murali83bdu@gmail.com. Powered by Blogger.

Sunday, September 26, 2010

தலித் அதிகாரிகள்: குறுக்கப்படும் சமூகநீதி

கட்டுரை
தலித் அதிகாரிகள்: குறுக்கப்படும் சமூகநீதி
ஸ்டாலின் ராஜாங்கம்

“நம் செயல் ‘எதிரி’களால் பாராட்டப்படுமெனில் நாம் தவறாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறோமென்று பொருள்” என்பது தமிழக மேடைகளில் புழங்கிவரும் புகழ்பெற்ற முழக்கம். தலித் வகுப்பைச் சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரியான உமாசங்கர் போலிச்சான்றிதழ் கொடுத்துப் பணியில் சேர்ந்ததாகத் திமுக அரசாங்கத்தால் குற்றம் சுமத்தப்பட்டுத் தற்காலிகப் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ள செயல் இந்து முன்னணித் தலைவர் ராமகோபாலனின் பாராட்டுக்குள்ளாகியிருக்கிறது. தலித் அதிகாரிக்கெதிராக, ஆதிக்கக் கருத்தியலுக்கு வலுவூட்டும் விதத்தில் செயல்பட்டதால் இந்து முன்னணியிடமிருந்து ‘பெரியாரின் சீடர், தலித்துகளின் தோழர்’ கருணாநிதியின் அரசாங்கத்துக்குக் கிடைத்துள்ள இப்பாராட்டுக் குறித்து அவரது தீவிர/வெகுசன இதழியல் ஆதரவு அறிவுஜீவிகள் என்ன நினைக்கிறார்கள் எனத் தெரியவில்லை.

இது பழிவாங்கும் நடவடிக்கை எனச் சொல்லியிருக்கிறார் உமாசங்கர். கடந்த மாதம் தேசியத் தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தின் தலைவருக்கு அனுப்பிய கடிதத்தில் தான் தற்காலிகப் பணிநீக்கம் செய்யப்பட்டதன் பின்னணியில் உள்ள காரணங்கள் குறித்து ஆதாரங்களுடன் விவரித்திருக்கிறார். மின்னஞ்சல் மூலம் பலருக்கும் படிக்கக் கிடைத்த அந்தக் கடிதம் அரசின் இரு முக்கிய அங்கங்களான மக்கள் பிரதிநிதிகளுக்கும் அதிகார வர்க்கத்துக்குமிடையேயான உறவுகளைத் தீர்மானிக்கும் அம்சங்கள் குறித்த சில அதிர்ச்சிகரமான உண்மைகளை அம்பலப்படுத்தியிருக்கிறது. தன் கடமையைச் செய்வதில் நேர்மையான அணுகுமுறைகளைக் கொண்ட அரசு அதிகாரி மக்கள் பிரதிநிதிகளின் கோபத்துக்கும் பழிவாங்கும் நடவடிக்கைகளுக்கும் இரையாவது தடுக்கப்பட முடியாதது போல் தோன்றுகிறது. குறிப்பிட்ட அந்த அதிகாரி தலித்தாக இருக்க நேர்வது இன்னும் சிக்கலானது.

