, நாகர்கோவிலில் இரண்டு இடங்களிலும் ம.பொ.சி முக்கியப் பங்கு வகித்தார். அப்போதைய கேரள முதல்வர் பட்டம் தாணுபிள்ளையின் ஆட்சி ஈவு இரக்கமின்றி 11 தமிழர்களைச் சுட்டுக் கொன்றது.
""ம.பொ.சி எந்தப் பணியைச் செய்தாலும், எத்துறையில் நின்றாலும் அவரது பேச்சும், மூச்சும் தமிழுக்காகவே இருக்கும்'' என்றார் முதல்வர் கருணாநிதி.

வீரபாண்டிய கட்டபொம்மன் கப்பலோட்டிய தமிழன் போன்ற தலைப்புகளில் நூல்களை எழுதினார். இவர் எழுதிய "வள்ளலார் கண்ட ஒருமைப்பாடு' என்ற நூலுக்கு சாகித்ய அகாதமி விருது கிடைத்தது. 3.10.1995-ம் ஆண்டு நம்மை விட்டுப் பிரிந்தார். சென்னையில் வாழ்ந்தவர்களுக்கும், தமிழ் மொழியை அறியாதவர்களுக்கும், தமிழர் அல்லாதவர்களுக்கும் சென்னையில் பல இடங்களில் சிலைகள் வைக்கப்பட்டிருக்கின்றன. ஆனால் தமிழுக்காகவும், தமிழர்களுக்காகவும், ஏன் இந்தியத் திருநாட்டின் விடுதலைக்காகவும், தன் வாழ்க்கையே அர்ப்பணித்துப் பாடுபட்ட அவருக்கு சென்னையில் ஒரு சிலையோ, ஒரு மணிமண்டபமோ, தெருவிற்குப் பெயரோ, நினைவுத் தூணோ வைக்கப்படவில்லை என்பதுதான் வேதனை

ம.பொ. சிவஞானம்

சிலம்புச்செல்வர் டாக்டர் ம.பொ. சிவஞானம் அவர்களின் வாழ்க்கைக் குறிப்பு
பிறப்பு
1906ஆம் ஆண்டு ஜூன் 26ஆம் நாள், சென்னை ஆயிரம் விளக்கு.

அரசியல்
உறுப்பினர், தமிழ் நாடு காரியக்கமிட்டி (1951-52)
துணைச் செயலாளர், சென்னை மாவட்டக் காங்கிரசுக் கமிட்டி(1936-37)
செயலாளர், சென்னை ஜில்லா காங்கிரசுக் கமிட்டி (1947-48)

தொழிலாளர் இயக்கம்
செயலாளர், சென்னை கள்ளிறக்கும் தொழிலாளர் சங்கம் (1934-38)
துணைத் தலைவர், சென்னை அச்சுத் தொழிலாளர் சங்கம் (1932-34
துணைத் தலைவர், சென்னை இராயபுரம் கணேஷ் அலுமினியம் தொழிலாளர் சங்கம் (1937-38)
தலைவர், சென்னை பட்டன் தொழிலாளர் சங்கம் (1936-37) மற்றும்
பல்வேறு தொழிலாளர் சங்கங்களுடன் தொடர்பு

சமூகப் பணி
செயலாளர், வட சென்னை அரிசன சேவா சங்கம் (1934-35)
பிரசாரகர், சென்னை அரிசன சேவா சங்கம் (1934-35)
செயலாளர், கிராமணிகுல மகாஜன சங்கம் (1934-37)
உறுப்பினர், போலீஸ் கமிஷன் (1976-77)
உறுப்பினர், தமிழ் நாடு அரசு பிற்பட்டோர் நலக் குழு (1968-71)
உறுப்பினர், தமிழ் நாடு அரசு கதர் கைத்தொழில் வாரியம்

எழுத்தாளர்
தலைவர், தமிழ் எழுத்தாளர் சங்கம் (1955-56)
தலைவர், தமிழ்நாடு தமிழ் எழுத்தாளர் மாநாடு, சென்னை (1955)
இது வரை 150 நூல்களை எழுதி வெளியிட்டுள்ளார்.

