murali83bdu@gmail.com. Powered by Blogger.

Thursday, October 14, 2010

ஆக்கிரமிக்கப்பட்ட பஞ்சமி நிலம்:

ஆக்கிரமிக்கப்பட்ட பஞ்சமி நிலம்: திசைதிருப்பும் முதல்வர்
ஸ்டாலின் ராஜாங்கம்

ஏப்ரல் 2010 முதலே தலித் மக்களுக்கான பஞ்சமி நிலம் குறித்த செய்திகள் ஊடகங்களில் சிறிய அளவிலாவது இடம்பெற்று வருகின்றன. ஏப்ரல் 14ஆம் தேதி அம்பேத்கர் பிறந்தநாளில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நடத்திய விருது வழங்கும் விழாவில் அம்பேத்கர் பெயரிலான விருதைப் பெற்றுக்கொண்ட கருணாநிதி அவ்விழாவில் (மட்டும்) தலித்துகளுக்கான நிலம் குறித்த கருத்தொன்றை வெளியிட்டார். சிலை எழுப்புதல், பெயர் சூட்டுதல், சொல்லாடல்களைக் கட்டுதல் என்று அடையாள அரசியல் உருவாக்கியதையே அரசியல் வெற்றியாகக் காட்டிவரும் திமுகவின் அணுகு முறைக்கு முரண்படாத வகையில் சிலை, மணி மண்டபம் உள்ளிட்ட அடையாளக் கோரிக்கைகளை எழுப்பிய விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, தலித்துகளின் நேரடி நலனுக்காகப் பஞ்சமி நிலங்களை ஆணையம் அமைத்து மீட்க வேண்டுமென்ற ஒரேயொரு கோரிக்கையை மட்டும் முன்மொழிந்தது. அதே நாளில் ப. சிவகாமி நடத்தும் சமூக சமத்துவப் படைக் கட்சி காஞ்சிபுரத்தில் பஞ்சமி நில மீட்பு மாநாடு ஒன்றை நடத்திக்கொண்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது. விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் இக்கோரிக்கை குறித்துப் பேசும்போதுதான் கருணாநிதி “ஆதி திராவிடர்களின் நிலத்தை மீட்போம்” என்றார். இதுபோலவே மேமாதம் இரண்டாம் வாரத்தில் கோவையிலிருந்து தொடுக்கப்பட்ட வழக்கில் கருத்துக்கூறிய உயர் நீதிமன்றம் “தலித் மக்களுக்கான பஞ்சமி நிலங்கள் பிறரால் ஆக்கிரமிக்கப்பட்டிருப்பது தெரியவந்தால் அவற்றை மீட்க அரசு தயங்க வேண்டியதில்லை” எனக் கூறியது.