1995ஆம் ஆண்டு அதிமுக ஆட்சிக் காலத்தில் மதுரை மாவட்டக் கூடுதல் ஆட்சியராக இருந்த உமாசங்கர் நீதிமன்றத்தில் அப்போதைய ஜெயலலிதா அரசாங்கத்தில் அமைச்சராக இருந்த செல்வகணபதி மீது சுமத்தப்பட்ட சுடுகாட்டுக் கூரை ஊழல் குற்றச்சாட்டு தொடர்பான ஆதாரங்களை அளித்ததன் மூலம் கவனம்பெற்றவர். அப்போதைய மதுரை மாவட்ட ஆட்சியர் பி.ஆர். சம்பத் கேட்டுக்கொண்டபடி தலித்துகளுக்கான சுடுகாட்டுக் கூரை அமைக்கும் பணியை விதிகளுக்கு முரணாகத் தனியார் ஒப்பந்ததாரர் ஒருவருக்கு அளிக்க மறுத்தார் உமாசங்கர். இது தொடர்பாக நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பொதுநல வழக்கொன்றில் உமாசங்கர் தாக்கல்செய்த அபிடவிட்டைப் பரிசீலித்த நீதிமன்றம் மத்தியப் புலனாய்வுத் துறையின் மூலம் இந்த ஊழல் குறித்த விசாரணையை மேற்கொள்ளுமாறு உத்தரவிட்டது. 1996 தேர்தலில் அதிமுக தோல்வியைத் தழுவியதற்கு அப்போது சுமத்தப்பட்ட சுடுகாட்டுக் கூரை ஊழல் குற்றச்சாட்டும் ஒரு காரணமாக அமைந்தது. இதற்காக அடுத்து வந்த திமுக அரசாங்கம் அவரை ஊழல் தடுப்பு, கண்காணிப்புத் துறையின் ஆணையராக நியமித்தது.

ஊழல் தடுப்பு, கண்காணிப்புத் துறை ஆணையராகப் பணிபுரிந்தபோது தென்னிந்தியக் கப்பல் போக்குவரத்துக் கழகத்தின் பங்குகளைத் திரும்ப அளிப்பது தொடர்பாக நடைபெற்ற முறைகேடுகளில் சுமார் 200 கோடி ரூபாய் அளவுக்கு ஊழல் நடந்திருப்பதை வெளிக்கொணர்ந்தார். தவிர கிரானைட் சுரங்கங்களைக் குத்தகைக்கு விடுவது தொடர்பாக நடைபெற்ற, அரசுக்கு சுமார் 1,000கோடி ரூபாய் இழப்பு ஏற்படுத்தியதாகச் சொல்லப்படும் முறைகேடுகள், உரிய விதிமுறைகளைப் பின்பற்றாமல் 45,000 டிவி ஆன்டெனாக்கள் வாங்கியது தொடர்பான முறைகேடுகள், தமிழ் நாடு வீட்டுவசதி வாரியத்தில் வீடுகள் ஒதுக்கப்பட்டதில் நடைபெற்றதாகக் கூறப்படும் முறைகேடுகள், மதுரை மேகமலையில் வனத் துறைக்குச் சொந்தமான 7106 ஏக்கர் நிலங்களை குறிப்பிட்ட தனிநபர் ஒருவருக்குச் சட்டவிரோதமான முறையில் பட்டா அளித்தது தொடர்பான குற்றச்சாட்டுகள் குறித்து விரிவான விசாரணைகளை மேற்கொண்டார். முன்னாள் முதலமைச்சருக்கும் முன்னாள் அமைச்சர்கள் பலருக்கும் முன்னாள் தலைமைச் செயலாளர் நாராயணன் ஐஏஎஸ் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் பலருக்கும் மேற்குறிப்பிட்ட முறைகேடுகளில் தொடர்பிருப்பதாகத் தன் விசாரணை அறிக்கையில் உமாசங்கர் குறிப்பிட்டார். தொடர்ந்து, 1999இல் புதிதாக உருவாக்கப்பட்ட திருவாரூர் மாவட்டத்தின் ஆட்சித் தலைவராகப் பணிபுரிந்தபோது சிறப்பாகச் செயல்பட்டதற்காகப் பாராட்டப்பட்ட உமாசங்கர், 2001இல் மீண்டும் அதிமுக ஆட்சிக்கு வந்தபோது புறக்கணிக்கப்பட்டு அதிகாரமற்ற பதவியில் அமர்த்தப்பட்டார். 2006இல் மீண்டும் பதவியேற்ற திமுக அரசாங்கத்தில் கருணாநிதியின் கனவுத் திட்டங்களை நிறைவேற்றுவதற்கான அதிகாரிகளின் பட்டியலில் இடம்பெற்று எல்காட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராக நியமிக்கப்பட்டார்.