பட்டங்களும் பட்டயங்களும்
1950இல் பேராசிரியர் இரா.பி. சேதுப்பிள்ளை அவர்களால் ‘சிலம்புச் செல்வர்' என்ற பட்டம் வழங்கப்பட்டது
1966இல் ‘வள்ளலார் கண்ட ஒருமைப்பாடு' என்னும் நூல் சாகித்திய அகாடமியின் பரிசைப் பெற்றுள்ளது
1972இல் ஜனாதிபதியிடம் “பத்மஸ்ரீ” விருது பெற்றார்.
மற்றும் தமிழ் எழுத்தாளர் சங்கம், பாரதி சங்கம் ஆகியவற்றிடம் தமிழ்த் தொண்டிற்காக வெள்ளிக் கேடயங்கள் பெற்றார்.
1976இல் தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தாரால் ‘கலைமாமணி’ என்ற பட்டமும்
விருதும் வழங்கப் பெற்றன.
1976இல் சென்னையில் நடந்த முத்தமிழ் விழாவில் தமிழக முதல்வர் கலைஞர் மு. கருணாநிதி
அவர்களால் ‘இயற்றமிழ்ச் செல்வம்' என்ற பட்டம் வழங்கப்பெற்றது.
கல்வித் துறையில் ஆற்றிய பணிகளைப் பாராட்டும் வகையில் “யுனெஸ்கோ” சார்பில் இவருக்கு நற்சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.
‘டாக்டர்’ பட்டம் - சென்னைப் பல்கலைக் கழகத்தாலும் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தாலும் வழங்கப் பட்டது (1981-82).
1985இல் மதுரை காமராசர் பல்கலைக் கழகத்தால் ‘பேரவைச் செல்வர்' என்ற பட்டம் வழங்கப் பட்டது.

சிறை வாசம்
1928 முதல் 1947 வரை விடுதலைப் போரில் கலந்து கொண்டு, ஆறு முறை சிறைத் தண்டனை
பெற்றார்.
ஒரு முறை மத்தியப் பிரதேசத்திலுள்ள அமராவதிச் சிறையில் ஒரு ஆண்டுக் காலம்
அடைக்கப்பட்டார்.
தமிழக வடக்கெல்லைக் கிளர்ச்சியைத் தொடங்கி, அதிலே, 1953இல் தணிகையில் ஆறு வாரக்
கடுங்காவல் தண்டனை பெற்றார்.
1936இல் சென்னைச் சிறையில் ஒரு வாரம் காவலில் வைக்கப்பட்டார்.

காந்தியப் பணி
கதர் வளர்ச்சி, மது விலக்கு, தீண்டாமை ஒழிப்பு ஆகிய ஆக்கவழிப் பணிகளில் ஈடுபட்டு வந்துள்ளார்.
1984 முதல் கிண்டி காந்தி மண்டப நினைவு ஆலோசனைக் குழுவின் தலைவர்.

தமிழரசுக் கழகம்
1946 நவம்பரில் தமிழரசுக் கழகம் நிறுவி அதன் தலைவராகச் செயல்பட்டார்.
மொழிவாரி மாகாணப் பிரிவினைக் கிளர்ச்சியைத் தமிழகத்தில் தொடங்கி 1956இல் தமிழ் மாநிலம் அமையச் செய்தார்.
தமிழக வடக்கு - தெற்கு எல்லைக் கிளர்ச்சிகளை நடத்தி, வடக்கெல்லையில் ஒரு தாலுகாவும் ( தணிகை), தெற்கு எல்லையில் ஐந்து தாலுகாக்களும் (குமரி மாவட்டம் மற்றும் னெல்லை மாவட்டத்தின் செங்கோட்டை வட்டம்) தமிழகத்துடன் இணையக் காரணமானார்.
சென்னை மீது ஆந்திரர் உரிமை கொண்டாடியதை எதிர்த்துப் போராடி, “தலையைக் கொடுத்தேனும் தலைநகரைக் காப்போம்” என்று சென்னை மாநகராட்சிக் கூட்டத்தில் முழக்கம் செய்து, தலைநகரைக் காத்தார்.

உள்ளாட்சி மற்றும் சட்டமன்றப் பணி
ஆல்டர்மேன், சென்னை மாநகராட்சி (1948-55)
உறுப்பினர், சட்டமன்ற மேலவை (1952-54)
உறுப்பினர், சட்டமன்றப் பேரவை (1972-78)
தலைவர், சட்டமன்ற மேலவை (1978-86) (அக்.)

நூலக இயக்கம்
நிர்வாகி, சென்னை இராயபுரம் திருவள்ளுவர் வாசக சாலை (1930-32)
செயலாளர், சென்னை தண்டையார்பேட்டை நூலகம் (1941-42)
தலைவர், தமிழ் எழுத்தாளர் சங்க நூலகம்.
தலைவர், சென்னை மாவட்ட நூலக ஆணைக்குழு (1952-54 மற்றும்1972-74)
உறுப்பினர், தமிழ்நாடுஅரசு நூலக ஆணைக்குழு
நூலக இயக்கத்துக்கென தனித் துறையை நிறுவவும் தனி இயக்குநரை நியமிக்கவும் நூலக வரியை
3 காசிலிருந்து 5 காசுகளாக உயர்த்தவும் அரசைத் தூண்டி அதில் வெற்றி கண்டார்.

