murali83bdu@gmail.com. Powered by Blogger.

Thursday, October 14, 2010

ஜல்லிக்கட்டு – ஒரு நிஜமான சவால்

ஜல்லிக்கட்டு – ஒரு நிஜமான சவால்

ஜல்லிக்கட்டு – தமிழகச் சுற்றுலாத்துறை உட்பட தமிழர்களின் வீரத்திற்கு அடையாளமாகத் தூக்கிப் பிடிக்கும் விளையாட்டு.
ஜல்லிக்கட்டை நடத்துவது சாதாரண கிராமங்கள். சமீபத்தில் உச்சநீதிமன்றம் வரை ஜல்லிக்கட்டுப் பிரச்சினை போய் அதை நடத்தும் கிராமங்கள் சில லட்சங்கள் வரை முன்தொகை கட்டினால் மட்டுமே விளையாட முடியும் என்கிற நிபந்தனை விதிக்கப்பட்டிருக்கிறது. ஜல்லிக்கட்டை கிராமங்களில் நடக்கும் கோயில் திருவிழாவின் ஒரு பகுதியாக நடத்தும் கிராமங்கள் இவ்வளவு பணத்தை முன்தொகையாகக் கட்டமுடியாது என்று தங்கள் மறுப்பைத் தெரிவித்திருக்கின்றன. தமிழக அரசு அதைக் கட்ட வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்திருக்கின்றன.
இந்த நிலையில் ஜல்லிக்கட்டுக்குப் பெயர்போன அலங்காநல்லூர் கிராமத்தைப் பற்றிய பதிவு:
‘ஹோ’வென்ற கூச்சல்; அலறும் மைக்; எங்கு பார்த்தாலும் புழுதி; முண்டிப் பாயும் கூட்டம்; வாடி வாசலில் இருந்து வெளிப்பட்டு ஆவேசத்துடன் துள்ளும் மாடு; அதன் கொம்பின் கூர் நுனி; அதற்குத் தயங்காமல் பாய்ந்து மாட்டை அடக்க முயலும் இளைஞர்கள்...
ஜல்லிக்கட்டு கிட்டத்தட்ட சவால் மாதிரிதான்.
மாட்டைப் பிடித்துவிட்டால் பெயர், புகழ்; அதோடு சில பரிசுகள். பிடிக்கத் தவறினால் உடம்பில் பலத்த காயங்கள்; சில சமயங்களில் உயிருக்கே ஆபத்து வரும் வாய்ப்புகள்.
இவ்வளவு சிரமங்கள் இருந்தாலும் ஜல்லிக்கட்டு நடந்து கொண்டுதானிருக்கிறது. தென் தமிழகத்தில் பல கிராமங்களில் ஜல்லிக்கட்டு நடந்தாலும் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு பிரசித்தம். இந்தியாவுக்கு வரும் வெளிநாட்டு டூரிஸ்ட்களுக்கு ஒரு ‘அட்ராக்சன்’ – ஜல்லிக்கட்டு.
natpuஅலங்காநல்லூர். மதுரையிலிருந்து இருபது கி.மீ. தூரத்திற்குள் இருக்கிற இந்தச் சின்னக் கிராமத்தில் தை மாதம் துவங்கினதும் தனிக் ‘களை’ கட்டிவிடுகிறது. தை 3ந் தேதி தவறாமல் நடக்கும் ஜல்லிக்கட்டுக்கு தமிழகத்தின் பல பகுதிகளிலிருந்து விதவிதமான மாடுகள்; அதைப் பிடிக்க தனியான இளைஞர் கூட்டம் வந்து சேர்கிறது; மாடு பிடிக்கிற இடத்தைச் சுற்றித் தனி காலரிகள் அமைக்கப்பட, ஆயிரக்கணக்கில் கூட்டம் அலை மோதுகிறது.