இந்தக் கட்டங்களில் நேர்மையான அதிகாரியாக அவர் எடுத்த நடவடிக்கைகள்தாம் இப்போது அவர் பழிவாங்கப்படுவதற்குக் காரணம் எனச் சொல்லப்படுகிறது. முதல்வரின் துணைவியார் ராஜாத்தி அம்மாள் குறிப்பிட்ட ஒரு நிறுவனத்திடமிருந்து மீனவர்களுக்காக 45,000 வயர்லெஸ் கருவிகளை வாங்கச் சொல்லி வற்புறுத்தியதாகவும் உரிய விதிமுறைகளின்படி டெண்டர் கோரப்பட்டு அதனடிப்படையிலேயே வயர்லெஸ் கருவிகளை வாங்க முடியும் எனச் சொல்லி ராஜாத்தி அம்மையாரின் வற்புறுத்தலுக்குப் பணிய உமாசங்கர் மறுத்துவிட்டதாகவும் சொல்லப்படுகிறது. தவிர எல்காட் நிறுவனத்தில் நடைபெற்றதாகக் கூறப்படும் சுமார் 700 கோடி ரூபாய் ஊழல் உள்ளிட்ட கருணாநிதி குடும்ப உறுப்பினர்கள் சம்பந்தப்பட்ட பல்வேறு முறைகேடுகளை வலுவான ஆதாரங்களுடன் வெளிக்கொணர்ந்ததால் இப்போது கருணாநிதிக்கு வேண்டாதவராக ஆகியிருக்கிறார்.

மதுரை தினகரன் அலுவலக எரிப்புக்குப் பிறகு கருணாநிதியின் குடும்ப உறுப்பினர்களுக்குள் ஏற்பட்ட ‘கருத்து வேறுபாட்டை’த் தொடர்ந்து, கேபிள் தொழிலில் மேலாதிக்கம் பெற்றிருந்த மாறன் சகோதரர்களை ஒழித்துக்கட்டுவதற்காகத் தொடங்கப்பட்ட ‘அரசு கேபிள் நிறுவன’த்தின் நிர்வாக இயக்குநராக நியமிக்கப்பட்ட உமாசங்கர், சன் குழுமத்தின் சுமங்கலி கேபிள் நிறுவனம் அரசு கேபிள் நிறுவனத்தைச் சீர்குலைக்க முயன்றதற்கு எதிராகக் கடும் நடவடிக்கை எடுத்தார். அதன் காரணமாக மாறன் சகோதரர்களின் கோபத்துக்குள்ளானார். குடும்ப ஒற்றுமையின் விளைவாக அதிகாரத்தை மீளப்பெற்ற மாறன் சகோதரர்களுக்கும் உமாசங்கரின் மீதான பழிவாங்கும் அரசாங்கத்தின் நடவடிக்கைகளில் பங்கு இருப்பதாகச் சொல்லப்படுகிறது. வருமானத்துக்கு அதிகமாகச் சொத்துச் சேர்த்திருப்பதாகத் தன் மீது தொடரப்பட்ட வழக்கை விசாரிக்கத் தடை கோரி நீதிமன்றத்தில் உமாசங்கர் தாக்கல்செய்த மனுவில் கருணாநிதி குடும்பத்தினரின் முறைகேடுகளை அம்பலப்படுத்தியதால் பழிவாங்கும் நோக்கோடு தன்மீது அப்படியொரு வழக்குத் தொடரப்பட்டிருப்பதாகத் தெரிவித்தார். வழக்கை விசாரிக்க நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்ததைத் தொடர்ந்து சாதிச் சான்றிதழை மாற்றித் தலித் ஒருவருக்குக் கிடைக்க வேண்டிய வாய்ப்பைத் தட்டிப் பறித்ததாக அவசர அவசரமாகக் குற்றம் சுமத்தப்பட்டுத் தற்காலிகப் பணி நீக்கம் செய்யப்பட்டிருக்கிறார். தான் பழிவாங்கப்படுவதாக உமாசங்கர் சுமத்தியிருக்கும் குற்றச்சாட்டை நேரடியாக எதிர்கொள்ள முடியாத திமுக அரசாங்கம் பொய்க் குற்றச்சாட்டின் பேரில் அவரைத் தற்காலிகப் பணிநீக்கம் செய்துள்ளதாக விமர்சனம் எழுந்துள்ளது. திமுக அரசாங்கத்துக்கும் உமாசங்கருக்குமிடையேயான விவகாரங்கள் இப்போது பொதுச்சமூகத்தின் கவனத்துக்கு வந்துள்ளன. உமாசங்கர் முன்வைக்கும் குற்றச்சாட்டுகளுக்குத் திமுக அரசாங்கம் அளிக்கும் பதில் பொதுச்சமூகத்தின் அக்கறைக்குரியதாகும். ஆனால் அரசாங்கம் மௌனம் சாதிப்பதன் மூலமும் சப்பைக்கட்டுக் கட்டுவதன் மூலமும் மக்களை ஏமாற்ற முயல்கிறது.