பல்கலைக்கழகப் பணிகள்
உறுப்பினர், சென்னைப் பல்கலைக் கழக செனட் சபை (1952-54)
உறுப்பினர், சென்னைப் பல்கலைக் கழக ஆட்சிக்குழு (1972-76)
உறுப்பினர், மதுரைப் பல்கலைக்கழக செனட் சபை (1967-69)
உறுப்பினர், அண்ணாமலைப் பல்கலைக்கழக செனட் சபை (1978)
உறுப்பினர், தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழக செனட் சபை
தலைவர், உறுப்பினர், சென்னைப் பல்கலைக்கழகப் பல்வேறு ஆய்வுக்குழுக்கள்.
சென்னை, மதுரைப் பல்கலைக் கழகங்களின் சார்பில் ஆறு முறை அறக்கட்டளைச் சொற்பொழிவுகள் ஆற்றியுள்ளார்.
தமிழ்ப் பல்கலைக்கழக ஆட்சி மன்ற உறுப்பினர் - தமிழ்ப் பல்கலைக்கழக வல்லுநர் குழு உறுப்பினர் (1983-86)

கல்வித் தொண்டு
தலைவர், சென்னை மாநகராட்சி கல்விக் குழு (1952-53)
ஆசிரியர், வடசென்னை முதியோர் ( கள்ளிறக்கும் தொழிலாளர்) கல்வி இரவுப் பள்ளி (1934-36)
வீர பாண்டிய கட்ட பொம்மன், கப்பலோட்டிய தமிழன், வள்ளலார் கண்ட ஒருமைப்பாடு ஆகிய நூல்கள் தமிழ் நாடு உயர்நிலைப் பள்ளிகளின் மேல் வகுப்புகளில் பாடமாக்கப்பட்டன.
‘கம்பன் கவியின்பம்' என்னும் நூல் மதுரைப் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த கல்லூரிகளில் பட்டப் படிப்புக்குப் பாடமாக்கப்பட்டது. பல்கலைக்கழகத்தால் மேல் பட்டப் படிப்புக்குத் தகவல் நூலாக வைக்கப் பட்டது.
‘பாரதியாரின் பாதையிலே' என்னும் நூல் சென்னைப் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த சென்னை, செங்கற்பட்டு மாவட்டங்களிலுள்ள கல்லூரிகளில் பட்டப் படிப்புக்குப் பாடமாக வைக்கப் பட்டுள்ளது.

பத்திரிகைப் பணி
கம்பாசிடர், டாக்டர் பி. வரதராஜுலு நாயுடுவின் ‘தமிழ்நாடு' பத்திரிகை அச்சுக்கூடம் (1927-34)
ஆசிரியர், “கிராமணி குலம்” (1934-37) மாதமிருமுறை
ஆசிரியர், தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் “பாரதி ” மாதப் பத்திரிகை (1955-56)
ஆசிரியர், “தமிழ் முரசு” (1946-51)
ஆசிரியர், “தமிழன் குரல்” (1954-55)
ஆசிரியர், “செங்கோல்” (1950-1995)

அயல்நாட்டுப் பயணம்
இலங்கைக்கு 1948இல் முதன் முதலாகச் சென்று 28 நாட்கள் அந்தத் தீவில் சுற்றுலாச் செய்தார். அதன் பின்னரும் 10க்கு மேற்பட்ட சந்தர்ப்பங்களில் சென்று திரும்பியுள்ளார்.
பர்மாவுக்கு 1956இல் சென்று 18 நாட்கள் சுற்றுலா செய்தார்.
மலேசியா, சிங்கப்பூர் நாடுகளில் 1964-லும், 1966-லும் சுற்றுலாச் செய்தார்.
மேற்கண்ட நாடுகளில் வாழும் தமிழ் மக்களிடையில் கலாச்சாரப் பிரச்சாரம் செய்துள்ளார்.
1965 இல் மலேசியத் தலைநகரான கோலாலம்பூரிலும் 1970இல் பிரான்ஸ் நாட்டின் தலைநகரான பாரிசிலும் நடந்த உலகத் தமிழ் மாநாடுகளில் தமிழக அரசின் பிரதிநிதியாகக் கலந்து கொண்டார்.
1970 இல் சோவியத் யூனியனால் அழைக்கப்பட்டு, அந்நாட்டில் 7 நாட்கள் சுற்றுலா செய்தார்.
1970இல் பாரிசில் உலகத் தமிழ் மாநாட்டில் கலந்துகொண்டு விட்டுத் திரும்புகையில், பிரிட்டனின் தலைநகரான இலண்டனில் 3 நாட்கள் தங்கி, நூலக இயக்கம் – காவல் துறை நிர்வாகம் ஆகியவற்றைப் பற்றி அறிந்து வந்தார்.
1986ஆம் ஆண்டில் இலண்டன், அமெரிக்கச் சுற்றுப் பயணம் செய்து, வெர்ஜீனியா மாகாணத்தில் உலக ஆன்மீக மாநாட்டில் கலந்துகொண்டார். அமெரிக்காவில் பல்வேறு மாநிலங்களில் மூன்று வாரம் சுற்றுப் பயணம் செய்தார்.