சிறுதாவூர் நிலவிவகாரம் தொடர்பாக நியமிக்கப்பட்ட நீதிபதி கே. பி. சிவசுப்பிரமணியம் கமிஷன் அறிக்கை சட்டமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடர் முடிவடைவதற்கு முந்தைய தினம் மே 13 அன்று அவசர அவசரமாகச் சமர்ப்பிக்கப்பட்டது. 1892ஆம் ஆண்டு சென்னை மாகாணத்தின் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியராய் இருந்த ஜே. எச். ஏ. திரமென்கீர் (Tremenheere) என்ற ஆங்கிலேயரின் பரிந்துரையின் பேரில் ஆங்கிலேய அரசு தலித் மக்களுக்கென இலவசமாக ஒதுக்கிய 12 லட்சம் ஏக்கர் நிலமே பஞ்சமி நிலம். காலனிய நில வருவாய்த் துறைக் கொள்கையைச் சீர்திருத்தம் செய்வதற்குரிய பரிந்துரைகளையும் செங்கல்பட்டு மாவட்டத்தில் தலித்துகளின் நிலைமையை ஆராய்ந்து சென்னை மாகாணம் முழுவதுமிருந்த அவர்களுடைய நிலையை மேம்படுத்தும் ஆலோசனைகளையும் திரமென்கீர் வழங்கினார். தலித் மக்களின் வாழ்நிலையை ஆழமாகப் புரிந்துகொண்ட நிலையில் அளிக்கப்பட்ட இந்நிலங்களைப் பிறர் வாங்கவோ விற்கவோ முடியாது என்ற முன்யோசனைமிக்க விதியையும் உருவாக்கினார். காடாகவும் தரிசாகவும் கொடுக்கப்பட்ட அந்நிலங்களைச் சீர்படுத்தி நாடாக்கியவர்கள் தலித்துகளே. ஆனால் 12 லட்சம் ஏக்கரில் தலித் மக்களிடம் இன்றைக்கு மிஞ்சியிருப்பவை ஒரு லட்சத்து 26 ஆயிரத்து 13.6 ஏக்கர் நிலம் மட்டுமே. இந்நிலங்களுக்கென உருவாக்கப்பட்ட விதிமுறைகளைத் ‘தாண்டி’ 10 லட்சத்து 73 ஆயிரத்து 887 ஏக்கர் நிலம் தலித் அல்லாத பிறரிடம் சட்டத்திற்குப் புறம்பாக முடங்கிக்கிடக்கிறது.

பஞ்சமி நிலத்தைப் பெறுவதற்கும் பாதுகாப்பதற்கும் தலித்துகள் கடுமையாகப் போராடிவந்திருப்பதே வரலாறு. ‘சனநாயக முறை’க்குப் பேர்போனதெனப் பாடநூல்களால் கட்டியுரைக்கப்படும் உத்திரமேரூர் அமைந்துள்ள காஞ்சிபுரம் மாவட்டத்தின் காரணை என்னும் கிராமத்தில்தான் பஞ்சமி நிலத்தை மீட்பது என்னும் தலித் மக்களின் போராட்டம் 1993இல் சற்றே முனைப்போடு நடந்தது.

காரணையைச் சுற்றியுள்ள ஏழு கிராமங்களின் நிலமற்ற தலித் குடும்பங்களுக்கும் சேர்த்துக் காரணையில் 633 ஏக்கர் நிலம் பரிந்துரைக்கப்பட்டது. 1933இல் பரிந்துரைக்கப்பட்ட அந்நிலங்கள் 1975ஆம் ஆண்டில்தான் தலித்துகளுக்கு வழங்கப்பட்டன. அவை மெல்ல மெல்லப் பிறவகுப்பினராலும் ரியல் எஸ்டேட் வணிகர்களாலும் ஆக்கிரமிக்கப்பட்டன. இவ்வாறு நில உரிமையாளர் ஆனவர்களில் ஒருவரான தீபன் சக்கரவர்த்தி என்பவர் 1984இல் தனக்குரிய நிலத்தை விற்றார். விற்கப்பட்ட நிலம் முறையாகப் பதிவுசெய்யப்படாமலும் முழுமையாகப் பணம் அளிக்கப்படாமலும் போன போதுதான் தன்னிடமிருப்பது பஞ்சமி நிலம் என்றும் அதைத் தலித் அல்லாதோருக்கு விற்க முடியாதெனவும் அவர் அறிகிறார். நிலத்தைத் திரும்பப் பெறப் போராடித் தோற்ற அவர் 1992இல் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தார். இப்பின்னணியோடு அம்பேத்கர் நூற்றாண்டு விழா எழுச்சியும் இணைந்தபோதுதான் பஞ்சமி நில மீட்பு குறித்த விழிப்புணர்வு பரவலானது. தலித் அமைப்புகள், தொண்டு நிறுவனங்கள் உதவியுடன் ‘பஞ்சமி நில மீட்புக் குழு’ அமைக்கப்பட்டுப் போராட்டம் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டது. அதிமுக ஆட்சிக்காலமான அப்போது போராட்டத்தில் ஈடுபட்ட தலித்துகள் காவல் துறையால் கடுமையாக ஒடுக்கப்பட்டனர். கைது, ஜாமீன் என்று நீடித்த போராட்டத்தில் 10.10.1994இல் செங்கல்பட்டு மாவட்டத் துணை ஆட்சியர் அலுவலகத்திற்குக் கோரிக்கை மனுக்களை அளிக்கவந்த தலித் மக்களோடு காவல் துறைக்கு ஏற்பட்ட மோதலில், முன்னெச்சரிக்கை அறிவிப்பு ஏதுமில்லாமல் காவல் துறை துப்பாக்கிச் சூடு நடத்தியது. இதில் 32 தலித்துகள் காயமடைந்ததோடு ஜான்தாமஸ், ஏழுமலை ஆகிய இரண்டு தலித் இளைஞர்கள் கொல்லப்பட்டனர்.