1990இல் இந்திய ஆட்சிப் பணிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட உமாசங்கரின் சாதிச் சான்றிதழின் உண்மைத் தன்மையைப் பரிசீலித்து ஏற்றுக்கொண்ட பின்னரே தேர்வாணையம் பணி நியமனம் அளித்துள்ளது. தான் திட்டமிட்டுப் பழிவாங்கப்படுவதாகச் சொல்லும் உமாசங்கர் தன் மீதான குற்றச்சாட்டுகளை மத்தியப் புலனாய்வுத் துறை விசாரிக்க வேண்டுமெனக் கோரியிருக்கிறார்.

பல்வேறு தலித் அமைப்புகளும் ஊடகங்களும் ஜெயலலிதா உள்ளிட்ட எதிர்க்கட்சியினரும் உமாசங்கர் மீதானது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை எனக் கண்டனம் தெரிவித்திருக்கும் நிலையில் கருணாநிதி அரசு அவர்மீதான பழிவாங்கும் நடவடிக்கைகளைப் பிடிவாதமாகத் தொடர்ந்துகொண்டிருக்கிறது. உமாசங்கர் கிறித்தவ மதத்துக்கு மாறிய தலித், ஆகவே அவர் சட்டப்படி பிற்படுத்தப்பட்டவர் என்கிறது அரசுத் தரப்பு. இது தொடர்பாகத் தாழ்த்தப்பட்டோருக்கான தேசிய ஆணையத்தில் முறையிட்டிருக்கிறார் உமாசங்கர்.

உமாசங்கர் தொடர்பான சாதிச் சான்றிதழ் பிரச்சினை சமூகத்தில் சாதி என்பதன் பொருள் என்ன, அது எவ்வாறு அர்த்தப்படுத்தப்பட்டு வருகிறது போன்ற வினாக்களை எழுப்புகிறது. தலித் ஒருவர் இந்துவாக இருந்து கிறித்தவராக மதம்மாறி விடும்போது சட்டப்படி அவர் தலித் அல்லாதவராகிவிடுகிறார். ஆனால் சமூகத்தில் அவர் தலித்தாகவே கருதப்படுகிறார். அதனால்தான் தலித் கிறித்தவர்களைப் பட்டியல் இனமாகவே (எஸ்சி) கருத வேண்டுமெனத் தலித் கிறித்தவ அமைப்புகள் கடந்த 20 ஆண்டுகளாகப் போராடிவருகின்றன. இதைப் பற்றி விவாதிக்கும் துணிச்சல் பெற்ற தலித் அமைப்புகள் இல்லை. கடந்த 20 ஆண்டுகளில் இக்கோரிக்கை பெற்றுவிட்ட அழுத்தம் காரணமாகத் தலித் கட்சிகள் மட்டுமல்ல பல அரசியல் கட்சிகளும் தலித் கிறித்தவர்களைத் திருப்திபடுத்தும் முகமாக ஒரு கோரிக்கையாக இதையும் தேர்தல் அறிக்கைகளில் சேர்த்துவிட்டு வழக்கம்போல் கிடப்பில் போட்டுவிடுகின்றன. கடந்த தேர்தல் அறிக்கையில் இக்கோரிக்கையை முன்வைத்த கட்சிகளில் திமுகவும் ஒன்று. அப்படியிருக்கும்போது திமுக உண்மையில் உமாசங்கருக்காகப் போராடியிருக்க வேண்டும்.