தமிழிசைப் பணி
1967 டிசம்பரில், தமிழ்ப்பண் ஆராய்ச்சி மாநாட்டைத் தொடங்கி வைத்துப் பேசினார்.
1978 டிசம்பரில் சென்னையில் தமிழிசை விழாவைத் தொடங்கி வைத்துப் பேசினார்.
1982-83 தமிழ்நாடு அரசால் நியமிக்கப்பட்ட மகாகவி சுப்பிரமணிய பாரதியாரின் நூற்றாண்டு விழாக்குழுத் தலைவராக நியமிக்கப்பட்டார்.

மறைவு
1995ஆம் ஆண்டு அக்டோபர் 3ஆம் நாள், சென்னை மயிலாப்பூர்.

Thursday, June 16, 2011

ஆஷ் கொலையின் நூறாவது நினைவு தினம்:

இன்று ஆஷ் கொலையின் நூறாவது நினைவு தினம்: ஆஷ் குடும்பத்தினர் உருக்கமான கடிதம்
சென்னை: சுதந்திரப் போராட்டத்தில் ஆங்கிலேய கலெக்டர் ஆஷ், சுட்டுக் கொல்லப்பட்ட நூறாவது ஆண்டையொட்டி, சுட்டுக் கொன்ற வாஞ்சிநாதன் குடும்பத்துக்கு, அயர்லாந்தில் வசிக்கும் ஆஷ் குடும்பத்தினர் உருக்கமான கடிதம் எழுதியுள்ளனர். "பழையவற்றை மறந்து சமாதானத்துடன் வாழ்வது முக்கியமானது' என்று, கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆங்கிலேயர் ஆட்சியில் நெல்லைக் கலெக்டராக இருந்த ராபர்ட் வில்லியம் ஆஷை, வாஞ்சிநாதன் 1911 ம் ஆண்டு ஜூன் 17 ல் காலை 10.30 மணிக்கு, நெல்லை மாவட்டம் மணியாச்சியில் சுட்டுக் கொன்றார். சுதந்திரப்போராட்டத்தில் முக்கிய நிகழ்வாக இது பதிவானது. இந்த நிகழ்ச்சிக்குப்பின் ஆஷின் குடும்பத்தினர் சொந்த நாட்டுக்குச் சென்று விட்டனர். கொல்லப்பட்ட கலெக்டர் ஆஷ்க்கு இரண்டு மகன் மற்றும் இரண்டு மகள்கள். இதில் ஒரு மகன் இரண்டாம் உலகப்போரில் மரணமடைந்தார். இரண்டு மகள்களும் திருமணம் செய்துகொள்ளவில்லை. ஒரு மகன் அயர்லாந்து நாட்டில் டப்ளின் நகரம் அருகே இக்ளோ என்ற ஊரில் குடும்பத்துடன் வசித்தார். அவரது மகன் அதாவது ஆஷின் பேரன் ராபர்ட் ஆஷ். அயர்லாந்தில் வக்கீலாக பணியாற்றுகிறார். சுதந்திரப் போராட்ட வீரர் வ.உ.சிதம்பரம் குறித்து, சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி மையத்தில் ஆய்வு செய்த பேராசிரியர் எ.ஆர். வெங்கடாசலபதி கடந்த 2006 ம் ஆண்டு ஆஷின் பேரன் ராபர்ட் ஆஷை சந்தித்து, ஆஷ் கொலை தொடர்பான பல்வேறு ஆவணங்களைப் பெற்றார்.

இன்று ஆஷ் கொலையின் நூறாவது ஆண்டு நினைவுநாள். இதையொட்டி வாஞ்சிநாதன் குடும்பத்துக்கு, சுட்டுக்கொல்லப்பட்ட ஆஷின் பேரன் ராபர்ட் ஆஷ் ஓர் கடிதம் அனுப்பியுள்ளார். இந்த கடிதம் பேராசிரியர் வெங்கடாசலபதி வழியாக அனுப்பப்பட்டுள்ளது. அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது: துயரமும், பெருமிதமும் ஒருங்கே அமைந்த இந்த நாளில், ராபர்ட் வில்லியம் ஆஷ் அவர்களின் பேரனும் கொள்ளுபேத்திகளுமாகிய நாங்கள், வாஞ்சி அய்யரின் குடும்பத்துக்கு ஆறுதலையும், நட்பையும் வெளிப்படுத்தும் விதமாக இந்த கடிதத்தை எழுதுகிறோம். லட்சிய நோக்கமுள்ள அரசியல் செயல்பாட்டாளர் வாஞ்சிநாதன். அவரது விடுதலை வேட்கை எங்கள் தாத்தா ஆஷைக் கல்லறைக்கு அனுப்பியது. அரசியல் களத்தில் தீவிரமாக செயல்பட்டவர்கள், அவர்கள் ஆட்சியாளர்கள் ஆனாலும், ஒடுக்கப்படுபவர்கள் ஆனாலும், பெரும் பிழைகளைச் செய்யும் சூழல் ஏற்பட்டு விடுகிறது. . அன்புடன், ராபர்ட் ஆஷ் குடும்பத்தினர், அயர்லாந்து. இவ்வாறு கடிதத்தில் கூறப்பட்டுள்ளது. ஆஷ் சுட்டுக் கொல்லப்பட்டு நூறு ஆண்டுகளுக்குப்பின், இப்படி ஓர் கடிதம் எழுதப்பட்டுள்ளது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
http://www.dinamalar.com