1990களின் தலித் எழுச்சிக்குப் பஞ்சமி நில மீட்புக் கோரிக்கையும் ஜான்தாமஸ், ஏழுமலை ஆகியோரின் மரணமும் பெரும் உந்துதலையும் அடையாள அழுத்தத்தையும் தந்தன. ஆனால் இவ்வகை சிறுசிறு போராட்டங்களையெல்லாம் உள்வாங்கிப் பெரும்கட்சியாக மாறிய தலித் கட்சிகள் தங்களுக்குத் தாங்களே உருவாக்கிக்கொண்ட வரையறைகளில் சிக்கிக்கொண்டு இக்கோரிக்கை மீது ஆக்கபூர்வமான அழுத்தத்தை உருவாக்கத் தவறிவிட்டன. இந்நிலங்களை ஆக்கிரமித்திருக்கும் தமிழர்களுக்கும் தோதான கட்சியாகக் காட்டிக்கொள்ளவே அவை முயன்றுவருகின்றன. இந்த இருபதாண்டுகளில் சட்டப் பேரவையில் இக் கோரிக்கைமீதான அழுத்தமோ கவன ஈர்ப்போ எக்கட்சியாலும் உருவாக்கப்படவில்லை. “நாங்களும் பேசியிருக்கிறோம்” எனச் சொல்லிக்கொள்வதற்கான ஒன்றிரண்டு பதிவுகள் தவிர உருப்படியான குரல்கள் எவையுமில்லை. தொண்டு நிறுவனங்களிடம் பயிற்சி முகாம்களில் பேசுவதற்கான என்ஜிஓ நிகழ்வாக இது முடங்கிவிட்டது. கடந்த இருபதாண்டுகளில் இக்கோரிக்கைக்கான குரல் சன்னமாய் ஒலித்தபடியிருக்கிறது. அதையும் இன்றைய அரசும் அரசியல் கட்சிகளும் முழுமையாகத் தின்று முடிக்க முயல்கின்றன.

“ஆதிதிராவிடர்களுக்குரிய நிலங்களை யார் பறித்திருந்தாலும் அதை அரசு வேடிக்கை பார்க்காது” என்று விடுதலைச் சிறுத்தைகளின் விருது வழங்கும் விழாவில் பேசிய கருணாநிதி, அதை ஆட்சியிலிருக்கும்போதே செய்வேன் என்று கூறுவதற்கு மாறாக இன்னும் ஓராண்டில் வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையில் அது சேர்க்கப்படும் என்றும் அத்தேர்தலில் தன்னை வெற்றிபெற வைத்தால் இக்கோரிக்கையை நிறைவேற்றுவதாகவும் கூறினார். அதிகாரத்தை எட்டக்கூடிய கட்சியாக உடனே மாற முடியாவிட்டாலும் தலித் மக்களை ஓட்டுவங்கியாகவும் அரசியல் திரட்சியாகவும் மாற்றி அரசியல் அழுத்தக் குழுவாக நிலைத்திருக்க வேண்டிய விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மெல்ல மெல்ல அவ்வாய்ப்பை அழித்துக்கொண்டதோடு மையநீரோட்டக் கட்சிகளுக்குரிய அத்தனை கெடுதிகளையும் சேர்த்துக்கொண்டு திரண்டிருக்கும் கூட்டத்தைத் தக்கவைத்து அரசியல் பேரங்களை நிகழ்த்திக்கொள்ளும் கட்சியாக எஞ்சிவிட்ட நிலையில், 2011இல் திமுகவை ஆட்சியில் அமர்த்தியே தீருவோம் என்று முழங்கியதைப் பயன்படுத்திக்கொண்டு கருணாநிதி இவ்வாறு பேசியுள்ளார். இந்த வகையில் 2011ஆம் ஆண்டிற்கான கூட்டணியையும் தேர்தல் பிரச்சாரத்தையும் கருணாநிதி இம்மேடையிலிருந்தே தொடங்கிவிட்டார் என்றே சொல்ல வேண்டும்.