அரசாங்கத்தின் வாதப்படி அவர் தலித் கிறிஸ்த்தவர். அதாவது பிற்பட்ட வகுப்பினராகக் கருதப்படுபவர். தலித்துகளுக்கான சலுகையை தலித் கிறித்தவர் ஒருவர் பெறுவதன் மூலம் தலித்தாக இருக்கிற இந்துக்களின் உரிமை பாதிப்புக்குள்ளாகிறது என்பதுதான் அரசின் வாதம். ஒரு வகையில் தலித்துகளின் மதச் சுதந்திரத்தைக் கட்டுப்படுத்தும் செயல் இது. இந்து மதத்தில் நிலவும் தீண்டாமையை எதிர்த்தும் கல்வி வாய்ப்புகளைப் பெருக்கிக்கொள்ளவுமே பெரும்பாலான தலித் இந்துக்கள் மதம் மாற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இது போன்ற ஒரு சட்டம் கல்வி, வேலைவாய்ப்புகளைக் கருத்தில்கொண்டு தலித்துகள் தீண்டாமையை ஏற்று, இந்து என்னும் அடையாளத்தைப் பேண வேண்டிய கட்டாயத்தை உருவாக்குகிறது. உமாசங்கர் விவகாரத்தை முன்வைத்துத் தலித் அமைப்புகள் இது பற்றி விவாதிக்க வேண்டியது அவசியம் எனத் தோன்றுகிறது.

தலித்துகளுக்கான அரசியல் விழிப்புணர்ச்சிக்குத் தலைமையேற்பதில் ராணுவ வீரர்கள், அரசு ஊழியர்களுக்கு முக்கியப் பங்கு எப்போதுமே இருந்துவந்திருக்கிறது. அதிலும் வட்டாரச் சாதியினரால் ஆளப்படும் மாநில ஆட்சியின் ஊழியர்களைவிட மத்திய அரசின் ஊழியர்களாகச் செயல்படுபவர்கள் தலித் பிரச்சினையைத் துணிச்சலாக எதிர்கொள்ள முடியும். இன்றைக்கும் ரெயில்வே உள்ளிட்ட மத்திய அரசு அலுவலகங்களில் பேணப்படும் அம்பேத்கரின் அடையாளம் மாநில அரசுத் துறை அலுவலகங்களில் இல்லை. தலித் அதிகாரிகள் சமூகச் செயல்பாட்டில் ஈடுபடும்போதெல்லாம் எல்லா ஆட்சியாளர்களாலும் இவ்வாறே அலைக்கழிக்கப்படுகின்றனர். தமிழக அரசுத் துறைகளில் தலித்தரப்புத் தலையீட்டைக் கோரிவந்த ப. சிவகாமி, கிறிஸ்துதாஸ் காந்தி ஆகிய அதிகாரிகள் முன்பு அதிமுக ஆட்சியில் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டனர். இப்போது உமாசங்கரைத் திமுக பணிநீக்கம் செய்திருக்கிறது.