Tuesday, April 19, 2011

இலங்கையில் நடந்த உச்சகட்ட போர்

இலங்கையில் நடந்த உச்சகட்ட போர் தொடர்பான ஐ.நா.வின் அறிக்கையில் விடுதலைப் புலிகள் மீதான குற்றச்சாட்டுகள் குறித்தும் குறிப்பிடப்பட்டிருக்கிறது. போர் நடக்கும் பகுதியில் ஏற்படக்கூடிய அபாயங்களைப் பற்றி நன்றாகவே தெரிந்திருந்தும் அப்பகுதியில் இருந்து வெளியேறுவதற்கு பொதுமக்களை விடுதலைப் புலிகள் அனுமதிக்கவில்லை. தங்களைப் பாதுகாக்கும் கேடயங்களாக அவர்களைப் பயன்படுத்திக் கொண்டார்கள் என்று அந்த அறிக்கை கூறுகிறது.

போர் நடந்து கொண்டிருக்கும்போது கட்டாய ஆளெடுப்பு நடவடிக்கைகளை விடுதலைப்புலிகள் மேற்கொண்டனர். போர் உச்சகட்டத்தை எட்டியபோது, ஆளெடுக்கும் பணி தீவிரமாக இருந்தது. எல்லா வயதினரையும் தங்களது படையில் விடுதலைப்புலிகள் சேர்த்துக் கொண்டனர்.

பாதுகாப்புக்காகப் பதுங்கு குழிகளைத் தோண்டுவதற்குப் பொதுமக்கள் கட்டாயப்படுத்தப்பட்டனர். பொதுமக்களையும் விடுதலைப் புலிகளையும் பிரித்தறிய முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் பொதுமக்களுக்குக் கூடுதலான ஆபத்து ஏற்பட்டது.

2009-ம் ஆண்டு பிப்ரவரிக்குப் பிறகு, சண்டை நடந்து கொண்டிருந்த பகுதியில் இருந்து வெளியேற முயன்ற பொதுமக்கள் மீது விடுதலைப் புலிகள் கண்மூடித் தனமாகச் சுடத் தொடங்கினர். இது பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியது.

போர் உச்சகட்டத்தை எட்டியபோது, மருத்துவமனைகள், பொதுமக்கள் தங்கியிருக்கும் முகாம்கள் போன்றவற்றை ஆயுதங்கள் பதுக்கி வைப்பதற்காக விடுதலைப் புலிகள் பயன்படுத்தினர். தற்கொலைப் படைத் தாக்குதலைத் தீவிரப்படுத்தினர் என்று ஐ.நாவின் அறிக்கை கூறுகிறது.

இவற்றின் அடிப்படையில், இலங்கை அரசுக்கு எதிராகக் கூறப்படும் நம்பகமான குற்றச்சாட்டுகளை 5 வகையாக ஐ.நா. நிபுணர் குழு பிரித்திருக்கிறது. 1. குண்டுகளை வீசி பெரும் எண்ணிக்கையிலான பொதுமக்களைக் கொன்றது, 2. மருத்துவமனைகள் மற்றும் மனிதநலப் பணிகளுக்கான இடங்கள் மீது தாக்குதல் நடத்தியது, 3. பொதுமக்களுக்கு மனிதநேய உதவிகள் கிடைக்கவிடாமல் செய்தது 4. போரில் கொல்லப்பட்டவர்கள், தப்பியவர்கள், இடம்பெயர்ந்தவர்கள், விடுதலைப் புலிகள் என்கிற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டவர்கள் ஆகியோருக்கு எதிரான மனித உரிமை மீறல்கள், 5. போர் நடந்த பகுதிக்கு வெளியே ஊடகங்கள், அரசு எதிர்ப்பாளர்களுக்கு எதிராகக் கட்டவிழ்த்து விடப்பட்ட அடக்குமுறை ஆகியவற்றையே நம்புவதற்குரிய 5 குற்றச்சாட்டுகளாக ஐ.நா. குழு கூறுகிறது.