அதிகார அரசியலில் சாதிச் சமன்பாடுகளைக் குலையாமல் பயன்படுத்திவரும் கருணாநிதி பிறசாதியினரிடமிருந்து நிலங்களை மீட்டுத் தலித்துகளுக்குத் தருவார் என்று எதிர்பார்ப்பது வேடிக்கைதான். மீட்டுத் தர முடியாத கருணாநிதி இவ்வாறு பேசியிருப்பதன் பொருள் என்ன? முதலில் கருணாநிதி அம்மேடையில் பேசியது பஞ்சமி நிலம் குறித்து அல்ல. அது குறித்த கோரிக்கை எழுப்பப்படும் மேடையில் அக்கோரிக்கையைத் திசைதிருப்பி அதை எளிமைப்படுத்தியிருக்கிறார். பஞ்சமி நிலம் பற்றிப் பேசுவதை விடுத்து ஆதிதிராவிடர்களுக்கான நிலம் என்று பொத்தாம் பொதுவாக ஆக்கியதோடு அந்நிலங்களைப் பறித்தோர் முதல்வராக இருந்தாலும் நீதிபதியாக இருந்தாலும் மீட்கப்படும் என்றும் கூறினார். முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவையும் நீதிபதி தினகரனையும்தான் இவ்வாறு கூறினார் என்பது சொல்லித் தெரிய வேண்டியதில்லை. நிலம் மீட்கப்படுவதைவிடக் கருணாநிதியின் உடனடி நோக்கம் என்ன என்பதை இக்கூற்றில் அவர் புரிய வைத்துவிட்டார். தன்னுடைய சமகால அரசியல் எதிரிகளை எதிர்கொள்வது, நிலம் கோருபவர்களின் கோபத்தை எதிரிகளுக்கு எதிராகத் திருப்புவது மட்டுமே அவருடைய நோக்கம்.