கடந்த சில வாரங்களுக்கு முன் திருநெல்வேலி அண்ணா பல்கலைக் கழகத் துணைவேந்தர் காளியப்பனை அத்தொகுதியின் திமுக எம்ஏல்ஏ மாலை ராஜா என்பவர் தாக்க முயன்றுள்ளார். கல்லூரிகளையும் மாணவர்களையும் கையாளும் திறனுடைய கல்வியாளர் ஒருவரின் அடையாளம் சாதித் செல்வாக்காலும் கந்துவட்டிப் பணத்தாலும் அதிகாரத்திற்குரியவராக மாறிவிட்ட அரசியல்வாதியின் முன் சிறுத்துப்போகிறது. அதிகாரத்தின் கருணைக்காக அரசியல்வாதியைக் கெஞ்சி நிற்கும் கல்வியாளர்களே உயர்பதவிக்கு வரும்போது அவர்களிடம் தங்களுக்கான கௌரவத்தை எதிர்பார்ப்பவர்களாக அரசியல்வாதிகள் மாறிவிடுகிறார்கள். தமிழகத்தின் பெரும்பான்மையான துணைவேந்தர்களும் பல்கலைக்கழகப் பேராசிரியர்களும் ஆளும் கட்சியினரால் நியமிக்கப்படுகையில் அவர்களைப் பாராட்ட, கௌரவிக்க விதி மீறிய முன்னுதாரணங்களை ஏற்படுத்தித் தருகின்றனர். விதிமீறல்களே இயல்பாகிவிட்ட நிலையில் விதிமுறையைக் கையாளும் ஒருவர் ‘இயல்பற்றவராகி’விடுகிறார். அவ்வாறு துணைவேந்தர் பட்டமளிப்பு விழாவில் மாலை ராஜாவுக்கு அங்கியளித்து மரியாதை தராத நிலையில் அவரைத் தாக்குகின்றனர்.

துணைவேந்தர் தலித் என்பதால் மட்டும் இது சாதி சம்பந்தப்பட்டது என்று சொல்லவில்லை. ஆனால் அவர் தலித் என்பதும் இங்கு முக்கியம். திமுக மாலை ராஜாவைக் கட்சியைவிட்டு நீக்கவோ கண்டிக்கவோ செய்யாது. ‘மறவர் என்னும் ஆதிக்கச் சாதியைச் சேர்ந்த எம்எல்ஏவைக் கண்டித்துக் கல்வித் துறையைக் காப்பாற்றி ஆகப்போவது என்ன?’ இவ்விடத்தில் துணைவேந்தர் மறவர் சாதியாக இருந்து தலித் எம்எல்ஏ ஒருவர் அவரைத் தாக்குவது பற்றி நாம் கற்பனையும் செய்ய முடியாது. இப்பிரச்சினையில் இதைத்தான் சாதிய நோக்கு என்கிறோம்.

தலித் ஒருவர் அதிகாரியாய் மாறினாலும் அவர் சுயமாகச் செயல்படக் கூடாது என்றே அதிகார வர்க்கத்தினர் எதிர்பார்க்கின்றனர். இதில் தலித் தனித்துவமாகச் செயல்படும்போது வெளியேற்றப்படுவதும் சாதகமாகச் செயல்படும்போது அவரின் தலித் அடையாளத்தைச் சுரண்டுவதும் திராவிடக் கட்சிகளின் நடைமுறையாக இருந்துள்ளது. 1970களில் திமுக தலித்துகளுக்கான நிதியை வேறு வழிகளில் செலவழிக்கிறது என்று சொன்னபோது சத்திய வாணிமுத்து வெளியேற்றப்பட்டார். அவர் தாழ்த்தப்பட்டடோர் முன்னேற்றக் கழகம் என்ற கட்சியை ஆரம்பித்தபோது சத்தியவாணிமுத்துவுக்கு எதிராக முதன்முதலாகச் சென்னை மாவட்டத்தில் தலித் வகுப்பைச் சேர்ந்த இளம்பரிதி என்பவரைத் திமுக முன்னிறுத்தியது. இப்போது உமாசங்கரைப் பணிநீக்கம் செய்த அதேவேளையில் கிறிஸ்துதாஸ் காந்திக்குத் தலைமைச் செயலாளர் பொறுப்பு அளித்துள்ளது. மேலும் மத்திய அமைச்சர் ஆ. ராசாமீதான ஸ்பெக்ட்ரம் ஊழல் குற்றச்சாட்டு எழுப்பப்பட்டபோது அவரது தலித் அடையாளத்தைக் கேடயமாக்கினார் கருணாநிதி. உமாசங்கருக்கு மறுக்கப்பட்ட தலித் அடையாளம் ஊழல் கறைபடிந்த அமைச்சர் ஆ. ராசாவுக்குப் பொருந்துவது எவ்வாறு? ராசாவின் தலித் அடையாளம் தலித்துகளுக்காகப் பயன்படுவதைவிடக் கருணாநிதி குடும்பத்திற்குப் பயன்படுகிறது. உமாசங்கரின் அடையாளம் கருணாநிதி குடும்பத்திற்குப் பயன்படாமல் தலித்துகளுக்குப் பயன்படுகிறது. இங்கேதான் ஆ. ராசா ஆசீர்வதிக்கப்படுவதும் உமாசங்கர் பழிவாங்கப்படுவதும் நடக்கின்றன.