இதுபோல் 1. பொதுமக்களைக் கேடயமாக பயன்படுத்தியது, 2. தங்களது பிடியில் இருந்து தப்பியோட முயன்றவர்களைக் கொன்றது, 3. பொதுமக்கள் வசிக்கும் பகுதியில் ஆயுதங்களைப் பதுக்கியது, 4. குழந்தைகளைப் படையில் சேர்த்தது, 5. கட்டாயமாக வேலை வாங்கியது, 6. தற்கொலைப் படைத் தாக்குதல் மூலம் பொதுமக்களைக் கொன்றது ஆகிய விடுதலைப் புலிகளுக்கு எதிரான 6 வகையான குற்றச்சாட்டுகளில் உண்மை இருப்பதாகவும் ஐ.நா. அறிக்கை கூறுகிறது.

இலங்கை செய்திருப்பதும் செய்ய வேண்டியதும்: போர் நடந்து முடிந்தபிறகு அது தொடர்பாக விசாரணை நடத்துவதைத் தொடர்ந்து புறக்கணித்து வந்த ராஜபட்ச அரசு, "கற்ற பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணையம்' (எல்எல்ஆர்சி) என்கிற 8 நபர் குழுவை அமைத்தது. 2002-ம் ஆண்டில் செய்து கொள்ளப்பட்ட சண்டை நிறுத்த ஒப்பந்தம் முதல் போர் முடிவுக்கு வந்தது வரை ஆய்வு செய்வதே இந்தக் குழுவின் பணி என்று கூறப்பட்டது. போர் முடிந்த நிலையில், தேசிய அளவிலான பேச்சைத் தொடங்குவதற்கு இது நல்ல வாய்ப்பாகவும் கருதப்படுகிறது.

ஆயினும் சுயேச்சைத்தன்மை, பாரபட்சமற்ற ஆய்வு உள்ளிட்ட சர்வதேச தகுதிகள் இந்தக் குழுவுக்கு இல்லை. இந்தக் குழுவின் உறுப்பினர்கள் சிலர் ஒரு சார்பானவர்களாகக் கருதப்பட்டார்கள். போர்க்காலத்தில் செய்யப்பட்ட சர்வதேச மனிதநல மற்றும் மனித உரிமை சட்ட விதிமீறல்கள் தொடர்பாக இந்தக் குழு விசாரிக்கவில்லை. பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய மரியாதை அளிப்பது, சாட்சியங்களின் பாதுகாப்புக்கு உத்தரவாதமளிப்பது போன்ற கடமைகளிலும் எல்எல்ஆர்சி தவறிவிட்டது.

அதனால், ஐ.நா. பொதுச் செயலர் பான்-கி-மூன், இலங்கை அதிபர் ராஜபட்ச ஆகியோர் அளித்த கடமைப்பொறுப்பு தொடர்பான உறுதிகளை இந்தக் குழுவால் நிறைவேற்ற முடியாது என்று ஐ.நா. நிபுணர் குழுவின் அறிக்கை கூறுகிறது.

இலங்கையில் இப்போது நிலவும் அரசியல் சூழலில் எல்எல்ஆர்சியால் நீதியை வழங்க முடியும் என்று நம்பிக்கையில்லை. அரசியல் அதிகாரங்கள் அனைத்தும் அதிபரிடமே குவிந்து கிடக்கின்றன. நாட்டின் தலைமை வழக்கறிஞரிடமிருந்து அதிகாரங்கள் பறிக்கப்பட்டிருக்கின்றன. அவசர காலச் சட்டம், பயங்கரவாத ஒழிப்புச் சட்டம் ஆகியவையும் நீதி கிடைப்பதில் தடைக்கற்களாக உள்ளன என ஐ.நா. அறிக்கை சுட்டிக்காட்டியிருக்கிறது.

பரிந்துரைகள்

கடமைப்பொறுப்பு தொடர்பாக பான்-கி-மூன், இலங்கை அதிபர் ஆகியோரிடையே ஏற்பட்டிருக்கும் ஒத்துழைப்பு ஆக்கபூர்வமானதாக அமைய வேண்டுமானால் கீழ்க்கண்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என ஐ.நா. குழு பரிந்துரை செய்திருக்கிறது.

ய் போர்க்காலத்தில் நடந்ததாகக் கூறப்படும் மனிதநல மற்றும் மனித உரிமைக் குற்றங்கள் குறித்து நியாயமான விசாரணையை அரசு உடனடியாகத் துவக்க வேண்டும்.

ய் வன்னி போரில் பாதிக்கப்பட்டவர்கள், தப்பியவர்கள் ஆகியோருக்கான குறுகிய கால நடவடிக்கைகளை செயல்படுத்த வேண்டும். அரசு மற்றும் துணை ராணுவப் படையினரின் அத்துமீறல்களை நிறுத்துவது, போரில் இறந்து போனவர்களின் உடல்கள், அஸ்தி உள்ளிட்டவற்றை உறவினர்களிடம் ஒப்படைப்பது, இறந்து போனவர்களுக்கான இறப்புச் சான்றிதழ்களை உரிய மரியாதையுடன் எந்தக் கட்டணமும் இல்லாமல் வழங்குவது, போரில் பிழைத்தவர்களுக்குத் தேவையான மனநல ஆலோசனைகளைத் தருவது, முகாம்களில் வசிப்பவர்களை உடனடியாக விடுவிப்பது, மறுகுடிமயர்வுப் பணிகளை மேற்கொள்வது, இடைக்கால நிவாரண உதவிகளைச் செய்வது போன்றவை இதில் அடக்கம்.