ஜெயலலிதாவின் சிறுதாவூர் நிலம், ஆதிதிராவிடர்களிடமிருந்து ஆக்கிரமிக்கப்பட்ட நிலமே தவிர, பஞ்சமி நிலம் அல்ல. அது மீட்கப்பட வேண்டிய நிலம் என்பதில் கருத்து வேறுபாடில்லை. ஆனால் பஞ்சமி நிலம் கோரப்படும் இடத்தில் அதில் தன்னுடைய நிலைப்பாடு, நடவடிக்கை பற்றி நேரடியாகக் கூறுவதைவிடுத்து எதிர்க்கட்சியான அதிமுகவை இதில் ‘எதிரியாக’இணைக்கிறார் கருணாநிதி. தொடர்ந்து சிறுதாவூர் நிலம் தொடர்பான ஆணையத்தின் அறிக்கையை முன்வைத்து அவர் அறிக்கைகள் எழுதுவதும் செம்மொழி மாநாட்டிற்கு முன்பு ஜூன் 18இல் அதற்காகத் திமுக போராடும் என்றும் அறிவித்திருந்தார். தமிழகம் தழுவிய அளவில் தலித்துகளுக்குரிய நிலங்கள் பறிக்கப்பட்டு அதில் பல்வேறு சாதியினரும் கட்சியினரும் நிறுவனத்தினரும் ஈடுபட்டுள்ள நிலையில் பரந்த அளவில் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கையை விடுத்துத் தனக்கு ஏதிரான கட்சி ஒன்றுடனான முரணாக அதை மாற்றுகிறார் முதல்வர். இதே வேளையில் சிறுதாவூர் நில ஆக்கிரமிப்புமீதான விசாரணைக் கமிஷன் அமைக்கக் காரணமான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அதிமுக கூட்டணிக்குச் சென்றுவிட்ட நிலையில் அவ்விரு கட்சிகளுக்கிடையேயான முரண்பாட்டை ஏற்படுத்துவது என்ற நோக்கமும் அவருக்கிருக்கிறது என்பது இப்பிரச்சினை குறித்த அவரது அறிக்கைகளைத் தொடர்ந்து படித்துவரும் யாராலும் அறிய முடியும். இதைத் தாண்டித் தலித் மக்களின் நலனோ அதை நிறுவுவதில் அக்கறையோ கருணாநிதிக்கு இல்லை. சிறுதாவூர் நில ஆக்கிரமிப்பு குறித்த புகார் ஜெயலலிதாவோடு தொடர்புபடுத்தப்பட்டதால்தான் கருணாநிதி உடனடியாக விசாரணைக் கமிஷன் அமைத்தார். ஆனால் அவர் எதிர்பார்த்ததைப் போல ஜெயலலிதாவின் பங்கு நேரடியாக அதில் இல்லாததோடு அவை பஞ்சமி நிலங்களாகவும் இல்லை. ஆனால் இந்த ஆக்கிரமிப்பில் பெரும் பகுதிப் பங்கு அதிமுகவினுடையது என்ற வகையிலும் பிறர் ஆக்கிரமிப்புக்கு அதிமுக அரசே ஒரு வகையில் உடந்தையாயிருந்தது என்ற வகையிலும் ஜெயலலிதாவிற்கு இதில் பங்கு உள்ளது. ஆனால் அறிக்கை வெளிவந்துவிட்ட நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முன்புபோல ஆர்வம் காட்டவில்லை. அவர்களுக்கும் கூட்டணி நிர்ப்பந்தம் இருக்கிறது. இந்நிலையில் வேறு வகையில் அக்கட்சி போராட்டம் ஒன்றை நடத்தியிருக்கிறது. நெடிய நிலவுரிமைப் போராட்ட வரலாற்றைக்கொண்ட மார்க்சிஸ்ட் கட்சிக்கு, தீண்டாமை ஒழிப்பு முன்னணி என்ற துணை நிலையமைப்பு உருவானபின் அதற்கான அஜெண்டாவைத் தேடும்போதுதான் பஞ்சமி நிலம் பற்றிய கோரிக்கையைக் கண்டடைந்திருக்கிறார்கள். எனினும் இந்நிலை வரவேற்கத்தக்கதே.