ஜல்லிக்கட்டு நடப்பதற்கு ஒரு மாதத்திற்கு முன்பு நாம் போனபோதே ஊரில் சிலர் மாடு வாங்கப் போயிருந்தார்கள். உள்ளூரில் ஜல்லிக்கட்டுக்காகவே தனியாகச் சில காளை மாடுகளை வளர்க்கிறார்கள். கண்களில் ஒரு மிரட்சியுடன், பழக்கமில்லாத நபர்களை பார்த்ததும் கால் குளம்புகளால் மண்ணைக் கிளறுகின்றன சில மாடுகள்.
natpu
ஜல்லிக்கட்டில் பிடிபடாத வரைக்கும் இந்த மாடுகளுக்கு ஏகக் கிராக்கி. நன்றாகப் பாயக் கூடிய மாடுகள் எழுபதாயிரம் ரூபாய் வரை விலை போகும். தை மாசம் ஆரம்பிச்சு தொடர்ந்து தமிழ் நாட்டில் எங்கெங்கு ஜல்லிக்கட்டு நடக்குதோ அங்கெல்லாம் அந்த மாட்டைக் கொண்டு போவார்கள். அந்த மாட்டுக்கும் ‘ராஜ உபசாரம்’ நடக்கும். இதெல்லாம் மாடு பிடிபடுகிற வரைக்கும்தான். பிடிபட்டதும் அந்த மாட்டின் விலை மூவாயிரம் என்று குறைந்து போய்விடுகிறது. சில சமயம் கேரளாவுக்கு ‘கறி’க்காக விற்றுவிடுகிறார்கள்.
மாடுகளுக்குப் பச்சரிசி, சோளம், முட்டை, கோழிச்சாறு, தேங்காய் என்று வித்தியாசமான தீனி கொடுத்து ‘கும்’மென்று ஆக்ரோஷத்துடன் வளர்க்கிறார்கள். கூராகக் கொம்பு சீவுகிறார்கள். ஜல்லிக்கட்டு அன்று அதற்குத் தீனி வைப்பதில்லை. மாட்டின் மேல் விளக்கெண்ணெய் தேய்த்து, பசி பறக்க அவிழ்த்துவிடுகிறார்கள். அதற்கென்று கவனிக்க ஒரு ஆள். தினமும் சராசரியாக நூறு ரூபாய் வரை செலவழிக்கிறார்கள். இப்படி ஒரு மாடு மட்டும் வருஷத்திற்கு சுமார் 20 ஜல்லிக்கட்டுகளில் கலந்து கொள்கிறது. இந்த மாட்டை வைத்துக் கொள்வது கிராமத்திற்கு ‘கௌரவம்’.
ஜல்லிக்கட்டை நடத்தக் காரணம் இங்குள்ள முனியாண்டி கோயிலும், முத்தாலம்மன் கோயிலும்தான். அதற்கான திருவிழா ஒவ்வொரு வருஷமும் தை 3ந் தேதியன்று நடக்கிறது. அன்றைக்கே ஜல்லிக்கட்டு.
“எங்களுக்குத் தெரிஞ்சு பல வருஷமா ஜல்லிக்கட்டு நடக்குது. பல உயிர்ச் சேதங்கள் இருந்தாலும் இந்த ஊரைப் பொறுத்தவரை யாரும் அதைப் பொருட்படுத்தமாட்டாங்க. களத்தில் இறங்கிட்டா... வெற்றியைப் பத்தித்தான் கவலைப்படுவாங்களே தவிர உசிரைப் பத்தி நினைக்கமாட்டாங்க. இங்கேதான் அதிகமாக திருச்சி, புதுக்கோட்டை, மணப்பாறை என்று பல பகுதிகளிலிருந்து மாடுகள் வரும். முன்பு ஐநூறு மாடுகள் வரை வரும். இப்போ சராசரியா நானூறு மாடுகள் வருது” என்கிறார் ஊர் ‘மரியாதைக்காரரான’ ஜல்லிக்கட்டை நடத்துகிற குடும்பத்தைச் சேர்ந்தவரான குப்புசாமி.