ய் கடத்தப்பட்டு பின்னர் மாயமானவர்கள் தொடர்பான உண்மை நிலையை அறிவிக்க வேண்டும்.

ய் அவசர நிலையைத் திரும்பப் பெற வேண்டும். சர்வதேச சட்டங்களுக்குப் பொருந்தும் வகையில் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தில் உரிய திருத்தங்களைச் செய்ய வேண்டும்.

ய் விடுதலைப் புலிகள் என்கிற சந்தேகத்தின் பேரில் பிடித்து வைக்கப்பட்டிருப்பவர்களின் பெயர்களை வெளியிட வேண்டும். அவர்கள் மீது சட்ட ரீதியாகவே நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். நீதிமன்றத்தில் அவர்கள் சார்பில் வழக்குத் தொடுப்பதற்கு குடும்பத்தினருக்கு அனுமதி அளிக்க வேண்டும். கொடிய குற்றங்களுக்கான ஆதாரங்கள் இல்லாதவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்.

ய் அரசே நிகழ்த்தும் வன்முறைகளை நிறுத்த வேண்டும். மக்கள் கூடுவதற்கும், இடம்பெயர்வதற்கும், கருத்துகளைத் தெரிவிப்பதற்கும் எதிராக நடவடிக்கைகள் எடுப்பது நிறுத்தப்பட வேண்டும்.

ய் சில நீண்டகால நடவடிக்கைகளையும் ஐ.நா. குழு பரிந்துரை செய்திருக்கிறது. இனப் பிரச்னை, பல்வேறு மனித உரிமை மீறல்கள் நடந்த கடுமையான போர் உள்ளிட்டவை தொடர்பாக அனைத்து சமூகத்தினரும் பங்கேற்று ஆய்வு செய்யும் நடவடிக்கைகளை அரசு உடனடியாகத் தொடங்க வேண்டும்.

ய் இறுதி கட்டப் போரில் பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் கொல்லப்பட்டது தொடர்பாக அரசு தனது பொறுப்பை ஏற்று, அதுபற்றி அதிகாரப்பூர்வமாக அறிவிக்க வேண்டும்.

ய் போரின்போது நடந்த மனித உரிமை மீறல்களால் பாதிக்கப்பட்டோருக்கு உதவும் வகையிலான திட்டங்களை அமல்படுத்த வேண்டும். பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு இதில் சிறப்புக் கவனம் அளிக்கப்பட வேண்டும்.

இந்தப் பரிந்துரைகள் மூலம் ஐ.நா. பொதுச் செயலருக்கும் இலங்கை அதிபருக்கும் இடையேயான ஒத்துழைப்பை உறுதி செய்ய முடியும் என ஐ.நா. குழு கூறியிருக்கிறது. பாதிக்கப்பட்டோருக்கு நீதியும், மரியாதையும் கிடைப்பதற்கும் இலங்கையில் அமைதி ஏற்படுவதற்கும் இந்தப் பரிந்துரைகள் உதவும் என்றும் ஐ.நா. குழு நம்பிக்கை தெரிவித்திருக்கிறது. ஏதோ ஒரு வகையில் இலங்கையின் இனப்படுகொலைக்கு நீதி கிடைக்கும் என்கிற எதிர்பார்ப்பில் தமிழினம் காத்திருக்கிறது.

காத்திருக்கும் கடமைகள்..

ஓருவழியாகத் தேர்தல் திருவிழா ஓய்ந்துவிட்டது. பலருக்குக் கிலியும், சிலருக்கு வலியும் இத்தேர்தல் ஏற்படுத்தியது என்றால் அதில் வியப்பில்லை. எனவே ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றுவது யார் என்பது மட்டுமே அடுத்த கட்ட எதிர்பார்ப்பு.

இதுவரை எப்படி நடந்ததோ அது இம்முறை மாறிவிட்டது என கூறும் அளவுக்கு தேர்தல் ஆணையத்தின் கெடுபிடி இருந்தது. நினைத்ததை முழுவதுமாக சாதிக்கமுடியாவிட்டாலும், இனி வரும் தேர்தலில் இந்த பயம் நிச்சயம் இருக்கும். அதுவரை ஜனநாயகத்துக்கு வெற்றி என்றே கருதலாம்.

அதைச் செய்வேன், இதைச் செய்வேன் எனக் கூறியவர்கள் அதிகாரத்துக்கு வந்ததும் முதலில் செய்ய வேண்டியது என்னவாக இருக்க வேண்டும் என்பதுதான் அடுத்தகேள்வி.