உண்மையில் பஞ்சமி நிலம் தலித் அல்லாதவர்களால் ஆக்கிரமிக்கப்பட்டதே திமுக, அதிமுக ஆகிய இரு கட்சிகளின் ஆட்சிக் காலங்களில்தாம். 1972க்குப் பிறகுதான் அதிகளவு நிலம் ஆக்கிரமிக்கப்பட்டதாகப் புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. 1982இல் மூன்று லட்சம் ஏக்கர் 1996இல் இரண்டரை லட்சம் ஏக்கர் எனக் குறைந்து இப்போது ஒன்றேகால் லட்சம் ஏக்கர் நிலமாக ஆகியுள்ளது. ஆனால் இவ்விஷயத்தில் இரண்டு கட்சிகளும் பரஸ்பரம் குற்றம்சாட்டிக்கொள்வது தமிழ் நாட்டு அரசியலில் வசதியான நிலை. கருணாநிதியும் ஜெயலலிதா என்னும் எதிரியைத்தான் வெகுவாக விரும்புவார். பலவீனமான எதிர்க் கட்சி ஒன்றைத் தக்கவைத்துக் கொள்வதும் சமூக நிகழ்வுகளை அதன் வழியிலான கறுப்பு வெள்ளைப் பாணிக்குள் இருத்தித் தன்னைப் பாதுகாத்துக்கொள்ளவும் இந்த நிலைமையே பயன்படும். அவர் எப்போதும் பலமான, கருத்தியல் பின்னணி கொண்ட அரசியல் சூழலை எதிர்கொள்வதாய் இருந்தால் மௌனத்தையும் புறக்கணிப்பையும் மட்டுமே கையாளுவார். இப்போது தலித் மக்களின் நீண்ட காலக் கோரிக்கை ஒன்றை வழக்கமான பாணிக்குள் இழுத்து நிறுத்திவிட்டுத் தன்னைக் காப்பாற்றிக்கொள்ள அவரால் முடிந்திருக்கிறது.

தலித் மக்களின் தற்சார்பான வாழ்நிலையைச் சாத்தியமாக்கும் நிலவுரிமையை இது போன்ற அரசியல் கட்சிகளின் எளிய எதிரிடைக்குள்ளிருந்து நிறுத்த முடியாது. ஜெயலலிதாவிடமிருந்து மட்டுமல்ல தமிழகமெங்கும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள ‘பஞ்சமி நிலத்தையும் தாழ்த்தப்பட்ட மக்களுக்காக வழங்கப்பட்ட தோட்டி மானியம், வெட்டியான் மானியம், புதிரை வண்ணான் மானியம் போன்ற மானிய நிலங்கள், அரசுப் புறம்போக்கு நிலங்கள், கோவில் நிலங்கள் வேறு வகையில் தலித்துகளுக்கு அளிக்கப்பட்ட நிலங்களையும் மீட்க வேண்டியுள்ளது. திமுகவின் அறிவாலயக் கட்டடமே பஞ்சமி நிலத்தில்தான் இருக்கிறது என்று திருமாவளவன் பேசிய காலம் ஒன்றுமிருந்தது. தமிழகத்தில் முன்னாள், இன்னாள் அமைச்சர்கள் நடத்தும் கல்வி நிறு வனங்களும் இந்நிலங்களில் அமைந்திருப்பதாகக் குற்றச்சாட்டு இருப்பதையும் இதனுடன் இணைத்துப் பார்க்க வேண்டியுள்ளது.

மேலும் கடந்த தமிழகச் சட்டமன்றத் தேர்தல் அறிக்கையில் அறிவிக்கப்பட்டு நடைமுறைப்படுத்துவதில் தோல்வியை அடைந்துள்ள இரண்டு ஏக்கர் நிலம் வழங்கலில் இதுவரை தலித் மக்களுக்கு வழங்கப்பட்ட நிலங்கள் குறித்த கணக்கேதும் தரப்படுவதில்லை. ஆதிக்க வகுப்பினரால் ஆக்கிரமிக்கப்பட்ட பஞ்சமி நிலங்கள் ஒருபுறமிருக்க, அரசாங்கமே ஆக்கிரமித்திருக்கும் பஞ்சமி நிலங்களும் உண்டு.

DLM எனப்படும் தலித் விடுதலை இயக்கம் அரசாங்கம் ஆக்கிரமித்துள்ள நிலங்கள் குறித்து ஆய்வு ஒன்றை நடத்தி அதன் விவரங்களை வெளியிட்டுள்ளது. இதில் தொண்டு நிறுவனக் கட்டடங்களும் அடங்கும். சான்றுக்காக அவற்றில் சில:

மதுரை

1. வாடிப்பட்டி வட்டம் சோழ வந்தான் அருகேயுள்ள தென்கரை கிராமத்தில் சர்வே எண்: 365/4Cஇல் உள்ள பஞ்சமி நிலத்தில் அரசு ஆரம்பப் பள்ளிக்கூடக் கட்டடம் கட்டப்பட்டுள்ளது.

