murali83bdu@gmail.com. Powered by Blogger.

Thursday, September 30, 2010

கவிஞர் ரவிதாசனின் அற்புதமான வரிகள்..

கவிஞர் ரவிதாசனின் அற்புதமான வரிகள்..


குங்குமம் வழியில்....

'' என்
ஒவ்வொரு கவிதைப் புத்தகத்திற்கும்
இலவச இணைப்பாக
லட்டு ஒன்று தரலாமென
நினைக்கிறேன்
லட்டு ஒன்றுக்கு
புத்தகம் இலவசமெனச்
சொல்லிவிட்டால்
என்ன செய்வது?''

--

முற்போக்கு

ஒரு முற்போக்கு
இயக்கத்தவர்
மிகுந்த கோபத்துடன்
'விதவை மறுமணம்' பற்றி
அவசரம் அவசரமாகக்
குறும்படம் எடுத்தனர்.

நட்பிருந்தாலும்
தகுதியான விதவைக்கு
தாலிகட்டாத
'சபைப்பேச்சு' மனிதர்கள்.

--

பொய் கேள்வியும்
பொய் பதிலும்

தமிழன் ஒருவன்
ஆர்வமாய் என்
சாதியை கேட்டான்.

'தமிழன்' என்றேன்
நான்.

தமிழன் என்பது
சகலர்க்கும் தெரிந்த மெய்
சாதியை சொல்
என்றான் அவன்

'முதலியார்' என்றதும்
முழு சம்மதமாய் -
ஓராண்டு கழித்து
ஓடிவந்து கேட்டான்
'நீங்கள் வன்னியராமே!'

--

மனிதர்கள்

இந்து வெறியன்
மசூதியை இடிக்க,

இஸ்லாம் வெறியன்
எதிரி என்று தாக்க,

இடையில் மடிந்தனர்
இவை எதுவும்
தெரியாத
'மனிதர்கள்!'

--
விலகல்

சாதாரணமானவளாய்
நான் நினைத்துவிடாமல்
இருக்க

நீ
ஒவ்வொரு முறையும்
கால்மணி நேரமாவது
காக்க வைக்கிறாய்!

நீ 'கர்வக்காரியோ'
என்றெண்ணி

நான்
கொஞ்சம் கொஞ்சமாக
விலகி போகிறேன்!

--

செவி வழியில்

நானும் கருப்பு
அவனும் கருப்பு

நானும் சைவம்தான்
அவனும் சைவம்தான்

அவனை போலவே
எனக்கும் உறுப்புக்கள்

நான் படித்த பள்ளியில் தான்
அவனும் படித்தான்

தேநீரைக்கூட
அண்ணாந்து குடிக்கும்
அர்த்தமுள்ளவர்கள் நாங்கள்
என்றாலும்

நாங்கள் கேட்டுக் கொண்டால்தான்
தெரிகிறது
எங்கள் சாதி.

--

உண்மைதான்

''மரணம் விரைவில் வருகிறது
மனம் திரும்புங்கள்''என்றார்
பாதிரியார்

மனம் திரும்பினோம்;

அலையடித்துச் சர்ச்சில்
அழிந்து போனார்கள்
அறுபது பேர்!

--

கவிதை

புரியக்கூடாது எனச்
சபதமெடுத்து
என் நண்பர்
புதுக்கவிதை எழுதினார்

புரியவில்லை என்றேன்
மீண்டும் படி என்றார்

புரியவில்லை என்றேன்
மீண்டும் படி என்றார்

புரியவில்லை என்றேன்
மகிழ்ச்சியோடு சொன்னார்

'எது புரியவில்லையோ
அதுதான் நல்ல கவிதை' என்று.

--

திருமணதிற்கு முன்..

விரும்புகிறாள் என
உறுதியாகத் தெரிந்தும்

யாருமில்லையென
என் இருவிழிகள்
அறிந்தும்

''தொட்டுத் தொலையகூடாதா'' என
அவள்
உதடுகள் சைகையில் உலறியும்

காவல் காத்து நிற்கிறது
பாழாய்ப் போன
என் 'பண்பாட்டுக் கூச்சம்'

--

அன்றும் இன்றும்

அன்று
கொலையும் செய்தாள்
பத்தினி

அந்நியன் தொட்டானென்று!

இன்று
கொலைகள் செய்தாள்
பெண்மணி

கணவன் தொடுகிறானென்று !

--

தீத்துண்டுகள்

மதுக்கடை அதிபர்
திருமண மண்டபம் கட்டினார்

மது அருந்த வேண்டாம் என்ற
அறிவிப்புடன்..

--
நான்கு பூனைகள்
குறுக்கே ஓடியும்

விழிப்புணர்வுடன் நடந்தேன்
ஒன்றும் நடக்கவில்லை.

--
ஒரே அனுபவத்தை
ஆயிரம் முறை பட்டும்
திருந்தி
நிமிர்ந்த போது
எனக்கு
வயது முப்பது.

--

காந்தீயம்

இளைய தலைமுறை
அறியவில்லையென
விசுவாசமுள்ள
தொண்டர் ஒருவர்
காந்தி படத்தை
மாட்டி வைத்திருந்தார்..

பிராந்திக்கடையில்!

--

பசி நல்லிணக்கம்

பல கடவுளை
நம்பி
பயனில்லை என
வெம்பி

ஒரே ஏசுவை
நம்பி

தன் பெயரை
மாற்றிக்கொண்டாள் சரஸ்வதி

நேற்று
அப்துல் காதர் தந்த
ஆயிரம் கடனை
அடைப்பதற்காக

முன்னூறு ரூபாய்
அதிகமாய் உள்ள
முனுசாமி கம்பெனியில்
சேர்ந்து

வெள்ளிக்கிழமை தோறும்
திருப்பதி ஆண்டவருக்குத்
தீபம் காட்டும் அவளிடம்

''மத நல்லிணக்கம்
தெரியுமா'' என்றேன்

அது
''பசியை விடவும்
பெரியதா'' என்றாள்.

No comments:

Post a Comment