இப்போதைய எதிர்பார்ப்பு புதிதாகப் பொறுப்பேற்கவுள்ள அரசு பல சவால்களை எதிர்நோக்க வேண்டியிருக்கிறது. அவர்களுக்குக் காத்திருக்கும் கடமைகள் ஏராளம்.

ஏழைகளின் பிரச்னைகளை முதலில் தீர்க்க வேண்டும். மாறாக தனிமனித வெறுப்புகள், பழிவாங்கல்கள் இருக்கக் கூடாது.

கடந்தமுறை செயல்படுத்தாமல் நிறுத்தப்பட்டவை அல்லது புதிய திட்டங்களை உடனடியாக நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கவேண்டும். இதுதவிர, மக்கள் எதிர்பார்க்கும் பல்வேறு பிரச்னைகளை புதிய அரசு தீர்க்க வேண்டியது மிக அவசியம்.

இப்போதைய தலையாய பிரச்னையாக இருப்பது மின்வெட்டு. இதைத் தவிர்ப்பதற்கு உடனடியாகச் செய்ய வேண்டியவை அதிக அளவில் சூரிய ஒளி மின்சாரத்தைப் பயன்பாட்டுக்குக் கொண்டுவரலாம். மேலும் தனியார் உதவியுடன் அனல் மின்நிலையங்களை ஆங்காங்கே அமைத்து சிறிய அளவில் உற்பத்தி செய்வது.

பெரும்பாலான கிராமங்களைத் தொண்டு நிறுவனங்கள், வர்த்தக நிறுவனங்கள் உள்ளிட்டவைகள் தத்தெடுத்து மின்தடையே இல்லாமல் செய்ய மாநில அரசு அதிக உதவி அளிக்கலாம்.

அடுத்ததாக, தலைக்குமேல் தொங்கும் கத்தியாக இருப்பது பள்ளி, கல்லூரி கல்விக் கட்டண விவகாரம். தனியார் பள்ளிகளின் பகல் கொள்ளையைத் தடுக்க உடனடியாகச் சட்டம் இயற்றி மாநில அரசு நேரடிக் கட்டுப்பாட்டில் கொண்டுவந்து அனைத்துக் கல்வி நிறுவனங்களின் கட்டண விவரங்களைக் கண்காணிக்க வேண்டும்.

வேலைவாய்ப்பகங்களில் பதிவு மூப்பு அடிப்படையில் காலிப்பணியிடங்களை நிரப்பத் தக்க நடவடிக்கை தேவை. தேர்தலின்போது பல கிராமங்களில் வேட்பாளர்களுக்குப் பெரிதும் தலைவலியாக இருந்தது சாலை, குடிநீர், போக்குவரத்து, சுகாதார வசதிகள் இல்லாததுதான். எனவே, இந்த அடிப்படை வசதிகளை மேற்கொள்ள விரைவான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ரேஷனில் குறைந்த விலையில் அத்தியாவசியப் பொருள்கள் வழங்கப்பட்டாலும் அதில் முறைகேடுகள் பெருமளவில் காணப்படுகின்றன. அதைக் களைய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், பொருள்கள் வழங்க பெரும்பாலான ரேஷன் கடைகளில் ஊழியர்கள் கிடையாது. அவர்களை நியமிப்பதன் மூலம் இதுபோன்ற தவறுகள் களையப்படலாம்.

தமிழகத்தின் பல பகுதிகளில் ஆறுகளிலிருந்து மணல் கடத்தப்படுவதும், கனிம வளங்கள் கடத்தப்படுவதும் இன்னும் முழுவதுமாக நிறுத்தப்படவில்லை. அதைத் தடுத்து இயற்கை வளத்தைக் காப்பாற்ற வேண்டும்.

விவசாயிகளுக்கு உரிய நிவாரணம், மானிய உதவி, வேளாண்மை உற்பத்திக்குப் புதிய யுக்திகள், கரும்பு, நெல் போன்ற பயிர்களுக்கு நியாயமான கொள்முதல் விலை, வெங்காயம், மஞ்சள், பூண்டு போன்ற வேளாண் பொருள்கள் தட்டுப்பாடின்றிக் கிடைக்க விவசாயிகளுக்கு தகுந்த ஊக்கமும், உதவியும் அளிக்க வேண்டியது கட்டாயம்.

ரவுடிகள் தொல்லை, கட்டப்பஞ்சாயத்து, கொலை, ஆள் கடத்தல் போன்ற சம்பவங்கள் நடக்காமல் சட்டத்தைக் கடுமையாக்கலாம். அரசியல் தலையீடு இல்லாமல் அதிகாரிகள் தங்கள் கடமைகளைச் செய்யும் வகையில் பாரபட்சமில்லாத ஆட்சி அமைந்தால் மக்கள் நம்பிக்கை வீண் போகாது.