துணைவேந்தர் காளியப்பனை எம்எல்ஏ தாக்க முயன்றது எஸ்சி/எஸ்டி வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ்த் தண்டனைக்குரியது. இச்சட்டம் முழுமையாகப் பயன்படுத்தப்படுவதில் இந்தியா முழுக்கச் சுணக்கம் இருக்கிறது. சில மாதங்களுக்கு முன் தமிழகம் வந்து சென்ற தேசிய எஸ்சி/எஸ்டி ஆணையம் தமிழக அரசை இக்காரணத்திற்காகக் கண்டித்தது என்பது குறிப்பிடத்தக்கது. எஸ்சி/எஸ்டி ஆணையத்தையும் கருணாநிதி மிரட்டும் அறிக்கையை வெளியிட்டதோடு திமுக சார்பாக எதிர்ப்புச் சுவரொட்டிகள்கூட ஒட்டப்பட்டன. 2006ஆம் ஆண்டில் மகாராஷ்டிரா மாநிலம் கயர்லாஞ்சியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தலித்துகள் நால்வர் கொல்லப்பட்டது தொடர்பான வழக்கில் கடந்த 14.7.2010இல் தீர்ப்பு வழங்கிய மும்பை உயர்நீதிமன்றம் அக்கொலை எஸ்சி/எஸ்டி வன் கொடுமை வழக்கிற்குள் வராது என்று சொல்லியுள்ளது.

முன்பு திமுக அமைச்சர் சுரேஷ்ராஜன்மீது எஸ்சி/எஸ்டி வன்கொடுமைச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை தேவை என்ற கோரிக்கை எழுந்தபோது அவர் திராவிட இயக்கத்தவர் என்பதை மட்டுமே கருணாநிதி சுட்டிக்காட்டினார். திராவிட இயக்கம் இல்லாத உத்திரப் பிரதேசத்தில் மாயாவதி என்ற தலித் பெண் முதல்வராக வர முடிவதும் திராவிட இயக்கம் செல்வாக்குப் பெற்றுத் திகழும் தமிழகத்தில் பாப்பாப்பட்டியிலும் மேலவளவிலும் தலித் ஒருவர் பஞ்சாயத்துத் தலைவராக முடியவில்லை என்பவையே நிதர்சனங்கள். திராவிட அடையாளத்தைப் பயன்படுத்துவது கருணாநிதியின் ஒருவகைத் தந்திரமே. கடவுள், மனுதர்மம், இந்து மதம் போலவே நாத்திகம், சமூகநீதி, திராவிடம்கூடச் சாதியைக் கடந்தவையாக இருந்துவிடவில்லை என்பதே அனுபவம்.

தலித் அமைப்புகள் எழுச்சி பெறுவதற்கு முன்பு இருந்த நிலைமையே மீண்டும் உருவாகியிருப்பதாகத் தோன்றுகிறது. தலித்துகளின் உரிமைகளுக்கான போராட்டங்களும் அழுத்தங்களும் குறைந்துவிட்டன. திராவிடக் கட்சிகளின் தலித் விரோதம் குறித்துப் பேசியவர்களும் எழுதியவர்களும் அதிகார அரண் மனையின் அடுக்களைகளில் பூசனம் பிடித்துக்கிடக்கிறார்கள். கட்சிகளோ ஏதாவது ஒரு கூட்டணியில் சேர்ந்து தங்கள் இருப்பைத் தக்கவைத்துக்கொள்ள ஓடிக்கொண்டிருக்கின்றன.

No comments:

Post a Comment