தை 3ந் தேதி மதியம் 1 மணிக்கு முத்தாலம்மன் கோயிலுக்குப் போய் பூஜை நடத்திவிட்டு ஜல்லிக்கட்டு நடக்கும் மைதானத்துக்கு வருகிறார்கள். முதலில் ‘முனியாண்டி மாடு’ என்று கிராமத்துக் கோயிலுக்கென விடப்பட்டிருக்கும் மாட்டை அவிழ்த்துவிடுகிறார்கள். அந்த மாட்டை யாரும் பிடிப்பதில்லை. விட்டுவிடுகிறார்கள். அதற்கடுத்து வருகிற மாடுகளை நெருக்கிப் பிடிக்கத் தயாராகிறார்கள். அந்தந்த மாடுக்கான பரிசுப் பொருட்களாக, சைக்கிள், ஃபேன், டி.வி., கிரைண்டர், வேஷ்டி, துண்டு, வால் கிளாக் என்று பலதரப்பட்ட பரிசுகளை அறிவிக்கிறார்கள். ‘ஷீல்டும்’ கொடுப்பதுண்டு. சிலர் ஆயிரம் ரூபாய் வரை பணமும் அறிவிக்கிறார்கள்.
natpu“நன்றாகப் பாயக்கூடிய மாட்டுக்குக் கூடுதல் பரிசு அறிவிப்பார்கள். மாடும் சலசலப்புடன் கூட்டத்திற்குள் போகும். பிடிக்க கெடுபிடி ஜாஸ்தியாயிடும். காங்கேயக் காளை என்று மாட்டிலேயே இனங்கள் உண்டு. சரியான காளை மாட்டுடன் குறைஞ்சது இருபது முப்பது நபர்களாவது வருவார்கள். யாரிடமும் பிடிபடாத மாடு நேரே பக்கத்தில் இருக்கிற சிறு மலைக்கு ஓடிவிடும். பிறகு ரொம்ப நாட்கள் கழிச்சு அந்த மாடு கிராமத்துக்கு வந்து சேரும்...” என்று வேகத்துடன் சொல்கிறார் மாடு பிடிக்கிறவரான ராஜேஷ்.
“எப்படி மாடு பிடிப்பீர்கள்... அதற்கென்று தனி ‘ட்ரிக்’ இருக்கிறதா?” என்று கேட்டோம்.
“சின்ன வயசிலிருந்து ஜல்லிக்கட்டைப் பார்த்துப் பார்த்து பழக்கமாயிடும். நல்ல உடல் பலமும், மன பலமும் வேணும். மாட்டின் திமிலை இறுக்கிப் பிடிக்கணும். மாடு விடாமத் துள்ளும். கூடவே துள்ளணும். தைரியம் வேணும். ஒரு பையனை குத்துற மாதிரி மாடு போகுதுன்னா பக்கத்திலேயே போய் மாட்டின் கவனத்தைத் திசை திருப்பி பையனைக் காப்பாத்திருவோம். குறிப்பிட்ட தூரத்திற்குள் பிடிச்சால்தான் பரிசு. அதுக்கு மேலே போனால் பரிசில்லை. மாடு பிடிக்கப் போய் குத்து வாங்காதவங்க இருக்க முடியாது. என் உடம்பைப் பார்த்தீங்களா? தொடைப் பகுதியில் மாட்டுக் கொம்பு குத்திக் கிழிச்சிருச்சு. இப்போ மாடு பிடிக்கப் போகலையா? இருந்தாலும் ஜல்லிக்கட்டுன்னு வந்துட்டா இதெல்லாம் சகஜமான விஷயம்” என்று தனது காயத்தைக் காண்பித்தபடி சொல்கிறார் உதயன்.