2. வாடிப்பட்டி வட்டம் நாச்சிக்குளம் கிராமத்தில் அரசினர் ஆதிதிராவிடர் மேனிலைப் பள்ளிக் கட்டடம் கட்டப்பட்டுள்ளது.

3. வாடிப்பட்டி வட்டம் அலங்கா நல்லூர் ஒன்றியம் பாலமேடு கிராமத்தில் சர்வே எண்: 189/2இல் உள்ள பஞ்சமி நிலத்தைத் தன்னார்வத் தொண்டு நிறுவனம் (NGO) ஒன்று ஆக்கிரமித்துக் கட்டடம் கட்டியுள்ளது.

திருவண்ணாமலை

1. தண்டராம்பட்டு வட்டம் மலமஞ்சனூர் கிராமத்தில் சர்வே எண்: 282/3A1இல் தமிழக அரசின் நெடுஞ்சாலைத் துறையின் சார்பாக ஆக்கிரமித்துச் சாலையும் பயணியர் நிழற்குடையும் அமைக்கப்பட்டுள்ளன.

2. தண்டராம்பட்டு வட்டம் மலமஞ்சனூர் கிராம சர்வே எண்: 282/4A1இல் உள்ள பஞ்சமி நிலம் தமிழக அரசின் பொதுச்சுகாதாரம் மற்றும் நோய்தடுப்புத் துறை இயக்குனர் சென்னை-6 என்னும் பெயரில் பத்திரப் பதிவுசெய்யப்பட்டு “அரசினர் ஆரம்ப சுகாதார நிலையம்” கட்டப்பட்டுள்ளது.

திருப்பூர்

திருப்பூர் மாவட்டம், திருப்பூர் மாநகராட்சி 27ஆவது வார்டின் எல்லைக்குட்பட்ட அணைமேடு பெத்திசெட்டிபுரம் சர்வே எண்: 749இல் “தமிழக அரசின் திருப்பூர் ஆடிட்டர் அசோசியேசன்” சார்பாக அடுக்குமாடிக் கட்டடம் கட்டப்பட்டுள்ளது.

பெரம்பலூர்

1. பெரம்பலூர் மாவட்டத்தில் பாண்டக்கப்பட்டி கிராமத்தில் பஞ்சமி நிலம் ஆக்கிரமிக்கப்பட்டுப் பொதுப்பணித் துறையின் மூலம் ஏரியாக மாற்றப்பட்டுள்ளது.

2. பெரம்பலூர் மாவட்டத்தில் வாலிகண்டபுரத்தில் தன்னார்வத் தொண்டு நிறுவனம் (அறக்கட்டளை) ஒன்று பஞ்சமி நிலத்தை ஆக்கிரமித்துக் கட்டடம் கட்டியுள்ளது.

3. பெரம்பலூர் மாவட்டம், நாகமங்கலம் வருவாய்க் கோட்டம் ரெட்டிபாளையம் கிராமத்தில் இரண்டு சிமெண்ட் ஆலைகள் கட்டப்பட்டுள்ளன.

கரூர்

கரூர் மாவட்டம், தேவர் மலைப் பகுதியில் (புலியூர்) பஞ்சமி நிலத்தை ஆக்கிரமித்து ஒரு சிமெண்ட் ஆலை கட்டப்பட்டுள்ளது.

திண்டுக்கல்

திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் வட்டம் கள்ளி மந்தயம் வாகரையில் சர்வே எண்: 227, 228 மற்றும் 229இல் சுமார் 25 ஏக்கர் பஞ்சமி நிலத்தில் “கிளாஸிக் போலோ” என்ற மில் கட்டப்பட்டுள்ளது.