“சில சமயம் மாடுகளுக்கு ஒருவித வேகம் வந்து வெறியாயிடும். ஜல்லிக்கட்டு நடக்கிறபோது நல்லா மாடுகளோட இயல்பு தெரிஞ்சவங்க ‘தொண்டர் படையா’ நிப்பாங்க. அவங்க, மாட்டால் குத்துப்பட்டவங்களை உடனே தூக்கிக் கொண்டு போயிருவாங்க. பிடிக்கிறவங்களை மாடு குத்தறதைவிட வேடிக்கை பார்க்கிறவங்களை குத்துறதுதான் அதிகம். சிலருக்குக் குடல் வெளியே வந்து சரிஞ்சிடும். இதுக்குன்னு ஆம்புலன்ஸ் ரெடியா இருக்கும். அந்த ஸ்பாட்டிலேயே இறந்தவர்களும் உண்டு. வருஷா வருஷம் இது நடந்தாலும், பிடிக்கிற கூட்டத்துக்குக் குறைவிருக்காது. பிடிகாரர்களுக்கு மாடு எந்தப் பக்கம் பாயும் என்பது தெளிவாகத் தெரியும். ஒருத்தரைக் குத்திவிட்டால், அந்த மாட்டைச் சேர்ந்து எப்படியும் அமுக்கிறுவாங்க. அலங்காநல்லூருக்கு வந்து ஒரு மாடு பிடிபடாமல் போறது பெரிய விஷயம்ங்க.. ஏன்னா, இந்த ஊர்லே பாதிப் பேரு மாடு பிடிக்கிறதில் கை தேர்ந்தவங்க” என்கிறார்கள் பல விழுப்புண்களைப் பெற்ற இளைஞர்களான ஈஸ்வரனும், சுரேஷும்.
natpu“அதே சமயத்தில் யாரும் மாடுகளின் கொம்பை, வாலைப்பிடிச்சு இழுக்க விடாமல் கவனமா இருப்போம். மாட்டுக்கும் பாதுகாப்பு கொடுப்போம். ஜல்லிக்கட்டு நடக்கிற அன்று எதுவும் அசம்பாவிதம் நடந்துடக் கூடாதுங்கிறதுக்காக அன்னைக்கு மதியத்துக்கு மேல் ஊர்லே ‘கரண்ட்’டை ‘கட்’ பண்ணிடுவாங்க.. மாட்டுக் கால் குளம்பு பட்டுச் சிலருக்குக் காயம்படும். ரெண்டு பேர் சேர்ந்து மாட்டைப் பிடிச்சால் பரிசு கொடுப்பாங்க. அதுக்கு மேலே சேர்ந்து பிடிச்சால் கொடுக்க மாட்டாங்க.. எவ்வளவோ ஊர்களில் ஜல்லிக்கட்டைத் தடை பண்ணனும்னு நிறுத்தியிருக்காங்க. இங்க மட்டும் இதுவரைக்கும் ஜல்லிக்கட்டு எங்க நினைவு தெரிஞ்ச வரைக்கும் நின்னதே இல்லைங்க. ஜல்லிக்கட்டு நடத்துறது ஐதீகம். அதை நடத்தாம இருந்தா நல்லதில்லை. அதுவே எங்களுக்குப் பெருமை.” என்று பெருமிதத்துடன் சொல்கிறார்கள் ஊர் இளைஞர்கள் கூட்டமாக.
வெளிநாடுகளிலிருந்து டூரிஸ்ட்கள் காலரியில் பாதுகாப்பாக உட்கார்ந்து மாட்டுக்கு முன் பாய்கிற இளைஞர்களின் வீரத்தை கேமராவில் அள்ளுகிறார்கள். இரைச்சல்கள் எல்லாம் முடிந்து புழுதி அடங்கின பிறகு ஜல்லிக்கட்டு மைதானத்தில் அங்கங்கே சிந்திக் கிடக்கும் சில இளைஞர்களின் ரத்தம்.
ஆனால் – அலங்காநல்லூர் மண்ணுக்கு இது புதித

No comments:

Post a Comment