தேனி

தேனி மாவட்டம், பெரியகுளம் வட்டத்தைச் சார்ந்த தேவதானப் பட்டி கிராமத்தில் உள்ள பஞ்சமி நிலம் ஆக்கிரமிக்கப்பட்டு “காவல் துறையின் துப்பாக்கிச் சுடும் பயிற்சி நிலையம்” கட்டப்பட்டுள்ளது.

இவ்விவரங்களைத் தலித் விடுதலை இயக்கம் தமிழக அரசிற்கும் அறிக்கையாக அனுப்பியுள்ளது. பஞ்சமி நிலம் தொடர்பாகக் கடைபிடிக்கப்பட வேண்டியதாகக் கூறப்படும் விதி முறைகள்கூட அரசால் பின்பற்றப்படுவதில்லை. பஞ்சமர் நிலங்கள் வருவாய்த் துறைப் பதிவேட்டின்படி தலித் மக்களின் பெயரில் உள்ளதா என்பதை அறிய மாதமொருமுறை பார்வையிட்டு மண்டல வட்டாட்சியருக்குக் கிராம நிர்வாக அலுவலர் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும். வருடத்திற்கு ஒருமுறை ஜமாபந்தி நடைபெறும் போது வருவாய்க் கோட்டாட்சியர் அல்லது துணை கலெக்டர் பதவியில் உள்ள அதிகாரிகள் வருவாய்த் துறை ஆவணங்களைப் பார்வையிட்டுக் கையெழுத்திட வேண்டும். இவை எதுவுமே நடைபெறுவதில்லை. 1892ஆம் ஆண்டு யூடிஆர் (Updating Registration Scheme - UDR) சர்வே நடைபெற்றிருக்கிறது. அதற்குப் பிறகு 1986ஆம் ஆண்டு யூடிஆர் நடைபெற்றுள்ளது. அதில் கண்டுபிடிக்கப்பட்ட குறைகள் சரிசெய்யப்படாதது மட்டுமல்ல, அதற்குப் பிறகு சர்வே நடைபெறவேயில்லை. இது தொடர்பாக உண்மை அறிய முற்படுகிறபோதெல்லாம் நிலநிர்வாகத் துறை அளிக்கும் விவரங்களுக்கும் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அளிக்கும் அறிக்கைக்கும் பெரும் முரண்பாடு இருப்பது வழக்கமாக இருக்கிறது.

இவ்வாறு அரசாங்கமே வெளிப்படையாக மீறல்களில் ஈடுபட்டிருப்பதையறிந்தும், இம்முறைகேடு தான் தேர்ந்தெடுத்துக்கொண்ட எதிராளியால் மட்டுமே நிகழ்த்தப்பட்டிருப்பதாகக் காட்டுவது கருணாநிதியின் வழக்கமான அரசியல் காய் நகர்த்துதலுக்குப் பயன்படுமே தவிர நிலத்தை இழந்து நிற்கும் தலித்துகளுக்குப் பயன்படாது. சட்டமும் நீதிமன்றத் தீர்ப்புகளும் சாதகமாக இருப்பினும் ஆக்கிரமிக்கப்பட்ட நிலங்கள் தமிழகத்தின் பெரும்பான்மை எண்ணிக்கை கொண்ட ஆதிக்க வகுப்பினர் வசம் இருப்பதால் அவர்களைப் பகைத்துக்கொண்டு தலித்துகளின் உரிமைகளை நிலை நாட்ட திமுகவும் பிறரும் தயாராக இல்லை. அதை மறைக்கவும் தன்னை முன்னிலைப்படுத்திக்கொள்ளவும் தான் ஜெயலலிதா என்னும் கண்ணுக்குத் தெரிகிற எதிரியுடன் கருணாநிதி போராடுகிறார்.

No comments:

Post a Comment